எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?(இதுதான் ஆங்கிலம் )

எம் ஆர் மனோகர்
- ‘‘’இது அபாஸ்ட்ரஃபி (Apostrophe). இது சிலரைப் படுத்தும் பாடு இருக்கிறதே… அப்பப்பா! பெரியார் பிஞ்சுகளே! நீங்கள் சிரமப்படக் கூடாது. கவனமாகப் படித்துக் கற்றுக் கொள்ளுங்கள். இது ஆங்கில மொழியில் எழுதும்போதுதான் பயன்படுத்தப்படும். பேசும்போது எதற்கு அபாஸ்ட்ரஃபி? முற்றுப்புள்ளி போல் இதுவும் ஒரு sign; ஓர் அடையாளம்.
don’t – do not என்பதன் சுருக்கம். ‘O’ வுக்குப் பதிலாக அபாஸ்ட்ரஃபி. didn’t, did notஇன் சுருக்கம். Won’t. will notஇன் சுருக்கம். இப்படி நிறைய உள்ளன. உரையாடலில் Do not do it என்று எவரும் சொல்வதில்லை. Don’t do it போதும். அபாஸ்ட்ரஃபி போட வேண்டிய வேலை இல்லை. எழுதும் போது போட்டே தீர வேண்டும்.
இனி வேறுவிதமான உபயோகத்தைப் பார்ப்போம். The boy’s book என்றால் ஒரே ஒரு சிறுவனுடைய புத்தகம். S-க்கு முன்னால் அபாஸ்ட்ரஃபி. The boys’ book என்றால் பல சிறுவர்களின் புத்தகங்கள். இது பன்மை. Sக்குப் பின்னால் அபாஸ்ட்ரஃபி. அதைத் தொடர்ந்து இன்னொரு S தேவையில்லை. boys’s book தவறு. இப்படிப்பட்ட உபயோகத்தில் அபாஸ்ட்ரஃபி உடைமையைக் குறிக்கிறது. யாருடையது என்பதைத் தெரிவிக்கிறது.
அண்மையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வுக்கு ‘Writer’s Forum’ என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டு விளம்பரம் செய்தார்கள். மேடையிலும் பேனரில் அப்படியே இருந்தது. ஒருவர்கூட கவலைப்படவில்லை. “எழுத்தாளர்கள் அமைப்பு” என்றால், Writers’ Forum என்றல்லவா இருக்க வேண்டும்? ஒரே ஒரு எழுத்தாளர் தானா? Writer’s Forum – நிச்சயமாக bad English! Principal’s Room. இது சரி. ஒரு முதல்வர் தானே இருக்க முடியும்? Principals’ Room என்று எழுதலாமா? அது தவறு.
- சரியான நேரத்தைத் தெரிந்து கொள்ள சிலர் நம் கையை முறுக்கி நம் கடிகாரத்தைப் பார்ப்பார்கள் – “What time is it?” என்று கேட்கத் தெரியாததால். நீங்கள் அந்தத் தவறைச் செய்யாதீர்கள் பிஞ்சுகளே!
- “எதற்காகக் காத்திருக்கிறாய்?” என்று கேட்க, “For what you are waiting?” என்று கேட்டு விடாதீர்கள். “What are you waiting for?” என்று கேட்டு அசத்துங்கள். இதைப் போலவே “எதைப் பார்க்கிறாய்?” என்றால், “What are you looking at?” இதுதான் சரி. “At what you are looking?” அல்ல.
- ‘Tell’ – ‘Say’ இரண்டுக்கும் “சொல்” என்றே பொருள். ஆனால், ஆங்கிலத்தில் இரண்டும் உபயோகத்தில் மாறுபடும். ஏதேனும் ஒரு தகவல் சொல்லப்படும்போது Tell. மற்ற சாதாரண இடங்களில் Say / Said போன்றவை. குழப்பமாக இருக்கிறதா? உதாரணங்களுடன் விளக்குகிறேன்.
Tell me your name. (Say me your name அல்ல. பெயரைத் தெரிவிப்பதே ஒரு தகவல் போன்றதுதானே?) Say sorry! (Tell sorry அல்ல. வருந்துவதில் தகவல் எதுவும் இல்லையே?)இதோ, இன்னும் சில: Say Thanks! (Tell thanks அல்ல). Say yes. Say no. (Tell yes – Tell no அல்ல.) Tell him I am busy. (Say him I am busy அல்ல.) I told you the reason. (I said the reason அல்ல.)
- Walk – கடந்த காலம் Walked.
Talk – கடந்த காலம் – Talked.
‘ed’ சேர்த்தாலே சுலபம். ஆனால், எல்லாவற்றுக்கும் ‘ed’ சேர்க்கக் கூடாது. Drinked அல்ல – Drank. Drive – Drived அல்ல – Drove. Catch – கடந்த காலம் Catched அல்ல – Caught. Teach – கடந்த காலம் Teached அல்ல – Taught. Choose – (தேர்ந்தெடுப்பது) – கடந்த காலம்? Choosed அல்ல – Chose.
பிஞ்சுகளே… பயப்படாதீர்கள். நாளடைவில் நிச்சயமாகக் கற்றுக் கொள்வீர்கள்.
- I was born in the year 2018 என்று சொல்லாதீர்கள். year என்ற வார்த்தை தேவையில்லை. I was born in 2018 போதுமே! born என்ற வார்த்தை இருப்பதால் 2018 என்பது ஆண்டுதான் என்று புரியாதா? நம் நாட்டில் 100க்கு 99 பேர் “in the year” தான் போடுவேன் என்று அடம்பிடிக்கிறார்கள். “In the month of May” என்பதும் தவறு. May என்பது மாதம் என்று தெரியாதா? எதற்குத் தேவையில்லாமல் Month? “In May; In June” போதும்.
- I saw with my own eyes என்று சொல்லாதீர்கள். நாம் எல்லோருமே நம் கண்களால் தானே பார்க்கிறோம்? கண்களை இரவல் வாங்கியா பார்க்கிறோம்? “நான் என் கண்ணால் பார்த்தேன்!” என்பது எவ்வளவு அபத்தம்!
பிஞ்சுகளே! நூற்றுக்கணக்கான டிக்சனரிகள் உள்ளன. எக்கச்சக்கமாக ஆங்கில இலக்கணப் புத்தகங்கள் உள்ளன. எல்லாவற்றையும் விழுந்து விழுந்து படித்தால் முதுமையே வந்துவிடும்! நாம் இப்படி குறுக்கு வழியில் வேகமாகப் போவோம் வாருங்கள்! எவையெல்லாம் தவறு என்று தெரிந்து கொண்டாலே எவையெல்லாம் சரி என்று புரிந்துவிடும்.<
(அடுத்த மாதம் – இன்னும் நிறைய…!)



