குழந்தைப் பாடல்கள் நூறு
நூல் பெயர்: அமுதமொழி (சிறுவர் பாடல்கள்)
ஆசிரியர்: பி.சீ.நல்லரசன்
பக்கங்கள்: 120 | விலை: ரூ.120
வெளியீடு: பாவை பதிப்பகம்
எண்: 214, நேதாஜி சாலை,
மஞ்சக்குப்பம், கடலூர் – 1.
தொலைப்பேசி:
04142 – 210664, 9790519966, 9080493121
ரு மனிதனின் வளர்ச்சியில் பல பருவங்கள் இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த – ரசிக்கக்கூடிய – ‘மீண்டும் கிடைக்குமா’ என்று ஏங்கக்கூடிய பருவம் குழந்தைப் பருவம்.
குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். எந்த ஓர் எதிர்பார்ப்பும் சுயநலமும் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக இருப்பது மட்டும் அல்ல; குழந்தைப் பருவத்தில் கற்ற பல பாடங்கள் எதிர்காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும்.
குழந்தைகளிடம் பேசும் போதும் கற்றலைச் சொல்லும் போதும் மிக எளிமையாக அவர்களுக்குப் புரியும் வண்ணம் இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் விரும்பும் பாடல். மூலமாகச் சொல்வது குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அப்படி சிறுவர் பாடல்கள் மூலம் அமுதமொழி என்னும் புத்தகத்தை பி.சீ.நல்லரசன் அவர்கள் இயற்றியுள்ளார்.இது அவரின் ஏழாவது புத்தகம் ஆகும்.
இந்தப் புத்தகத்தில் 100 பாடல்கள் உள்ளன. அனைத்துப் பாடல்களும் மிக எளிமையாகவும் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் சமுதாயச் சிந்தனை கொண்ட பாடல்களாகவும் உள்ளன.
முதலில் அமுதமொழி என்னும் தலைப்பில் தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்.
‘கற்க வேண்டும்’ என்னும் தலைப்பில் குழந்தைகள் பள்ளிக்குத் தவறாமல் செல்ல வேண்டும் என்ற கற்றலின் அவசியத்தை உணர்த்தும் பாடல்.
இந்த உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் கல்விச் செல்வம். அந்தக் கல்வியைக் கற்று, குழந்தைகள் உயர வேண்டும்; காலத்தை வீணடிக்கக் கூடாது.
இன்று குழந்தைகள் வண்ண வண்ணக் காகிதங்களில் அடைத்து விற்கக் கூடிய – வயிற்றுக்கு ஒவ்வாத – தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களையும், குளிர்பானங்களையும் விரும்புகிறார்கள்.
கெட்ட குளிர்பானங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காதே – கெட்டுவிடும் வாழ்க்கை. அதற்குப் பதிலாக இளநீர், பழச்சாறு போன்ற இயற்கைப் பானங்களைக் குடிக்க வேண்டும்.
அறிவியல் வளர்ச்சியில் கணினி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணினியைப் பற்றிய பாடல் உலகம் முழுவதும் நம்மிடம் ஒற்றை நொடியில் காட்டும்; கோடி கோடி செய்திகள் கொட்டிக் கிடக்கும்; வியக்க வைக்கும் கணினியை அறிவியலே தந்தது.
‘நூலகமாம் நூலகம்’ நூல்கள் நிறைந்த நூலகம்.
அறிவைப் பெருக்கும் நூலகம்; ஆற்றல் கொடுக்கும் நூலகம்; அறிஞர் பலரும் கற்றது; அறிவு கோடி பெற்றது.’
பள்ளி செல்லும் குழந்தைகள் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். நகத்தை அளவாய் வெட்ட வேண்டும். நல்ல ஆடை அணிய வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும், சுத்தம் இல்லாத பண்டத்தைத் தொடக்கூடாது.
இது போன்ற நூறு பாடல்களை குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார் இந்நூலாசிரியர்.
இந்தப் புத்தகம் சின்னக் குழந்தைகளுக்காக என்று சொல்லப்பட்டிருந்தாலும் பாடல்கள் அனைத்தையும் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறது.
பழையனவற்றை நினைவுகூர வைப்பதுடன், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளையும் தெரிவிக்கிறது.


