சிங்கமும் மானம்(சிறார் கதை)

வசீகரன்

ஒரு மான்குட்டி, குட்டையில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் கிடந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கக் குட்டி வந்தது. மான்குட்டி தவிப்பதைப் பார்த்து, அதைக் குட்டையிலிருந்து மீட்டு வெளியே விட்டது.
மான்குட்டிக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாகி விட்டது. சிங்கக் குட்டிக்கு நன்றி சொன்னது. அன்று முதல் இரண்டும் நண்பர்களாகிவிட்டன.
ஆண்டுகள் ஓடியது. குட்டியாக இருந்தவை வளர்ந்து பெரிதாகிவிட்டன. அப்போதும் அவற்றின் நட்பு தொடர்ந்து வந்தது.
சிங்கம், மான் இரண்டினுடைய நட்பும் மற்ற விலங்குகளால் அதிசயமாக நோக்கப்பட்டது. “இது பொருந்தாத நட்பு. ஒருநாள் நல்ல பசியில் இருக்கும்போது சிங்கம் அந்த மானை அடித்துத் தின்றுவிடும் பாரேன்” என்று நரி ஒன்று காட்டெருமையிடம் கூறியது. காட்டெருமை, “அவர்கள் நல்ல நண்பர்கள். நான் ரொம்ப நாளாகக் கவனித்துத் வருகிறேன். சிங்கம் ஒருபோதும் அந்த மானைத் திங்காது” என்று கூறியது.
“உன் பெயரே எருமை. உனக்கு எங்கே அறிவு இருக்கப் போகிறது. ‘பசி வந்தால் நட்பும் பறந்துபோம்’… பார்க்கத்தானே போகிறாய்..” என்றது நரி.
நரியின் கருத்தை ஒட்டகம், முயல், கரடி எல்லாம் கூட ஆதரித்தன. யானையும், சிறுத்தையும் நடுநிலை வகித்தன. அதாவது, கருத்து எதுவும் சொல்லவில்லை. அதே சமயத்தில், குதிரையும், கோவேறு கழுதையும் “காட்டெருமை சொன்னதுதான் சரி” என்றன.
“நீங்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும். நாம் மானின் சொந்தக் காரர்களிடம் கேட்போம்” என்றது நரி. நரியுடன் சில மிருகங்கள் மான் கூட்டத்திடம் சென்றன. நரிதான் மான்களிடம் தன் சந்தேகத்தைக் கேட்டது.
“அந்த மான் சிங்கத்தோடு நட்பு கொண்டு இருப்பது எங்களுக்கும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கே அந்த மானோடு, அதைப் பின்பற்றிக் கொண்டு சிங்கக் கூட்டம் இங்கே வந்துவிடுமோ என்றும் பயப்படுகிறோம். ஆனால் நண்பர்களான அந்த சிங்கமும், மானும் உண்மையாகத்தான் பழகுகின்றன. உண்மை இருக்கும் வரை அச்சம் என்பது தேவையில்லை” என்றன சில மான்கள்.
சில மான்களோ, “இல்லை, இல்லை… அவர்களது நட்பு புனிதமானது. எனவே அச்சப்படத் தேவையில்லை” என்றன. அந்த மான்களின் கருத்தைக் கேட்டு விட்டு நரி கூறியது, “பாவம் இந்த மான்கள்! ஒரு நாள் சிங்கக் கூட்டத்துக்கு பலியாகப் போகின்றன. அடுத்த ஆண்டு வரும் உணவுத் திருவிழாவின் போது, இது நடக்கலாம்” என்றும் கூறியது.
மறுநாள் சிங்கக் கூட்டத்தைத் தேடி வந்தது நரி. அங்கே வீற்றிருந்த தலைமைச் சிங்கத்திடம், “அய்யா சிங்கராஜாவே, உங்கள் சிங்கம் ஒன்று மானோடு நட்பு வைத்து இருக்கிறதே. அந்த மானை நீங்கள் ஏன் இன்னும் அடித்துத் தின்னாமல் வைத்து இருக்கின்றீர்கள்?” என்று கேட்டது.
