தனித் தெரு வேண்டாம்; பொதுத் தெரு வேண்டும்!(நடந்த கதை-9)


அம்மா, தமிழ்நாட்டுலேருந்து முக்கியமான தலைவருன்னா, பெரியார் மட்டும்தான் வைக்கத்திற்காக வேலை செஞ்சாரா?”
“கோவை அய்யாமுத்து போன்றவர்கள் போனாங்கனு சொன்னேன் இல்லையா? அவர் மட்டுமில்லாமல் நாகர்கோவில்ல இருந்து சிவதாணுப் பிள்ளை போன்ற பலரும் புறப்பட்டுப் போனாங்க. அதேபோல களத்தில இருந்து பெரியார் வேலை செய்யறதுக்கு உதவியா வரதராஜுலு நாயுடுவும் வேலை செய்தார்”
“அப்படி என்ன செய்தார்?”
“தமிழ்நாட்டில வைக்கம் போராட்டத்திற்கான ஆதரவு திரட்டறது, பணம் அனுப்பி வைக்கிறதுன்னு பல உதவிகள் செய்தார். அவரும் அங்கே போய் கைதாகிட்டா போராட்ட வேலைகள் சுணங்கிடும் இல்லையா, அதான்”
“ஓ… அப்பறம்?”
“சத்தியாகிரகம் நடத்துறவங்ககிட்ட காவல்துறை முரட்டுத்தனமா நடந்துகிட்டாங்க. தொண்டர்களைக் காலால மிதிச்சாங்க. இன்னும் நிறைய அட்டுழியத்தைக் காவல் துறை செஞ்சது.”
“அய்யோ”
“இதையெல்லாம் காந்திக்கு ஒரு கடிதமா எழுதினாரு நீலகண்டன் நம்பூதிரி. உடனே காவல் துறை ஆணையர், ‘காவல் துறையில யார் யார் அப்படி நடந்துகிட்டான்னு சொல்லுங்க. அவங்க மேல நடவடிக்கை எடுப்போம்னு சொன்னாங்க”

“நடவடிக்கை எடுத்தாங்களா? “
“அதெப்படி எடுப்பாங்க. “காவல் துறை அப்படி நடந்துக்கவே இல்ல. நீலகண்டன் தான் அத்துமீறி நடந்தார். அதுதான் லேசா தள்ளிவிட்டோம். அதுக்குக்கூட மன்னிப்பு கேட்டுட்டோம்’னு சமாளிச்சாங்க”
“ரொம்ப மோசம்மா இது”
“போலிஸ்காரங்க இப்படி மோசமா நடந்துகிறத குறைச்சுக்கவே இல்ல. பல பேரை அடிச்சு துன்புறுத்தவே செஞ்சாங்க”
“போராட்டம் தொடர்ந்து நடந்துச்சாம்மா?”
“ஆமா செழியா… ஏப்ரல் 21 ஆம் தேதியும் சத்தியாகிரகம் நடந்துச்சு. டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் வைக்கத்திற்கு வந்தார்”
“அவர் யாரும்மா?”
“கேரளாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவர் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர். அவர் வக்கீலுக்குப் படித்தவர். ஆனால் அதை விட்டுவிட்டு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1923ஆம் ஆண்டுலேயே சமபந்தி போஜனம் நடத்தினார். அதனால், அவரோட சொந்தக்காரங்க எல்லாம் அவரை ஜாதியை விட்டு வெளியேத்தறோம்னு சொல்லிட்டாங்க. அவரோட மனைவியைக்கூட பிரிக்கறதுக்கு முயற்சி பண்ணினாங்க.”
“பிரிச்சிட்டாங்களா?”
“அவர் மனைவி ஈஸ்வரி அம்மாள் தன் கணவரோடு அந்த ஊரை விட்டே வெளியேற முடிவு செய்து, கூடவே வந்துட்டாங்க. தீண்டப்படாதவர்களுக்காக உழைத்தார்; அவர்களுக்குப் படிப்பு சொல்லி கொடுக்கணும்னு போராடினர். அதனாலேயே அவரைத் ’தீண்டப்படாத பிராமணன்’ என்றார்கள்.”
“ஓ! அவர் வைக்கம் வந்தார். அப்பறம்”
“நாராயணகுரு ஆசிரமத்தில் ஒரு கூட்டம் நடந்ததுச்சு. நாராயணகுரு யாருன்னு தெரியும்தானே செழியா?”
“கேரளத்தின் முக்கியமான சமூக சீர்திருத்தவாதின்னு முன்பே சொல்லியிருக்கீங்க”
“ஆமா. அவர் ஆசிரமத்திலே பெரியார் உள்ளிட்ட முக்கியமானவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்னு நடந்துச்சு. அதுல கிருஷ்ணசாமி அய்யர் உள்லிட்ட பலரும் வந்திருந்தாங்க”
“எதுக்காக அந்தக் கூட்டம்?”
“வைக்கம் போராட்டத்தை பலப்படுத்துறதுக்காகத்தான் அந்தக் கூட்டம். டி.ஆர்.கிருஷ்ணசாமி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரு”
“அதில் பெரியார் தாத்தாவும் இருந்தாராம்மா?”
“இருந்தாரு. அதில பெரியாரைச் சேர்ந்து மொத்தம் எட்டு உறுப்பினர்கள் இருந்தாங்க. அந்தக் கூட்டத்தில சிறப்பான முடிவு ஒன்னும் எடுக்கப்பட்டது செழியா!”

