கற்ற கல்வியின் பலன்: ஓர் உண்மைக் கதை (மனிதன் )

சரவணா ராஜேந்திரன்

நாம் பள்ளியில் கற்கும் ஒவ்வொரு பாடமும், மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு வரியும், தேர்வறையில் எழுதும் ஒவ்வொரு பதிலும் நம் வாழ்க்கையின் ஒளிவிளக்குகள் போன்றவை. ஆனால், நாம் கற்ற – பெற்ற கல்வியின் உண்மையான மதிப்பு எப்போது தெரியுமா? ஓர் இக்கட்டான சூழலில் உள்ளவருக்கு அது கைகொடுத்து உதவும்போதுதான்!
திருவள்ளுவர்,
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்று கூறுவார். அதாவது, பிழையில்லாமல் தெளிவாகக் கற்க வேண்டும்; கற்ற பிறகு அந்தக் கல்விக்கேற்றபடி நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும். நான் கண்ட ஓர் உண்மை நிகழ்வு, நாம் பெற்ற கல்வி எப்படி இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
எதிர்பாராத அழைப்பு
மும்பையில், ஒரு முக்கிய அரசு ஆவணத்துக்கு ‘நோட்டரி‘ கையொப்பம் வாங்குவதற்காகக் காத்திருந்தேன். அப்போது, என் நண்பர் ஒருவர், பதற்றத்துடன் இருந்த ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர்,” என்று என் நண்பர் சொன்ன வார்த்தை, என்னை ஒரு பெரிய உதவிப் பணிக்குள் இழுத்துவிட்டது.
அந்தப் பெரியவர் கையில் வைத்திருந்தது சுமார் பத்து உருது மொழிப் பள்ளிச் சான்றிதழ்கள். அவை அனைத்தும் அவரது மகனின் வெளிநாட்டு விசா விண்ணப்பத்துக்கானவை. அந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் மட்டுமே அதிகாரிகள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்களாம்.
அச்சமும் தயக்கமும்
அந்தப் பெரியவர் கடந்த மூன்று மாதங்களாக, மொழிபெயர்ப்பாளர்களையும் தேடி அலைந்திருக்கிறார். ஆனால், ஒருவருக்கும் உதவ மனம் வரவில்லை. ஏன்?
இந்த ஆவணங்கள் மாநகராட்சிப் பள்ளியினுடையது என்பதாலும், விசா போன்ற முக்கியமான அரசு நடைமுறைக்குச் சம்பந்தப்பட்டது என்பதாலும் எல்லோரும் மறுத்து விட்டனர். “நாளை ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்பட்டால், மொழிபெயர்த்தவரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடுமோ?” என்ற பயத்தில், யாரும் உதவத் துணியவில்லை. பள்ளி நிருவாகமும், “இது எங்கள் வேலை இல்லை” என்று கைவிரித்துவிட்டது.
அந்தச் சான்றிதழ்களை நான் வாங்கிப் பார்த்தபோது, அதில் மாணவரின் பெயர், வகுப்பில் வந்த நாட்கள், நன்னடத்தை மற்றும் படித்த பாடங்கள் பற்றிய எளிமையான தகவல்கள் மட்டுமே இருந்தன. சட்டச் சிக்கல் என்று பயப்படுமளவுக்கு அதில் ஆட்சேபகரமான எதுவும் இல்லை. அவை, ஒரு நல்ல மாணவரின் கல்வித் தகுதியையும், ஒழுக்கத்தையும் உறுதிப்படுத்தும் வெள்ளை ஆவணங்கள்.
கல்வி கைகொடுத்த தருணம்
நான் உடனடியாக உதவத் தீர்மானித்தேன். எனக்கு உருது மொழி மீது இருந்த ஆர்வம், நான் பெற்ற மொழி அறிவுக்கு நல்ல பயிற்சி அளித்திருந்தது. நான் இரண்டு நாட்கள் தொடர்ந்து உழைத்து, அந்த எட்டு விண்ணப்பங்களையும் பிழையின்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். முக்கியப் பெயர்களை உறுதிப்படுத்த, உருது டைம்ஸ் ஆசிரியரிடம் காட்டிச் சரிபார்த்து, முழுமையான மொழிபெயர்ப்புப் பிரதியைப் பெரியவரிடம் கொடுத்தேன்.
அடுத்த சிக்கல் – மொழிபெயர்ப்பின் சட்டப்பூர்வ அங்கீகாரத்துக்கு நோட்டரி கையொப்பம் வாங்குவது. அங்கேயும் தயக்கம்! இக்கட்டான நிலைமையை உணர்ந்த நான், “இந்த மொழிபெயர்ப்பால் எந்தப் பிரச்சினை வந்தாலும், நான் முழுப் பொறுப்பு ஏற்கிறேன்” என்று எழுத்துப்பூர்வமாகக் கொடுத்த பிறகுதான், அந்த நோட்டரி அதிகாரி தயக்கத்துடன் கையொப்பமிட்டார்.
மகிழ்ச்சியும் மன அமைதியும்
அந்தப் பெற்றோர் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களுடன் விசா விண்ணப்பிக்கச் சென்றனர். அதிகாரிகள் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டனர்! சில மாதங்களாகத் தொடர்ந்த தவிப்பும், அச்சமும் முடிவுக்கு வந்தது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அந்தச் சிறுவனின் பாட்டி, என்னைத் தேடி வந்து, “அய்யா, நீங்கள் இல்லை என்றால், என் பேரன் வெளிநாடு சென்றிருக்க முடியாது. என் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிகப் பெரிய உதவி இது” என்று கண்ணீருடன் நெகிழ்ச்சியாகக் கூறினார்.
அந்தப் பாராட்டுகளும், வார்த்தைகளும் பெரிய விஷயம் அல்ல. ஆனால், நான் கற்ற மொழி அறிவும், அதைத் துணிச்சலாகப் பயன்படுத்திய செயலும், ஒரு சிறுவனின் எதிர்காலத்துக்கு உதவியது! அதுவே எனக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது.
நாம் கற்ற கல்வியின் முக்கியத்துவம்
அன்புச் சிறுவர்களே, இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
நாம் பள்ளி, கல்லூரி என எங்குக் கல்வி கற்றாலும், அது நமக்கு ஒரு நல்ல வேலையைத் தேடித்தர மட்டுமே இல்லை. மாறாக, அது நாம் வாழும் சமுதாயத்தில், கடினமான சூழலில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கான ஓர் ஆற்றல் வாய்ந்த கருவி.
எனவே, நீங்கள் என்ன கற்றாலும், கசடறக் கற்று அதைக் கொண்டு ஒருவருடைய இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு, அவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உங்களால் உதவ முடிந்தால், நீங்கள் கற்ற – பெற்ற கல்வியின் முக்கியத்துவம் மேலும் உணரப்படும், அதன் பலனும் ஆயிரம் மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக மாறும்!<




