பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)

அபி
காற்று மாசுபாட்டுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், பட்டாசு ஒரு முக்கியமான காரணமாக இருக்கு. காற்று மாசு மட்டுமா வருது? அதனோடு சேர்ந்து, அதிக அளவு சத்தமும் பட்டாசு வெடிப்பதால் வருது. என்னதான், பட்டாசு, அளவில் சிறுசா இருந்தாலும், எப்படி இவ்வளவு பெரிய சத்தத்தைப் போடுது?
என்னதான் வகை வகையாகப் பட்டாசுகள் இருந்தாலும், பெரும்பாலும், அதில் கலக்கப்படும் வெடி மருந்து ஒன்றுதான். அதன் அளவுகள் வெவ்வேறாக இருப்பதால், பட்டாசு வெடிக்கும் விதம் மாறுபடும்.
வெடிமருந்து கலக்கப்படும் விதத்தில், பட்டாசு வெடிக்கும்போது வரும் சத்தம், நிறம், வெப்பம் எல்லாம் மாறுபடும்.
பட்டாசில், ஒரு சின்னக் குழாயில், வெடி மருந்து அடைக்கப்படும். நெருப்பு வைத்த உடனே, இந்த வெடிமருந்து பற்றி எரிய ஆரம்பிக்கும். அதோடு, வெடிமருந்து வெடித்துச் சிதறும் போது, அதைச் சுற்றி இருக்கும் காற்று திடீரென விரிவடையும்.
பொதுவாகவே, வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது காற்றில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றை விட்டு ஒன்று விலகும். இதனால் காற்று விரிவடையும். அப்போ, சத்தம்?
பட்டாசு வெடிக்கும்போது, காற்று மூலக்கூறுகள் விரிவடைவதோடு நிறுத்தாமல், அதில் ஒரு அதிர்வலையும் உருவாகும். இந்த அதிர்வலை, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து, நம்ம காதுக்கு வந்து சேரும். காற்றில் இருக்கும் அதிர்வலைகள், காதில் இருக்கும் ஜவ்வில் படும்போது, காது ஜவ்வும் சேர்ந்து அதிரும். இந்த அதிர்வை, நம்ம மூளை, சத்தம் எனப் புரிஞ்சிக்கும். இப்படித் தான், பட்டாசு வெடித்தால், நமக்குச் சத்தம் கேட்குது.<







