கவிதை உலகத் தலைவர் நம்தாத்தா!

பெரியார் தாத்தா நம்தாத்தா
பெயர்முக வரியைத் தருந்தாத்தா!
அரிதாய் நமக்குக் கிடைத்திட்ட
அறிவுப் பெட்டகம் நம்தாத்தா!
பட்டறி வாளர் நம்தாத்தா
பகுத்தறி வுக்கடல் நம்தாத்தா!
தொட்டது துலங்கச் செய்யவழித்
துணையாய் இருப்பவர் நம்தாத்தா!
பழமை எதிர்ப்பவர் நம்தாத்தா
புத்தறி வியலார் நம்தாத்தா!
கிழமை இராப்பகல் பாராமல்
திரிந்தே உழைத்தவர் நம்தாத்தா!
எண்ணம் சொல்செயல் யாவிலுமே
ஏற்றம் மிக்கவர் நம்தாத்தா!
உண்மை மட்டுமே உரைத்துயிர்த்த
உலகத் தலைவர் நம்தாத்தா!
தீந்தமிழ் காத்தவர் நம்தாத்தா!
திருக்குறள் காத்தவர் நம்தாத்தா!
சாந்தியும் அமைதியும் காத்திங்கே
சமத்துவம் கண்டவர் நம்தாத்தா!
கருணை மிக்கவர் நம்தாத்தா!
கடமை ஆற்றலர் நம்தாத்தா!
பெருமை எனுறும் போற்றாத
பெரியார் தாத்தா நம்தாத்தா!
பெண்கள் உரிமை பெறுவதற்குப்
பெரிதும் உழைத்தவர் நம்தாத்தா!
மண்ணின் மானம் காத்திடத்தன்
மானம் பாரா நம்தாத்தா!
கட்டுப் பாடு காப்பதுநம்
கடமை என்றவர் நம்தாத்தா!
இட்ட பணியைத் தொடர்ந்திடவே
எழுச்சியைத் தருபவர் நம்தாத்தா!
– கவிஞர் பெரு.இளங்கோ


