வானவில்லும் வாழ்வும்!(சிறார் பாடல்)
வெயிலும் மழையும் சேர்ந்திட்டால்
விரியும் வான வில்லேதான்;
மயிலின் தோகை படர்ந்தாற்போல்
மனத்தை மயக்கும் அழகைக்காண்!
ஏழு வண்ணம் கொண்டிங்கே
எழிலாய் வானில் விரிந்தாலும்
ஆழ்ந்த வெண்மை அடிப்படையாம்;
அறிவி யல்தன் கூற்றாகும்!
வான வில்லின் வண்ணங்கள்
வாழ்வில் உணர்த்தும் பொருளுண்டு;
ஞான வெண்மைச் சிதறல்தான்
நமது இன்ப துன்பங்கள்!
அடிப்ப டையாம் அன்பின்மேல்
அழகாய் நேயம் படிந்திட்டால்
கடிதில் வான வில்லெழில்போல்
காண லாமே இன்பங்கள்!!<
– கே.பி.பத்மநாபன்,
கோவை


