எழுதும் திறன்(சிறார் பாடல்)

வாயால் சொல்லச் சொல்லவே
வந்திடும் எழுத்து வடிவமே
மணிமணி யாக மின்னுமே — அதை
மகிழ்வாய்ப் படிக்க லாகுமே!
கடிதம் சிறுகதை கவிதையும்
கட்டுரை இன்னும் எதுவுமே
ஒலித்தால் போதும் எழுத்தாக — அவை
உருவா கிடும்பார் விந்தையாய்!
இந்த வழியில் இனிமேலும்
எண்ணும் கருத்துப் பதிந்திட
எழுத்துப் பயிற்சி வேண்டா — என்று
எண்ண லாமா சொல்வீரே!
கணினிப் பயிற்சி தேவையே
காலம் மாறி விட்டதால்
கற்க வேண்டும் அதனையும்
கைத்திறன் நமக்கு உடைமையாம்!
எழுத்துப் பயிற்சியும் தேவையே
எழிலில் மிக்க ஓவியம்
எழுதும் திறனும் தேவையே
எண்ணித் திறன்பெற முயலுவோம்!!<
– முனைவர் முரசு நெடுமாறன்





