பேக்கரியில் பிறந்தஊவு (கதை கேளு கதை கேளு)

விழியன்
கடுமையான வெயில். புயல் கரையைக் கடப்பதாக அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை.
‘மழை வருமோ வராதோ?’ என்ற குழப்பத்தில் மக்கள் இருந்ததால் பேக்கரியில் வியாபாரம் மந்தமாக இருந்தது. பேக்கரியின் ஒரு பகுதியில் தேநீரும் தயாராகும். முன்பு போன்ற பாய்லர் இல்லை.
சாதாரண அடுப்பு, அலங்கோலமான தட்டு, மேஜை, காகிதக் கோப்பைகள்.
அகிலன் வேகவேகமாகப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். அய்ந்து வயதுச் சிறுமியும் அவள் அம்மாவும் கடைக்குள் நுழைந்தனர். ‘அடடா கிளம்பலாம்னு இருந்தோமே இரண்டு பேர் வந்திருக்கிறார்களே’ என யோசித்தான் அகிலன். கொஞ்சம் களைப்பாகத் தென்பட்டனர்.
“தம்பி, லெமன் டீ கிடைக்குமா?” என்று கேட்டார்.
டிராயரைத் திறந்து பார்த்தான். எலுமிச்சையைக் காணவில்லை. வழக்கமாக வைத்திருக்கும் இடங்களில் காணவில்லை.
“அக்கா, இல்லைக்கா! ப்ளாக் டீயா போட்டுடவா?” என்றான் அகிலன். தமிழில் இலக்கணம் வாசித்தது நினைவுக்கு வந்தது அகிலனுக்கு. “பைத்தம் பருப்பு இருக்கா?” என கேட்டால், ‘இல்லை’ என்று சொல்லாமல் “பாதாம் பருப்பு இருக்கு” என்று சொல்வதற்கு ஏதோ பெயர் இருக்குமே என நினைத்தான். மீண்டும் நிஜத்திற்கு வந்தான். வந்தவர்கள் உள்ளூர்க்காரர்கள் போல இல்லை. வழக்கமாக உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா என அகிலன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். சரி பாதி வாடிக்கையாளர்கள் உள்ளூர்க்காரர்கள். மாமல்லபுரம் ஒரு சுற்றுலாத்தளம் என்பதால் மீதிப் பாதி வெளியூர் வாடிக்கையாளர்கள். அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். வந்தவர்கள் சுற்றுலாவிற்கு வந்தது போலவும் இல்லை. மிக இயல்பாக வெகு நாட்கள் பழகியவர் போல பேசினார் அந்த அக்கா.
“நான் சாதா டீதான் குடிச்சிட்டு இருந்தேன். இதோ இவங்க சித்தப்பாதான் என்னை லெமென் டீக்கு பழக்கப்படுத்திவிட்டான். அண்ணி ‘லெமன் டீ, லெமன் டீ’னு கேட்டு என்னையும் குடிக்க வெச்சிட்டான்” மகளைக் கைக் காட்டினார். “மயூரி. அந்தப் பேரையும் அவந்தான் வெச்சான்” ஏனோ ஒரு பெருமூச்சு. ‘மயூரி… நல்லா இருக்கே பேரு’ என நினைத்தான்.
‘ரெண்டு நிமிடம்’ என பக்கத்தில் இருந்த காய்கடையில் அய்ந்து எலுமிச்சைகளை எடுத்து ஓடோடி வந்தான். அகிலன் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கின்றான். விடுமுறை நாட்களில் மட்டும் கடைக்கு வருவான். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கொஞ்சம் ஓய்வு தருவதற்கு இந்த ஏற்பாடு. முழு விடுமுறை தாங்க என்றால் கேட்கமாட்டார்கள். கடையை மூடிவிட்டு நண்பர்களோடு கொஞ்சம் நேரம் செலவழிக்கத் திட்டம்.
