தையல் குருவி (TAILOR BIRD)(பறவைகள் அறிவோம்-20)

பி இளங்கோ

பொதுவாக, பறவைகள் நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலாவைப் போல வண்ணச் சிறகை விரித்துப் பறந்து, மண்ணைப் பசுமைப்படுத்துகின்றன. காற்றின் சுவட்டைக் கணத்தில் பதித்தே கண்டம் விட்டுக் கண்டம் பறந்து அந்நிய நாட்டில் கண்ணியத்துடனே அடைக்கலம் புகுந்து, சென்ற நோக்கம் நிறைவடைந்த பின்னே நெஞ்சம் நிறைய குஞ்சுகளை அணைத்துக் கொண்டு மீண்டும் தாயகம் நோக்கிப் பறந்து வருகின்றன. மேலும் பறவைகள் ஒவ்வொன்றும் சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளன.
பொறுமை காத்து உறுமீன் தேடிக்கொத்தும் பழக்கம் கொக்கிற்கு உண்டு. தன் இனத்தைக் கூட்டி இனிமை பகிரும் குணத்தைக் காகம் கரைந்தே அழைக்கும். உருவம் சிறியதாக இருந்தாலும் பின்னால் பறக்கும் தனிச்சிறப்பை உடையது ஹம்மிங் பறவை. அதிக எடையின் காரணமாக பறக்க முடியாத பறவையான நெருப்புக்கோழி ஓடியே வெகுதூரம் கடக்கின்றது. திசையை உணர்ந்து விசையைக் கூட்டிப் பறக்கும் திறனைப் பெற்றுள்ளன மாடப்புறாக்கள். ஆனால், அத்திறமையை லாவகமாகப் பயன்படுத்தி பந்தயப் புறாக்களாக மாற்றிய திறமை மனிதனையே சாரும். நிறத்தின் குறையைக் குரலால் போக்கி இசையால் உலகை நிரப்புகின்றன குயில்கள். இரவில் விழித்து எலிகளைத் துரத்தி பயிரைக் காக்கின்றன கூகைப் பறவைகள். இதன் மூலம் விவசாயிகளின் நண்பனாகத் திகழ்கின்றன பறவைகள்.
நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் பலவகையான பறவைகள் வாழ்கின்றன. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல, பறவைகள் கட்டுகின்ற கூடுகளும் வித்தியாசமானவை தான். உணவுக்கு அடுத்தபடியாக பறவைகளுக்கு அவசியமானவை கூடுகள். வாழும் இடத்திற்குத் தக்கவாறு பாதுகாப்பான இடங்களை முதலில் தேர்ந்தெடுத்த பின்னர், கூடுகட்டத் தேவையான பொருட்களை அருகிலேயே சேகரிக்கின்றன. சில நேரங்களில் அதிகத் தொலைவு பயணம் செய்து, தகுந்த கூடுகள் கட்டுகின்றன. அதிக வெப்பம் மற்றும் அதிகக் குளிர் நிலவும் புறச்சூழ்நிலைகளிலிருந்து காத்துக்கொள்ளவும், முட்டையை அடைகாக்க குறிப்பிட்ட அளவில் வெப்பநிலையை நிலவச் செய்யக் கூடு உதவுகிறது.
நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சிறிய அலகைக் கொண்டு அழகிய கூடுகளைக் கட்டுவதில் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தாம்! இருவாய்ச்சிப் பறவை தங்களது கூடுகளை வளர்ந்து வான் நோக்கி உயர்ந்து நிற்கும் மரப்பொந்திலும், கழுகுகள் உயரமான மலைகளில் உள்ள பாறையிடுக்குகளிலும், நீர் நிலைப் பறவைகள் தண்ணீரில் மிதக்கும் வகையிலும் சில பறவைகள் கட்டாந் தரைகளிலும், தூக்கணாங் குருவி போன்ற பறவைகள் மரங்களின் நுனிப்பகுதியில் தொங்கும் கூட்டினைக் கட்டியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அந்த வரிசையில் இந்த இதழில் நாம் காண இருக்கும் பறவை தையல் குருவி (TAILOR BIRD). இப்பறவையின் கூடு இயற்கைக்கு எந்தவிதமான இடைஞ்சலையும் தராமல் சற்றே அகலமாக உள்ள இலைகளை ஒன்றோடு ஒன்றுஇணைத்து, இலைகளில் சிறு சிறு துவாரங்கள் இட்டு, அதன் வழியே நார் மற்றும் சிலந்தி வலையைக் கொண்டு தைத்து, மிக அழகான கூட்டைக் கட்டுவதால் தையல் குருவி எனப் பெயர் பெற்றது.
இப்பறவைகளில் 13 வகையான இனங்கள் ஆசியா முழுவதும் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் ஊட்டிச் சின்னச் சின்ன “க்வீ … க்வீ” என குரல் எழுப்பிப் பாடும் இந்தப் பறவையின் பின்னால் மிதந்து போகும் இசைக் கீதத்தைக் கேட்கும்போது பரவசமடைகிறது நம் உள்ளம்.