“ஓ… அதைக் கேட்கிறாயா? நானும் பலமுறை ‘அந்த மானை அடித்துத் தின்றுவிடலாம். நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டுவிட்டேன். அதற்கு அந்த நட்புச் சிங்கன் மறுக்கிறான். ‘அவன் என் நண்பன். ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்’ என்கிறான். சரி, சரி… இன்னும் கொஞ்சம் அந்த மான் கொழுக்கட்டும் என்றுதான் விட்டு வைத்திருக்கிறோம்” என்றது. அதை மற்ற சிங்கங்களும் ஆதரித்தன.
மறுநாள் நண்பர்களான சிங்கமும், மானும் சந்தித்துக் கொண்டன. மான் சிங்கத்தின் முதுகில் ஏறிக் குதித்து விளையாடிக் கொண்டு இருந்தது. அதைத் தொலைவில் இருந்து சில சிங்கங்கள் நகைத்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
மான் கேட்டது. “நண்பா நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்றது.
அதற்கு சிங்கம், “நண்பா இன்றோடு நாம் பிரிந்து விடலாம். என் உறவினர்கள் உன்னை அடித்துத் தின்றுவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். எவ்வளவு நாள்தான் நான் அவர்களைத் தடுக்க முடியும். நம் நட்பு அவர்களுக்குப் புரிவதில்லை. எனவே நீ போய்விடு. என்னைப் பார்க்க இனி வராதே” என்றது.
“மாட்டேன் நண்பா. உன்னை ஒருபோதும் பிரிய மாட்டேன். இது நீ காப்பாற்றிக் கொடுத்த உயிர். உனக்காகப் போனால் அது எனக்குப் பெருமைதான்” என்றது மான். தொடர்ந்து “வா… என்னை உன் உறவினர்களிடம் அழைத்துச் செல்” என்றது. சிங்கம் மறுத்தது. விடாப்பிடியாக சிங்கத்தைச் சம்மதிக்க வைத்தது மான். சற்று நேரத்தில் மான் சிங்கக் கூட்டத்தின் முன் நின்றது.
“வணக்கம் நண்பர்களே! நீங்கள் எல்லோரும் என் நண்பனின் உறவினர்கள். எனவே நீங்கள் அனைவரும் என் நண்பர்கள்தான். நீங்கள் என்னைத் தின்ன விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். இது என் நண்பன் காப்பாற்றிய உயிர்தான். எனவே உங்களில் யாராவது ஒரு சிங்கரின் பசியைப் போக்கினால் அது எனக்குப் பெருமைதான். வாருங்கள் என்னை அடித்துத் தின்னுங்கள்” என்றது.
அதைக் கேட்டதும் நட்புச் சிங்கம் அழுதது. தலைமைச் சிங்கம் அந்த மானின் முன் வந்து நின்றது. உதட்டை நாக்கால் தடவிக் கொண்டது.
“ஏ… சின்னஞ்சிறு மானே. உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன். இன்றுவரை உன்னை விருந்தாக்கிக் கொள்ளலாம் என்றுதான் நாங்கள் எண்ணி இருந்தோம். ஆனால் உங்கள் இருவரின் நட்பு எத்தனை ஆழமானது என்பது இப்போதுதான் புரிகிறது. இனி நீயும் எங்கள் அனைவருக்கும் நண்பன்தான்” என்றது.
அதைக் கேட்டதும் நட்புச் சிங்கம் துள்ளிக் குதித்தது. அடுத்த நொடி அனைத்துத் சிங்கங்களும், “மான் நண்பன் வாழ்க” எனக் கோஷமிட்டபடி துள்ளிக் குதித்தன.
அன்பில் திளைத்தது மான். உண்மை அன்பு எவனையும் வெல்லும். உயர்ந்த நட்பு எமனையும் வெல்லும்.<



