சொர்க்கப் பறவை (BIRD OF PARADISE) (பறவைகள் அறிவோம்-22)

பி.இளங்கோ


பறவைகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களிடமிருந்து பரிணமித்தவை டைனோசர் என்றதும் நம் நினைவிற்கு வருவது ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் வருவது போன்ற பெரிய செதிகள் கொண்ட பல்லி போன்ற உருவங்கள் தான். அதனால் கடந்த சில பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதை படிவங்கள் (FOSSILS) டைனோசர்களைப் பற்றிய நமது எண்ணத்தையே முழுமையாக மாற்றி விட்டன. அதாவது இறைச்சியை உண்ணும் டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தன என்பதுதான் அந்த ஆச்சர்யமான
உண்மை.
டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தன என்றவுடன் அவை எல்லாமே பறந்தன என்று அர்த்தமில்லை. பின்னர் அவற்றுக்கு இறகுகள் எதற்காகப் பயன்பட்டது என்றால் குட்டி டைனோசர்களின் உடலைக் குளிரில் இருந்து பாதுகாக்கவும், வண்ணமயமான இறகுகளைப் பயன்படுத்தி தனக்கான இணையைக் கவர்ந்திழுக்கவும், தன் முட்டையின் மீது அமர்ந்து இறகுகளால் அனைத்து முட்டைகளையும் மூடி வெப்பத்தை ஏற்படுத்தி முட்டையிலிருந்து குட்டிகளைப் பாதுகாப்பாய் உலகிற்கு கொண்டு வரவும் இறகுகளைப் பயன்படுத்தின.
இறகுகள் கொண்ட டைனோசர்களின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமான செய்தி, இன்று நாம் பார்க்கும் பறவைகள் டைனோசர்களின் நேரடி வாரிசுகள் என்று கூறினால் அது மிகையாகது. இதற்குச் சிறந்த உதாரணமாக ஆர்க்கியாப்டெரிக்ஸ் (ARCHAEOPTERYX) என்ற புதை படிவம். இதற்குப் பறவைகளைப் போல இறக்கைகளும், இறகுகளும் இருந்தன அதே சமயம் டைனோசர்களைப் போல பற்கள், நீண்ட எலும்பு, வால் ஆகியவற்றுடன் இறக்கைகளில் நகங்களும் இருந்தன. இது டைனோசர்களுக்கும் பறவைகளுக்கும் இடையேயான ஒரு மிகச்சரியான இணைப்புப் பாலமாகக் கருதப்படுகிறது. மேலும் வெலசிரப்டர் (VELOCIROPTOR) போன்ற புகழ்பெற்ற டைனோசர்கள் கூட இறகுகளால் மூடப்பட்டிருந்தன என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன. நவீன பறவைகளுக்கு இடையிலான பரிணாமத் தொடர்பைப் புரிந்து கொள்வதில் இறகுகள் கொண்ட டைனோசர்களின் புதைப் படிமங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அரிய அற்புதமான புதைபடிமங்கள் உலகின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.
- சீனா – லியானிங் மாகாணம்
(LIAONING PROVINCE, CHINA)
சிறகுகள் கொண்ட டைனோசர் புதைபடிவங்களின் மிகப் பெரிய, மிக முக்கியமான சேகரிப்பு இங்குதான் கிடைத்துள்ளது. லியாவ்னிங் மாகாணத்தில் உள்ள யிசியன் (YIXIAN), ஜிஃபோடாங் புவியியல் அமைப்புகள் மிகவும் பிரபலமானவை. இங்கு பறவை டைனோசரின் உடல் எரிமலைச் சாம்பலால் புதைக்கப்பட்டதால் டைனோசர்களின் மென்மையான உடல் பாகங்கள், சிறகுகள் மிகத் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
- ஜெர்மனி – ஸோலன் ஹோஃபென் சுண்ணாம்புப் படிவுகள்
(SOINHOFEN LIMESTONE – GERMANY)
இறகுகள் கொண்ட டைனோசர்கள் பற்றி முதன் முதலில் அறியப்பட்ட முக்கிய ஆதாரம் இங்குதான் கிடைத்தது. இது அர்க்கியோப்டெரிகஸ். (ARCHOE OPTERYX) என்ற பறவை போன்ற டைனோசரின் புதைபடிவங்கள் கிடைத்த இடம். இவையெல்லாம் டைனோசர்களுக்கும் பறவைகளுக்கும் இடையே உள்ள பரிணாம இணைப்பைக் காட்டிய ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே அடுத்தமுறை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பறவையைப் பார்த்தால் அது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் ஒரு குட்டி வாரிசு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெரியார் பிஞ்சுகளே! இந்த இதழில் நாம் காணவிருக்கும் பறவை பரடிசயிடே குடும்பத்தைச் சேர்ந்த மிக அழகான சிறகுகளையும், காண்போர் கண்களைக் கவரும் வண்ணங்களையும் கொண்ட சொர்க்கப் பறவை என்றழைக்கப்படும் பறவை பற்றி காண்போம். ஆஸ்திரேலியாவின் வடக்கே பசிபிக் பெருங்கடலின் உள்ள கடல்சார் நாடான பப்புவா நியு கினியா, கிழக்கு இந்தோனேசியா மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. இப்பறவை இனங்களில் 45 வகைகளில் இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்துவமான வண்ணங்களைக் கொண்டது. மழைக் காடுகள், சதுப்பு நிலங்கள், பாசிக் காடுகள் மற்றும் வெப்பமண்டலக் காடுகளிலும் வாழ்கின்றன.
