இமயமலை மோனல் (HIMALAYAN MONAL) (பறவைகள் அறிவோம்-21)

பி.இளங்கோ
உலகில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாகக் காணப்படும் உயிரினம் பறவைகள்தாம். பறவைகள் புவிக்குக் கிடைத்த அதிசயப் பரிசு. அவற்றிடம் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பலவிதமான பயன்களைப் பெற முடியும். அன்புடைமை எனும் வாடகை செலுத்தியே இப்பூமியில் வாழும் உரிமையை நாம் பெறுகிறோம்.
எல்லையில்லாப் பிரபஞ்ச வெளியில் சிறகினை விரித்தபடி விதைகளைப் பரப்புவதால் காடுகளையும், தோப்புகளையும், தோட்டங்களையும் பரிசாகத் தருகின்றன பறவைகள். அவற்றின் காலடி படுமிடம் கல்லான காடாக இருந்தாலும் பூத்தாடும் நந்தவனமாகிவிடும். மரங்கள் அடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பயன் தரும்படியும் இருந்தால் அது தோப்பு. அதுபோல ஒருமுறை நட்ட செடிகள் வளர்ந்து மரமாகி பல்லாண்டுகளுக்குப் பயன் தரக்கூடிய அனைத்தும் தோப்புகளாகும். (எ.கா.: மாந்தோப்பு, புளியந்தோப்பு, தென்னந்தோப்பு).
அதுபோல மரங்கள் அடர்ந்த நிலப்பகுதியைக் காடு என்றும் அழைக்கிறோம். தமிழில் வனம், கானகம், அடவி, புறவி என்று பலவகையான பெயர்கள் காடுகளுக்குண்டு. காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை (Carbon – di-Oxide) உட்கொண்டு தூய உயிர்க் காற்றை (Oxygen) பரிசளிக்கின்றன. மேலும், பல்லுயிரினங்களுக்கும் புகலிடமாகவும் விளங்குவதோடு, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி, மண் அரிப்பையும் தடுக்கின்றன. மரம், செடி, கொடி, பாலூட்டிகள், புள்ளினம், ஊர்வன, நீர்வாழ்வன, புழுக்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் சேர்ந்ததே பல்லுயிரினமாகும். மேலும், மனிதனின் முதல் இருப்பிடமே காடுதானே!
காய்கனிகள், பூச்செடிகள் பயிரிடப்படும் நிலம் தோட்டமாகும். (எ.கா.: கத்தரிக்காய் தோட்டம், மல்லிகைப் பூந்தோட்டம், வாழைத்தோட்டம்) பூக்கும் செடிகள் அதிகமாக இருந்தால் அது பூந்தோட்டமாகும். பொதுவாக குவிலென்ஸ் வழியாக ஒருமுனைப்படுத்தும் ஒளிக்கதிர்கள் சுட்டெரிக்கும் தன்மையைப் பெறுவதுபோல ஒருமுனைப்படுத்தும் பறவைகளின் ஆற்றல்கள் மிதமிஞ்சிய வளர்ச்சி பெற்று ஆக்கபூர்வ ஆற்றல்களாக உயிர் பெற்று பூமிப்பந்தைப் பசுமையாக்குகின்றன.
உத்தரகாண்ட் மாநிலப் பறவையின் பெயர் ஹிமாலயன் மோனல் (Himalayan Monal). இப்பறவையை இம்பெயன் மோனல், இமயமலை மோனல் என்றும் அழைக்கின்றனர். நேபாளத்தின் தேசியப் பறவையாக இமயமலை மோனல் இருப்பது இப் பறவையின் தனிச் சிறப்பாகும். சீனா, பூட்டான், மியான்மர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இமயமலை மோனல் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் முதல் 4,500 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. மிக, மிக அழகான இப்பறவை சுமார் 60 செ.மீ. முதல் 72 செ.மீ. நீளம் வரையிலும், சுமார் 2 கிலோ முதல் 3 கிலோ எடை வரையிலும் கொண்டது.
ஆனால், பெண் மோனலை விட ஆண் மோனல் சற்றே நீளமாகவும், எடை அதிகமாகவும் இருக்கும். ஆண் பறவையின் கழுத்து முனையில் ஒரு பிரகாசமான மஞ்சள் திட்டு உள்ளது. ஆண் பறவையின் இறகுகளில் இலையின் இளமை நிறமான பச்சை நிறமும், குவளைப் பூவின் ஊதா வண்ணமும், அந்தி வானம் அரைத்த மஞ்சள் நிறமும், கருவிழியின் கருமை நிறமும், புத்தம் புதியதாய்ப் பூத்த ரோஜாவின் இரத்த சிவப்பு வண்ணத்தையும் காண முடியும். தலையின் மேற்பகுதியில் மகுடம் சூடியது போலக் கொண்டையும் உள்ளது. இது வெற்றிலையின் பச்சை நிறத்தில் உள்ளது. சிறிய வாலின் அடிப்பகுதியில் தும்பைப் பூவைப் போன்ற வெள்ளை இறகும் காணப்படுவதால் காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் பேரழகைக் கொண்டது.