நீரைச் சூடாக்கிக்கொண்டே “ஹே பாப்பா, உனக்கு என்ன வேணும்?”, பதில் எதுவும் வரவில்லை. எலுமிச்சையைப் பிழிந்து டீ போட்டுவிட்டான். “இந்தாங்க அக்கா” என நீட்டினான். “நல்லா துடிதுடிப்பா பேசற பொண்ணுதான்பா. இந்த ஒரு மாசமா ‘உம்மு’ன்னே இருக்கா. அவங்க சித்தப்பா போனதில் இருந்து ஒழுங்கா சாப்பிட்றதுகூட இல்ல”
எங்கயோ வெளியூருக்கு அவளது சித்தப்பா போயிருக்கார் என நினைத்தான் அகிலன். “பார்க்க அப்படியே உன்னைப்போலத்தான் இருப்பான்” என்று தொடர்ந்தார். அங்கே இருந்த செய்தித்தாளில் ஒரு வார்த்தையைக் காட்டி “அம்மா, அம்மா…” என்றாள் மயூரி. அதில் என்ன இருக்கு என ஆவலாகப் பார்த்தான் அகிலன். “கரூர்” என்று எழுதி இருந்தது. அந்த பெயரைப் பார்த்ததும்தான் பொறிதட்டியது. அதுவாகத்தான் இருக்கவேண்டும். அவன் உறுதி செய்வதற்கு முன்னரே மயூரியின் அம்மா தொடர்ந்தார்.
“அந்த அசம்பாவிதத்துல இவ சித்தப்பாவும் இறந்துட்டாரு. சும்மா வேடிக்கைதான் பார்க்கப்போனான். இத்தனைக்கும் அந்த நடிகனைப் பிடிக்கும்… அவ்வளவுதான். கட்சி அரசியல்னு பெருசா ஆர்வமெல்லாம் இல்லை. காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருந்தான். பொறுப்பான பையன். அன்னைக்குக் காலையில உற்சாகமாப் போனவன் பிணமா வந்தான். எப்படிப்பா ஏத்துக்க முடியும்? கரூர்ல இருந்து இங்க இன்னைக்கு வர்றது எனக்கு விருப்பமே இல்லை. இவங்க அப்பாத்தான், ‘என்னம்மா செய்யறது’ன்னு புலம்பிட்டே கூட்டி வந்தாரு. ஏசி மண்டபம் நமக்கு ஒத்துக்கலப்பா. இந்த லெமென் டீ குடிச்சா நல்லா இருக்கும்னு நெனச்சேன். வயிறு வேற சரியில்லை. இவளும் சிணுங்கிட்டே இருந்தா. இவளுக்கு அவ சித்தப்பான்னா ரொம்ப பிடிக்கும். அவன் படத்தை வேற அந்த ஹால்ல வெச்சிருந்தாங்க. அதை பார்த்து இன்னும் இவ அழ ஆரம்பிச்சிட்டா. இதோ வரார்ன்னு ‘தகவல்’ வந்திருக்குன்னு காலையில இருந்து உட்கார்ந்துட்டு இருக்கோம்”. இதனைச் சொல்லி முடித்ததும் சித்தப்பாவின் படத்தைப் பார்த்து மயூரி கலங்கியது நினைவிற்கு வந்தது. நினைத்ததும் மீண்டும் கண்ணீர் வந்தது. “செல்லா சித்தா” என்று முணுமுணுத்தாள்.
அகிலனுக்குக் கடந்த ஒரு மாதமாகத் தன் நண்பர்களுடன் நடந்த உரையாடல்கள் நினைவிற்கு வந்தன. கரூரில் ஓர் அரசியல் கூட்டம் நடக்கின்றது. சினிமா நடிகர் தொடங்கிய ஒரு கட்சிக்கூட்டம். நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாதது; உடனே உடன் நிற்காதது பற்றி நிறைய பேசி இருந்தார்கள். மயூரியின் சோகமான முகத்தைப் பார்த்ததும் சட்டென மயூரி மீது நிறைய ப்ரியம் தொற்றிக்கொண்டது.