சொர்க்கப் பறவையின் சிறப்பம்சம் வண்ணமயமான வட்ட வடிவ இறகுகளில் வெற்றிலைப் பச்சை நிறம் கொண்ட விசிறி போன்ற இறகுகள் தான், சில ஆண் பறவைகளுக்கு நீளமான கம்பி போன்ற வால்கள் இருக்கும் அதன் முனைகளில் மரகதப்பச்சை நிற இறகுகள் இருக்கும். பெண் பறவை பழுப்பு நிறத்தில் இருப்பதோடு ஆண் பறவையின் வாலை விட சற்றே சிறியதாகவும் குறையாகவும் இருக்கும். பெரும்பாலும் பழங்களையும், தேன்களையும் சில நேரங்களில் சிறிய வகையான பூச்சிகளையும் உணவாக உண்ணும். இப்பறவை 16 செ.மீ. நீளமும் 15 செ.மீ. உயரமும் 50 கிராம் எடையையும் கொண்டது. சொர்க்கப் பறவையின் அலகு நீளமாகவும் சற்றே வளைந்தும் காணப்படுகிறது. உடல் அளவைப் போலவே அலகின் அளவும் பாலினங்களுக்கிடையே வேறுபடுகின்றன. இருப்பினும் ஆண் பறவையை விட பெண் பறவையின் அளவு சற்றே பெரியதாக இருக்கும். பருவ வயதையடைந்த ஆண் பறவைப் பெண் பறவையின் முன் விசித்திரமான மற்றும் அழகான நடனங்கள் ஆடியும், சில ஆண் பறவைகள் தலைகீழாகத் தொங்கியபடி நடனமாடும், பலவிதமான ஓசைகளை எழுப்பும் திறனும் இருப்பதனால் பெண் பறவை எளிதில் மயங்கி ஆண் பறவையோடு இணைசேர்கிறது. இனப்பெருக்கக் காலத்தில் இறகுகள் உதிர்ந்து கீழே விழும். நியு கினியா மக்கள் அந்த இறகுகளைத் தங்களுடைய உடைகளிலும் சடங்குகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இரண்டு முதல் மூன்று முட்டைகளையிட்டு 16 லிருந்து 22 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றது. பிறந்த குஞ்சுகள் சுமார் 6 நாட்களுக்குப் பின்னரே கண் திறக்கின்றன. இறகுகள் 8லிருந்து 10 நாட்களில் முளைக்கின்றன. குஞ்சுகள் வளர்ச்சியடைந்ததும் ஆண் பறவையின் கடமை முடிந்ததாக எண்ணி, பிற பறவைகளோடு உறவு கொண்டு வாழ்கின்றது. சுமார் 30 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
இந்தப் பூமி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, ஓர் உயிரினத்தின் அழிவு நமது சுற்றுச்சூழல் சங்கிலியில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும். பறவைகளைக் காப்பாற்ற ஆல், அரசு போன்ற மரங்களையும், அவரை, புடலை போன்ற செடிகளையும், நம் மண்ணுக்கேற்ற பலவகையான உள்ளூர்த் தாவரங்களையும் நம் வீட்டுத் தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், இயற்கை உரங்கள் வைத்துப் பாதுகாக்க வேண்டும். வானத்தில் பறக்கும் பறவைகளைப் பாதுகாத்தால் தான் சுற்றுச்சூழல் மேம்படும். குழந்தைகளுக்கிடையே சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி நாடு தழுவிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பறவைகளைப் பார்ப்பதற்கான நடைபயணம், விளையாட்டுப் போட்டிகள், ஒவியப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளை நடத்தி அத்துடன் பறவைக் காப்பாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் நேரிலோ அல்லது இணையத்திலோ பறவைகள் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
”பறவைகள் பறக்கும் பாதையில்,
“பசுமையை விரிக்கும் பயிர்கள்”<
