விரிவானில் தவழ்நிலவே!(சிறார் பாடல்)

* கரத்தல் — மறைத்தல் (ஆபத்தைத் தவிர்த்தல்)
* அணைத்தீர்த்து — அணைத்து ஈர்த்து
* நிறைந்தண்ட — நிறைந்த அண்ட
குறிப்பு:
* செப்டம்பர் — பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த -“நிலவையும் குப்பையாக்கி விட்டோமா?” என்ற கட்டுரையையொட்டி எழுதப்பட்ட பாடல்.
பலகோடி ஆண்டுமுன்பே
பரவிநின்ற டைனசோர்கள்
நிலையிழந்து அழிந்தனவே
நேர்வுபல நிகழ்ந்ததனால்!
சிலஇடங்கள் இதுபோலே
சிதைந்ததுண்டு புவிதனிலே
கலங்காமல் உதவியினை
கரக்குதென்றும் நிலவதுவே!
விரிவானில் தவழ்நிலவே
வினையதனைத் தடுத்துதவும்
விரைந்ததையே அணைத்தீர்த்து
விழுங்கல்லைத் தடுத்துவிடும்
பெரும்பாலும் நடப்பிதுவே
பிறழ்வதில்லை அதன்செயலே
பரிவான இயற்கைதான்
பரிசளித்த கொடையதுவே!
உலவுகின்ற பொழுதெல்லாம்
உரமிகவே முழங்கியென்றும்
நிலைகுலைந்து விழுங்கற்கள்
நிறைத்துவிட்ட குழிபலவாம்
நிலவிலங்கே இறங்கிட்டார்;
நிலையதனை அறிந்திட்டார்
நிலவெங்கும் கழிவுகளை
நிறைத்திட்டார் மனம்போலே!
அறிவியலால் பலநன்மை
அடைந்ததிலே மறுப்பில்லை
குறையில்லா வகையிலது
குடிகாத்தல் நலம்பயக்கும்
நிறைந்தண்ட வெளியெங்கும்
நிலைகுலைக்கும் கழிவுகளும்
உறைவதெங்கும் பெருங்கேடே
உறுதுணையாம் அழிவுக்கே!<
– அர.செல்வமணி,
சத்தியமங்கலம்
