இங்லீஷ் நல்லா பேச, எழுத … என்ன வழி?(இதுதான் ஆங்கிலம் )

எம் ஆர் மனோகர்
மாணவ, மாணவியர் பலரும் என்னிடம் அடிக்கடி கேட்ட கேள்வி – “Sir, நான் நல்லா இங்லீஷ்ல பேசணும், எழுதணும், என்ன வழி?”
பெரியார் பிஞ்சுகளே! நான் அவர்களுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும், “கூச்சப் படாம நண்பர்களோட சகோதர, சகோதரிகளோட அடிக்கடி இங்லீஷ்ல ஏதாவது பேசிக்கிட்டே இருங்க. சுட்டி டி.வி. போலவே இங்லீஷ் கார்ட்டூன் படங்கள் நிறைய வருது. அதையெல்லாம் தொடர்ந்து பாருங்க. சப் – டைட்டில்களோட தமிழ்ப் படங்கள் டி.வி.யில நிறைய வருது. காட்சிகளைப் பார்த்துக்கிட்டே அதையெல்லாம் படிங்க. டி.வி.யில இங்லீஷ் நியூஸ் கேளுங்க. நியூஸ் பேப்பர்கள்ல சின்னச் சின்ன செய்திகளைப் படிங்க. “அதெல்லாம் நாங்க வளர்ந்த பிறகு செய்யறோம்”னு மட்டும் சொல்லாதீங்க. இப்பவே ஆரம்பிங்க. பிரமாதமா பேசவும் எழுதவும் கத்துப்பீங்க!
சரி. இந்த மாசம் புதுசா கொஞ்சம் கத்துக்கலாம் வாங்க!
- Prepone – இப்படி ஒரு வார்த்தையே கிடையாது. பலர் உபயோகிக்கிறார்கள். அது தவறு. தேர்வுகள் தள்ளிவைக்கப் பட்டால் postponed. குறிப்பிட்ட தேதிக்கு முன்னாலேயே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டால் “Our exams have been advanced” என்று கூற வேண்டும். Postponed-க்கு எதிர்ப்பதம் அல்ல prepone.
- Repeat again என்று சொல்வது தவறு. Repeat போதும்.
- “உன் வயசு என்ன?” – தமிழில் சரி. ஆனால், ஆங்கிலத்தில் உரையாடும் பொது “How old are you?” என்றே கேட்க வேண்டும். “What is your age?” என்று அல்ல.
- “என் ஃபிரண்ட் ஹைட்டா இருப்பா” என்று சொல்லாதீர்கள். “Tall”ஆக இருப்பா என்று சொல்லுங்கள்.
- விக்கல், ஏப்பம், குறட்டை – இவற்றுக் கெல்லாம் ஏற்கெனவே கற்றுக் கொண்டீர்கள். தும்மலுக்கு? Sneeze.
“Don’t Sneeze near the dining table.” “Use handkerchief after Sneezing” என்றெல்லாம் சொல்லலாம்.
- “Wipe your nose” என்றால் “மூக்கைத் துடைத்துக்கொள்” என்று அர்த்தம். ஜாடையாகச் செய்து காட்டாதீர்கள்.
- ‘Due to’ வில் எந்த வாக்கியமும் ஆரம்பிக்கக்கூடாது. “The cancellation of the match was due to heavy rain” என்பது சரி.
“Due to heavy rain the match was cancelled” என்பது தவறு.
- “அய்ஸ் கட்டி”க்கு “hunk of ice” என்று கூறலாம். துண்டு கேக்கை “hunk of cake” என்றும் கூறலாம். “Piece of ice”, “Piece of cake” என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
- எப்போதுமே “thanks” என்று கூறுவது படு போர். “Very kind of you”, “So nice of you” என்றெல்லாம் சொல்லலாம். “Glad to meet you” என்று யாராவது சொன்னால் திருதிருவென்று விழிக்காமல் “So am I! அல்லது “Me too!” – “The pleasure is mine” என்றெல்லாம் சொல்லலாம். யாராவது பாராட்டி விட்டாலோ, பரிசளித்தாலோ “I am honoured” என்று பணிவாக நன்றி தெரிவிக்கலாம்.
- “back side” என்பது அருவருப்பான usage. பல ஆசிரியர்களே “Boys back side! keep quiet!” என்று உறுமுவார்கள். “Boys at the back!” என்பதே சரி. “பின்னால்/பின்புறம் கையொப்பம் போடு என்றால்” “Please sign at the back” தான் சரி. “Please Sign backside” என்றால் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்கள் சிரிப்பார்கள்.
- “என்னைப் பொறுத்த வரை” என்றால் “In my opinion” என்று ஆரம்பிக்க வேண்டும். “According to me” அல்ல. அது மற்றவர்களுக்காக மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும். “According to him…” “According to her” என்பது சரி. “In his opinion”, “In her opinion” என்றெல்லாம் சொல்லக்கூடாது.
- வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் “I am suffering from bowel disorder” என்று நாகரிகமாகக் கூறலாம். லூஸ் மோஷன் ‘Loose motion’ என்பது அநாகரிகம். புரியாதவர்களுக்கு “dysentery” (டிசென்ட்ரி) என்றாவது சொல்லலாம்; அல்லது ‘diarrhoea’ (டயரியா) என்றும் சொல்லலாம். “லூஸ் மோஷன்” கேட்பவர்களை முகம் சுளிக்கச் செய்யும். தவிர்க்கலாமே?<
(இன்னும் நிறைய – அடுத்த மாதம்)


