கழுதை வண்டி(நூல் மதிப்புரை )

தென்றல் மணிமேகலை

நூல்:
கழுதை வண்டி
ஆசிரியர்:
ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு:
புக்ஸ் ஃபார் சில்ரன் /
பாரதி புத்தகாலயத்தின் ஒர் அங்கம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி:
044- 24332424. 24330024
விலை: ரூ.100
அன்புள்ள குழந்தைகளே, கற்பனை என்பது மனதில் புதிய எண்ணங்கள், கருத்துகள், உணர்வுகள் மற்றும் உருவங்களை உருவாக்கும் திறன்.
கற்பனையில் என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம். அது போன்ற கற்பனைக் கதைதான் இந்நூல். ஒரு கற்பனைக் குதிரை, கழுதையாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் ஆயிஷா நடராசனின் ‘கற்பனைக் கழுதை‘தான் இந்தப் புத்தகம்.
கற்பனைதான்; ஆனால், பல வரலாற்று உண்மைத் தகவல்கள் இருக்கும்.
ஊரே இல்லாத இடத்தில் ஒரு சிறுவன். அவன் பெயர் தனியன், அவனுக்கு யாரும் இல்லை. அவனுக்குத் துணையாக ஒரு கழுதையும் மாட்டு வண்டியும் மட்டும் கிடைக்கின்றன.
மாட்டு வண்டியில் கழுதையைப் பூட்டி “கழுதை வண்டி”. கதையின் பெயர் உருவாகிறது. அந்தச் சிறுவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பட்டினி கிடந்தாலும் கழுதை மேல் அன்பு கொண்டு பட்டினி இல்லாமல் பார்த்துக் கொள்ளுவான். கழுதை வண்டி நூல் 12 சிறு கதைகளின் தொகுப்பு. தனியன் கழுதை வண்டி மூலமாக ஊர் ஊராகச் சென்று பண்டைய பொருள்களைப் பண்டமாற்று மூலம் மாற்றி, பொருள்களை விற்பனை செய்வான். அவ்வாறு பழைய பொருள்களை விற்கும் போது வரலாற்றுத் தகவல்களும், அவற்றை கதையாகச் சொல்லும் திறனும் தனியனுக்கு ஏற்பட்டது.
அலெக்ஸாண்டர், புருஷோத்தமன் வருகிறார்கள். உணவின் மகத்துவம், பறவைகளின் சுதந்திரம், மன்னரைத் திருத்துதல் கடைசியாக தனியன் கதை எனப் பல வியப்பான தகவல்கள் இதில் உண்டு.
வரலாற்றுச் செய்திகள் மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கதை முழுவதும் வண்டியோடு நம்மைப் பயணிக்கச் செய்வது மட்டுமல்லாமல், அரிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
வரலாறு என்றாலே நமக்கு ஆண்டுகள், மன்னர்களின் பெயர்கள் எனப் படிப்பதற்குச் சலிப்பு ஏற்படும். ஆனால், 12 கதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சங்கிலி போல கிரேக்க மன்னர் விட்டுச் சென்ற வாள், தலநாட்டு மன்னர் சூரிய தீபனின் அகந்தை, பெருமரம் தரும் உன்னத விதைகள், கடைசியாக தனியன் சேரும் அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையானத் தராசுகள். ஒவ்வொரு தராசுக்கும் ஒரு வரலாறு என்று படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் புத்தகமாக உள்ளது.
கதையின் நடுவில் அரசருக்குப் பதில் சொல்லும் விதமாக பூக்களில் சிறந்தது எது? என்ற கேள்விக்கு, ‘தாமரைப் பூ’ என்று பதில் சொல்ல, அரசர் அந்தப் பதிலைப் பெற்றுக் கொண்டு பரிசு அளிக்கும்போது, “அது சரியான விடை இல்லை. நம் மானத்தைக் காக்கக்கூடிய ஆடையைத் தரும் பருத்திப் பூவே சிறந்தது” என சிறுமி சொல்ல அரசர் மனமகிழ்வார்.
மூன்றும் ஓரே மாதிரியாக உள்ள புத்தர் சிலைகளைக் காண்பித்து, அதில் வித்தியாசம் கண்டு பிடிப்பவர்கள் நாட்டை ஆள முடியும் என்ற புதிர். அதற்கு தேவிகா என்ற பெண் சரியான பதிலைச் சொல்லி நாட்டை ஆளுவது போன்ற பல சிறு சிறு, கதைப் பகுதிகள் நன்றாக உள்ளன.
இறுதியில் அனைவரும் இக்கதையின் நாயகன் தனியன் என்று நினைக்கும் வேளையில், கதையின் நாயகன் யார்? தனியன் யார்? என கடைசியில் எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்துள்ளன.
அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் படித்து தனியன் என்னென்ன பொருள்களை தன்னுடைய கழுதை வண்டியில் விற்றான்; என்னென்ன கதைகள் சொல்லி விற்றான். ஆனால், அவனுக்குக் கிடைத்தது என்ன? அவற்றை என்ன செய்தான்? என அனைத்தையும் தெரிந்து கொண்டு நண்பர்களுக்குச் சொல்லுங்கள். புத்தகத்தை வாங்கி தனியன் கழுதை வண்டியுடன் நாமும் பயணிப்போம்!<