“என்ன முடிவு?”
“போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுச் செல்லும் வகையில விரைவிலேயே பெண்கள் பிரிவு தொடங்கப்படணும்னு முடிவு எடுத்தாங்க”
“நல்ல திட்டம்தான். அப்பறம் என்னாச்சு?”
“அந்தக் கூட்டம் முடிஞ்சு வெளியே வரும்போதே கிருஷ்ணசாமி அய்யரைக் கைது பண்ணிட்டாங்க”
“அய்யோ, அப்ப தலைவர் இல்லாமல் போயிடுமே?”
“இதெல்லாம் முன்பே கணிச்சதால, கிருஷ்ணசாமி கைதானால் அடுத்த தலைவர் யாருன்னு அப்பவே முடிவு செய்திட்டாங்க”
“அட்வான்ஸா யோசிச்சிருக்காங்க இல்லம்மா?”
“மக்களுக்காக பணியாற்றும் இயக்கத்தில இயங்கினவங்க எல்லாம் இதெல்லாம் முன்கூட்டியே கணிச்சிடுவாங்க செழியா! எல்லாம் கள அனுபவம்தான்.”
“ஓ! எங்க பள்ளி கிரிக்கெட் டீம்ல கூட கேப்டன் ஆட முடியலன்னா துணை கேப்டனே அதுக்கப்பறம் கேப்டனா இருப்பான், அதுபோலவா அம்மா?”
“கிட்டத்தட்ட அப்படித்தான் செழியா”
“பெரியார் தாத்தா களத்திலேயும், ஆதரவு திரட்ட ஒருத்தர் வெளியேயும்! அதுபோல, குழு உருவாக்கி தலைவரா ஒருத்தர வைச்சு, அவரைக் கைது செஞ்சா இன்னொரு தலைவர்ன்னு… செம ப்ளான்ம்மா…”
“சரியா புரிஞ்சிருக்கிற செழியா”
“ஏம்மா.. இவங்க பக்கத்துல உள்ள விஷயங்களயே சொல்றீங்க…. ராஜா பக்கம் பத்தி செய்தியே இல்லையா?”
“ஏன் இல்லாம? சீனிவாச அய்யங்கார் வந்து பார்த்தது பேட்டி கொடுத்தது எல்லாம் சொன்னேன் இல்லையா?”
“ஆமா”
“அதற்கப்பறம் திருவாங்கூர் சமஸ்தானத் திவான் வெளியூர் போயிட்டதால அவருக்கு பதிலா வீரராகவ அய்யங்கார் வந்தார். வைக்கத்துக்குப் போய் சத்தியாகிரகம் செய்யறவங்களைப் பார்த்தார்”
“என்ன சொன்னார்?”
“இதே தெருக்கள்லதான் நீங்க போகணுமா என்ன? புதிதாகத் தெருக்கள் அமைச்சுத் தந்தால் போராட்டத்தை முடிச்சுப்பீங்களானு கேட்டாரு”
“போராட்டக்காரங்க என்ன சொன்னாங்க?”
“அவங்க எப்படி ஒத்துப்பாங்க? திட்டவட்டமா மறுத்துட்டாங்க! எங்கும் நடமாடும் உரிமையை வற்புறுத்தவே வந்தோம்னு தங்கள் நிலைப்பாட்டுல உறுதியா இருந்தாங்க. பொறுப்பு திவான் ஜாதி இந்துகள் தரப்பையும் கேட்கப் போனார்.”
“அவங்க என்ன சொன்னாங்களாம்?”
“அவங்க பழைய பாட்டையே பாடியிருக்காங்க. முதல்ல தெருவுல நடக்கணும்னு ஆரம்பிச்சிருக்காங்க. உண்மையிலேயே அவங்க நோக்கம் தெருவுக்குள்ள நடக்குறது இல்ல, இது வழியா கோவிலுக்குள்ள போறதுதான். அதை நாங்க அனுமதிக்கவே மாட்டோம்னு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.”
“ஓ! ஏன்தான் இப்படி இருக்காங்களோ…? அம்மா ஒரு சந்தேகம்!”
“என்ன?”
“அவங்களுக்கு எல்லாம் சாமி நம்பிக்கை இருக்கு தானே… எல்லாரையும் சாமி பார்த்துக்கிட்டு இருக்குன்னு அவங்க நம்பறாங்க தானே?”
“ஆமா… அதில என்ன சந்தேகம்?”
“ஒருத்தர தெருக்குள்ள வரக்கூடாது… கோவிலுக்குள்ள வரக்கூடாதுனு சொல்றதையும் அந்தக் கடவுள் பார்த்துட்டு இருக்கும். இது தப்புன்னு கடவுள் நம்மள தண்டிக்கும்னு அவங்களுக்குத் தோணலயா?”
“செழியா! இந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் கடவுளுக்காத்தான் செய்யறோம்னு தானே சொல்லிட்டு இருக்காங்க!”
“ம்ம்ம்ம அப்பறம்”
“இப்படியே போராட்டம் போய்க்கிட்டே இருந்ததுச்சு. இந்தியா முழுக்கவே இந்தப் போராட்டத்தைக் கவனிச்சாங்க. காந்தியும் அப்பப்ப நிலவரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு இருந்தாரு, அப்ப ஒரு அறிக்கை வந்துச்சு”
“யாரோட அறிக்கை?”
“ஆறுமாசமா சிறையில இருக்கிற டி.கே.மாதவனின் மனைவி எழுதின அறிக்கை…! அதில் எழுதியிருந்தது எல்லாம் பலரையும் உலுக்கிடுச்சு”
“என்ன எழுதியிருந்துச்சும்மா”? <
(தொடரும்)



