ஊர்ட் மேகம் (OORT CLOUD) வானியல்

பிரகாசம் பி பழனி

இந்தப் படத்தின் மய்யத்தில் உள்ளது நம் சூரியனையும் கோள்களையும் உள்ளடக்கிய சூரிய மண்டலம். நம் சூரிய மண்டலத்தின் எல்லைப் பகுதி தான் இந்த வெள்ளைப் புள்ளிகளாக இருக்கும் வட்டம்.
இந்த வெள்ளை வட்டத்தின் பெயர் தான் ஊர்ட்மேகம் (Oort Cloud).
இந்த ‘Interstellar space’ – விண்மீன் இடைவெளி என்று சொல்கிறார்களே…அது எங்கே தான் உள்ளது…’? எனப் பலருக்கும் சந்தேகம் இருக்கும். இதோ, இந்த வெள்ளை வட்டத்தைத் தாண்டி உள்ள இடம் தான் ‘Interstellar space.’
அதாவது, நம் சூரிய மண்டலத்தையும் Interstellar பகுதியையும் இணைக்கும் கோடு தான் இந்த ஊர்ட்மேகம்.
இதற்கு ஏன் ‘Oort’ எனப் பெயர் வந்தது…?
‘நம் சூரிய மண்டலத்திற்குள் வித்தியாசமாக சில வால் நட்சத்திரங்கள் வருவதை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானி ஒருவர், இவையெல்லாம் நிச்சயமாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள ஒரு குளிர்ந்த பகுதியில் இருந்து தான் வரக்கூடும் எனத் தீர்மானித்தார்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்த விஞ்ஞானியின் பெயர் ஜேன் ஹென்ரிக் ஊர்ட் (Jan Hendrik Oort). 1950இல் அவர் கூறிய இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றதால் அவர் கூறிய அந்தக் குளிர்ந்த பகுதிக்கு அவர் பெயரையே வைத்து விட்டனர்.
ஆக, 1950க்கு முன் ஊர்ட்மேகம் என்பது என்னவென்றே யாருக்கும் தெரியாது.
இந்த ஊர்ட்மேகம் எப்படி, எவ்வளவு தொலைவில் உள்ளது…?
நம் வீட்டில் உள்ள குளிரூட்டும் பெட்டியில் உள்ள ‘freezer’ போல் தான் இந்த ஊர்ட்மேகம் என்னும் பகுதி மிகுந்த குளிரான இடமாக இருக்கும். இங்கே இருந்து தான் வால் நட்சத்திரங்கள் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைகின்றன.
இந்தப் பகுதி மிகமிக நீண்ட தொலைவில் அமைந்துள்ளது. அதாவது, சுமார் 2000 வானியல் அலகு AU (Astronomical Unit) தொலைவில் தொடங்குகிறது.
1 AU தூரம் = சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான 15 கோடி கி.மீ தூரம். அப்படியென்றால், 2,000 AU தூரம் எவ்வளவு என நீங்களே கணக்குப் போட்டுக்கங்க!
எடுத்துக்காட்டாக, நாசா 48 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய வாயேஜர் 1 (Voyager 1) விண்கலம், வினாடிக்கு 17 கி.மீ வேகத்தில் இப்போது வரை 165 AU தூரத்தைத் தான் கடந்துள்ளது.
இது 2,000 AU தூரத்தை, அதாவது ஊர்ட்மேகத்தின் தொடக்க எல்லையைத் தொட இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.
இது மட்டுமா…
இந்த எல்லைக்குள் நுழைந்து அடுத்த எல்லை வழியாக வெளியேற 30,000 ஆண்டுகள் ஆகும்.
ஒருவேளை, நாம் இப்போது வானில் ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்க்க நேரிட்டால், அது மனிதர்கள் பூமியில் தோன்றுவதற்கு முன்பே ஊர்ட்மேகத்திலிருந்து புறப்பட்டிருக்கும்.
(புறப்படும்போது சூரியனின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் என்பதால், ஆரம்பத்தில் அது மில்லி மீட்டர் தூரம் வரை தான் முன்னேறும்)
ஊர்ட்மேகத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியுமா..?
முடியாது. ஏனெனில், இதற்குள் இருக்கும் ‘பொருள்கள்’ எல்லாம் நம் பூமி போல் சிறிய அளவிலானவை. நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது.
ஆனால், நாம் இரவில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம் தானே…? அந்த நட்சத்திரங்களுக்கு மிக மிக முன்னால் தான் இந்த ஊர்ட்மேகம் உள்ளது.
நாம் இரவில் பார்க்கும் அனைத்து நட்சத்திரங்களும் Interstellar பகுதியில் தான் உள்ளன.
எவ்வளவு இடைவெளி…?
பூமியிலிருந்து ஊர்ட் மேகம் 2,000 AU தூரத்தில் உள்ளது எனில்…
நம் பூமிக்கு மிக அருகில் உள்ள பிராக்ஸிமா செண்டாரி என்கிற நட்சத்திரம் அமைந்துள்ள தூரம்…..2,68,000 AU.
ஆக, நாம் இரவில் பார்க்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் நம் கற்பனையில் எட்டாத தூரத்தில் அமைந்துள்ளன.
இன்னொரு விஷயம்….
நம் பூமிக்கு ஒரு ஏலியன் விண்கலம் வரும் எனில், அது இந்த ஊர்ட்மேகத்தைக் கடந்து தான் வர முடியும்.
நம் சூரிய மண்டலத்திற்குள் ஏலியன்கள் இருக்க வாய்ப்பில்லை என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஏலியன்கள் வந்தால், அவர்கள் இந்த ஊர்ட்மேகத்தைக் தாண்டி, வெளியே விண்மீன் இடைவெலிப் பகுதியிலிருந்து தான் வர முடியும்.
ஆனால், வினாடிக்கு 17 கி.மீ வேகத்தில் செல்லும் வேயேஜர் 1 விண்கலமே இந்தப் பகுதியைக் கடக்க 30,000 ஆண்டுகள் ஆகும் எனில், ஏலியன்களின் நிலை..?
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அவர்களின் கூற்றுப்படி ‘ஒரு பொருளுக்கு அடர்த்தி/எடை (Mass) இருந்தால், அதனால் ஒளியின் (light) வேகத்தில் பயணம் செய்ய முடியாது‘.
ஆதலால், அப்படி ஒரு விண்கலத்தை ஏலியன்கள் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், விண்கலம் என்றாலே அதற்கு அடர்த்தி/எடை இருக்கும்.
எனவே, ஏலியன்கள்(?) இருப்பது உண்மை எனில், அவர்கள் நாம் பயன்படுத்தும் விண்கலன்களைப் போல் அல்லது நவீன தொழில்நுட்பமாகவும் உள்ளதைப் பயன்படுத்திப் புறப்பட்டு, இந்த ஊர்ட்மேகத்தைக் கடந்து பூமிக்கு வர பல மில்லியன் ஆண்டுகள் ஆகலாம்.
ஆதலால், நாம் ஏலியன்(?)களிடமிருந்து பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம்.<