இயற்கை – இமயலை மோனல் பறவைகளுக்கு வண்ணங்களை வாரி, வாரி வழங்கியுள்ளது. பெண் பறவை மந்தமான நிறமுடையது. மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கரும் புள்ளிகளுடனும் இருக்கும். பெண் பறவையின் தொண்டைப் பகுதி பசும்பாலின் வெண்மையையும், தலையில் சிறிய கொண்டையையும் பெற்றுள்ளது. பெரும்பாலும் இப்பறவைகள் ஜோடியாக அல்லது சிறிய குழுக்களாகக் காணப்படுகின்றன.
இப்பறவை பழங்கள், விதைகள், கிழங்கு போன்ற மரக்கறி உணவையும், புழு, பூச்சிகள் போன்ற புலால் உணவையும் உண்ணுகின்றது. வாழ்வின் பெரும்பாலான நேரத்தை உணவுக்காக மட்டுமே செலவு செய்கிறது. கோடைக்காலமான மார்ச் முதல் ஜூன் வரை இனப் பெருக்கக் காலமாகும். வயது வந்த ஆண் பறவை, பெண் பறவையை ஈர்க்கத் தன் வாலை விரித்து நடனமாடுகின்றது. ஆணின் வண்ணத் தோற்றத்தையும், நடன அசைவையும் கண்டு காதல் மயக்கம் கொள்ளும் பெண் பறவை அப்பறவையோடு இணை சேர்கிறது. கர்ப்பக் காலத்தில் தன் அலகைக் கொண்டு நிலத்தைச் சுமார் 26 செ.மீ. ஆழம் வரை தோண்டி, அதில் மென்மையான கூட்டைக் கட்டி சுமார் 3 முதல் 5 முட்டைகளையிட்டு, 26 முதல் 29 நாட்கள் வரை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன.
தன் குஞ்சுகளுக்கு உணவோடு உறுதியையும், உத்வேகத்தையும் கலந்து ஊட்டுவதால் குஞ்சுகள் சுமார் 6 மாத காலத்திற்குள் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. தாய்ப் பறவை வெயிலில் வெந்து வருந்தும்போது ஆண் பறவை நிழலாகவும், குஞ்சுகள் காயம் பட்டுக் கதறும்போதும் காயம் ஆற்றும் களிம்பாகவும் மாறுகிறது. தனது கடமை நிறைவடைந்த பின்னர் ஆண் மோனல் மற்ற பெண் பறவைகளோடு உறவாடி மகிழ்கிறது. இப்பறவையின் ஆயுட்காலம் சுமார் 10 முதல் 12 ஆண்டுகளாகும்.
சங்க இலக்கியத்தில் சங்கப் புலவர்கள் பறவைகள், விலங்குகள் பற்றிக் கூறிய செய்திகள் யாவும் இன்பம் பயப்பவை. பறவைகளின் பல்வகை இயல்புகளையும், வண்ணங்களையும், வடிவங்களையும் புலவர்கள் பாட்டிலும், தொகையிலும் பதிவு செய்துள்ளனர். இயற்கை இன்பத்தை ரசிப்பதை – துய்ப்பதை நவீனகால மனிதன் இழந்து வருகிறான். இயற்கையை விட்டு நீண்ட தூரம் விலகி வந்துவிட்டான். இயற்கை இன்பத்தைத் துய்க்க ஒரு மணித்துளிகூட ஒதுக்க முடியாமல் அதிவிரைவாக ஓடிக்கொண்டு இருக்கிறான். நாளும், நாளும் சுற்றுப்புறச் சூழலையும், தன்னுடைய சுயநலனுக்காகப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறான்.
மழைப் பொழிவுக்கும் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மழை இல்லையேல் நாட்டில் வளர்ச்சி குன்றி, பஞ்சம், குடிநீர் தட்டுப்பாடு, தாவரங்கள் விளையாமை எனப் பல தீங்குகளை நாம் சந்திக்க நேரிடும். காடுகளில் உள்ள மரங்கள், செடிகளின் வேர்கள் மண்ணில் ஊடுருவி இருப்பதனாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது. மரங்கள் இல்லை என்றால் மண் வளம் குன்றி ஆங்காங்கே நிலச்சரிவு, மண் அரிப்பு ஏற்படக் காரணம் ஆகிவிடும். அது மட்டுமன்றி காடுகள் மூலிகைகளின் பெட்டகமாகும். இயற்கை மருத்துவத்திற்குத் தேவையான அனைத்து மூலிகைகளையும் தருபவை காடுகளே!
பறவைகளின் வாழ்க்கை தனிச் சிறப்புடையது. அது உள்ளங்கைகளிலே சேகரிக்கப்பட்ட தண்ணீர் போல சிறிது சிறியதாகத் தரையில் கொட்டிக் குறைந்தும், மறைந்தும் போவதற்கு அல்ல. மாறாகப் படபடவெனச் சிறகினையடித்து உயரே உயரே பறந்து, பரந்த உலகைப் பசுமையாக்கட்டும்!
இமயத்தில் பறக்கட்டும் பறவைகள்!
இதயத்தில் படரட்டும் பசுமைகள்!