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்ற வாய்மொழிக்கேற்ப தையல் குருவியின் எடை 10 கிராமும், நீளம் சுமார் 14 செ.மீட்டர் நீளமும் உடையது. ஆனால், இது அழகாகப் பாடும் திறனைக் கொண்டது. தலையின் மேற்பகுதி செந்தூர வண்ணத்திலும், தலைப்பகுதி சாம்பல் நிறத்திலும், வட்டமான இறக்கைகள் அடர்ந்த மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் கலந்தும் காணப்படுகின்றன. இப்பறவையின் அடிப்பகுதி கறந்து வைத்த பாலைப்போன்ற வெள்ளை நிறத்திலும், வலுவான கால்கள் மற்றும் நீண்டு வளைந்த அலகுகள் பிறந்த குழந்தையின் பாத வண்ணங்களிலும், குறுகிய வால்கள் புவியிர்ப்பு
விசைக்கு எதிர்வினையாற்றுவது போல் விண்ணோக்கி நிமிர்ந்தும் காணப்படும். தையல்குருவி சற்றே கூச்ச சுபாவம் உடையது. மரக்கிளையில் உள்ள நெருங்கிய இலைகளுக்கு இடையே மறைந்திருந்து பார்க்கும். இதனுடைய உணவு புழு, பூச்சிகள், வண்டுகள் மற்றும் முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள். இப்பறவை முழு நேர அசைவப் பிரியரே!
பருவமடைந்த ஆண் தையல் குருவியின் வால் இறகுகள் இனப்பெருக்கக் காலத்தில் நீண்டு வளரும். இதனழகில் மயங்கும் பெண்குருவிகள் அப்பறவையோடு இணைசேரும். மார்ச் முதல் டிசம்பர் வரை இப்பறவையின் இனப்பெருக்கக் காலமாகும். கூடுகட்ட வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் தன்னுடைய சிறிய அலகினால் பெரிய இலைகளின் ஓரங்களில் துளையிட்டு தாவர நார் மற்றும் சிலந்திகளின் வலையைப் பயன்படுத்தி நாம் துணியைத் தைப்பது போல் இரண்டு இலைகளை இடைவெளியின்றி இணைத்துத் தைத்து, அதனுள்ளே பஞ்சு, காய்ந்த சருகுகள், காய்ந்த வேர் மற்றும் சிலந்தி வலையைக் கொண்டு மெத்தையை உருவாக்கி, அதில் சுமார் 3 லிருந்து 5 வரை முட்டைகளை இடும். முட்டை வெளிர் நீல நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும். குஞ்சுகள் பொரித்து வெளி வந்தவுடன் ஆண், பெண் குருவிகள் தனித்தோ அல்லது ஜோடியாகவோ இரையைத் தேடிக் கொண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும். இறக்கை முளைத்த குஞ்சுகள் தனியே இரை தேடி விண்ணில் பறக்கின்றன.
பொதுவாக மரம், செடி, கொடிகள் பூமியின் அழகை அதிகரிக்கச் செய்கின்றன. மேலும் பறவைகளுக்கு அடைக்கலமும் தருகின்றன. மரங்கள் சுற்றுப்புறத்திலுள்ள கரியமில (கார்பன்–டை–ஆக்சைடு) வாயுவை எடுத்துக் கொண்டு, சுத்தமான உயிர்காற்றை ஆக்ஸிஜன் எல்லா உயிரினங்களுக்கும் தருகின்றன; வெப்பத்தையும், குளிரையும் சமன் செய்கின்றன. மரத்தின் வேர்கள் மண்ணை இறுக்கிப்பிடித்து பெரு மழை பொழிந்தாலும், பூமியின் மண்ணை அடித்துச் செல்லாமலும், மண்ணரிப்பு ஏற்படாலும் பாதுகாக்கின்றன. இவ்வளவு நன்மைகள் தரும் மரங்களை மனிதர்கள் ஏன் வெட்டுகிறார்கள்? மரங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. மரங்களை வெட்டுவதால் பூமியின் வெப்ப அளவு அதிகமாகி புதிய நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
இயற்கையை விட்டு அகன்று போன மனித வாழ்வு, போராட்டம் நிறைந்ததாகவே மாறிவிட்டது. நாம் இயற்கையோடு நெருக்கம் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இல்லை. நம் சொந்த நலனுக்காக மரங்களையும் அதனோடு கூடிய பறவைகளையும் அழித்து விடுவதால் இயற்கைச் சமநிலை கெடுகிறது. வறட்சி, பஞ்சம், குடிநீர்த் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமையினால் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை ஏற்படும். இந்நிலையை மாற்றிட ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வனவளம் மிக முக்கியமானதாகும் என்பதைப் புரிந்து, தூய காற்றைச் சுவாசிக்க வையகமெங்கும் மரங்களை வளர்த்து, பறவைகளை வானமெங்கும் பறக்கச் செய்வோம்!
பறவைகளின் வாழிடமே
மனிதர்களின் நிழலிடம்!<