“அக்கா, காலையில சாப்பிட்டீங்களா?” என்றான் அகிலன்.
கடைக்கு யாரும் வரவில்லை. அநேகமாக, அதோ தூரத்தில் தெரியும் அந்த மண்டபத்தில்தான் சந்திக்க வேண்டும். நல்லவேளையாக மானமுள்ள ரோஷமுள்ள யூடியூப் சேனல்கள், தொலைக்காட்சியினர் யாரும் வரவில்லை. யாரும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்ற முடிவால் அந்தப் பகுதியே அமைதியாக இருந்தது. இல்லையேல், பேக்கரி வியாபாரம் அமோகமாக இருந்திருக்கும். ஆனால் வராதது நல்லதுதான் என்று நினைத்தான்.
“நான் கொஞ்சம் சாப்பிட்டேன்பா. மயூரிதான் எதுவும் சாப்பிடல” என்றார்.
“மயூரி, நான் உனக்கு சமைச்சுத் தரவா?” என்று பதிலுக்கு காத்திருக்காமல் அடுப்பை பற்ற வைத்தான். எளிமையாக ஏதாவது செய்யலாம் என ஆரம்பித்தான். ஃபோனில் தன் நண்பர்களிடம் “அந்தப் பையை எடுத்துட்டு உடனே நீங்க நாலு பேரும் வாங்கடா” என்றான். நால்வரும் வந்தனர். அதென்ன பை என ஆர்வமாக இருந்தார் மயூரியின் அம்மா.
அண்மையில் அன்பரசி அக்கா தலைமையில் கோமாளிகள் பயிற்சியை அகிலனும் அவன் நண்பர்களும் எடுத்திருந்தனர். அந்த மேக்கப் பையைத்தான் எடுத்துவரச் சொல்லி இருந்தான் அகிலன். நண்பர்கள் வந்ததும் பின்னறையில் ஒப்பனை செய்துகொண்டு வந்தனர். சமையலும் தயார். அவளுக்குத் தட்டில் சோறு போட்டுவிட்டு அய்வரும் கோமாளிகளாகக் களம் குதித்தனர். வெளியே தூறல். சூடான உணவு.
சுமார் முப்பது நிமிடங்கள். ஒரு சின்ன நாடகத்தை நடத்தினர். ஒரே ஒரு பார்வையாளர். மயூரி மட்டும்! மிகவும் பெருமையாக உணர்ந்தாள். இறுக்கமாக இருந்தவள் முதல்முறையாக மலர்ந்து சிரித்தாள். மயூரியைப் பார்த்த அவள் அம்மா நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.
ஃபோன் அலறியது.
“தம்பி. மயூரி அப்பா தான் கூப்பிட்றார். அநேகமா அந்த நடிகர் வரார்னு நினைக்கறேன். நீங்களும் எங்களோட வாங்களேன்” என்றார். அய்ந்து பேரும் அமைதியாக நின்றனர். அவர்களுக்கு விருப்பமில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. அவர்கள் அமைதியில் நிறைய அர்த்தமும் இருந்தது. “உடன் நிற்பது” என்ன என்பதை உணர்த்தினர் இந்த அய்வரும்.
“ம்மா, நீ போ நான் சித்தப்பாங்ககூட விளையாடிட்டு வரேன். ஊருக்குப் போகும்போது வந்து கூட்டிகிட்டுப் போங்க” என்றாள் மயூரி.
மகள் இயல்பிற்குத் திரும்பியது கண்டு மகிழ்ச்சி. மண்டபத்தை நோக்கி நடந்தார் அம்மா. பேக்கரியில் இருந்து ‘ஹே’ என மகிழ்ச்சி குரல்கள். செல்லா சித்தாவின் சிரிப்பும்! அம்மாவின் கண்களில் ஏதோ வழிந்தது. தாங்கிக்கொள்ளவும் பற்றிக்கொள்ளவும் கைகள் இருப்பது என்பதே எவ்வளவு நிம்மதி.<


