சிலம்பத்தில் பன்னாட்டுப் பரிசு பெற்ற திருப்பூர் அனுமித்தா!

உடுமலை
Asound mind in a sound body” என்பது பழமொழி!
உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஒன்று பாதிக்கப் பட்டாலும் அதனுடன் இன்றொன்றும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகும். ஒன்று வலுப்பெற்றால், மற்றொன்று வலுவுக்கும் அதுவே அடித்தளமாகும். இதில் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருந்த நிலைமைகள் பெருமளவில் மாறியிருக்கின்றன.
இன்றைய தமிழ்நாடு விளையாட்டுத் துறையைப் பொறுத்தமட்டில் இதுவொரு பொற் காலம் என்றே சொல்ல வேண்டும். கிரிக்கெட் போன்ற வெளிநாட்டு விளையாட்டுகளில் மட்டுமே இருந்த கவனம் மாறி, நமது பண்பாட்டு வீர விளையாட்டுகளான சிலம்பம், சடுகுடு போன்றவற்றிலும், பிற விளையாட்டுகளான சதுரங்கம் போன்றவற்றிலும் மாணவர்கள் விளையாடி பன்னாட்டு அளவில் அசத்தி வருகின்றனர்.இதனால் ஊக்கம் பெற்ற பலரும் விளையாட்டுத் துறையை நோக்கித் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.
அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் கிராமம் தெற்குத் தோட்டத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு பயிலும் அனுமித்தா எனும் மாணவி, சிலம்ப விளையாட்டில் தனது கவனத்தைத் திருப்பி, இந்தோ – நேபாள் பன்னாட்டுத் தொடரில் சிறுவர் பிரிவில் பங்குபெற்று 13 வயதிலேயே சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.
8 வயதிலேயே சிலம்பம் கற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறார் அனுமித்தா. இதையறிந்த பெற்றோர் அவரைத் திருப்பூர் “கிட்ஸ் கிளப் பன்னாட்டுப் பள்ளி”யில் சேர்த்து விட்டிருக்கின்றனர். கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆர்வத்துடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். அந்த ஆர்வமும், திறமையும் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது.
திருப்பூர் எம்.கே.சிலம்பம் அகாடமியில் பிரபல சிலம்ப ஆசிரியர் மா.சந்திப் அவர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.
“பள்ளி விளையாட்டுகள் மற்றும் செயல்பாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை” அமைப்பு மூலம், கேரளாவில் உள்ள மூணாறில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டிக்குத் தேர்ச்சி பெற்று, முதன் முதலில் அதில் தங்கப்பதக்கம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, அதே அறக்கட்டளை மூலம் “இந்தோ – நேபாள பன்னாட்டுத் தொடர் 2025” போட்டியில் கலந்து கொண்டு, அதிலும் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, 2026 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருக்கின்ற “பள்ளி விளையாட்டுகள் மற்றும் செயல்பாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை” நடத்துகின்ற ஆசிய விளையாட்டு – 2026 சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். இது சிறுவர்களுக்காக நடைபெறும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
22.11.2025, சனிக்கிழமை அன்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தாத்தா அவர்கள், திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சிக்குப் பிரச்சாரச் சுற்றுப்பயணம் வந்திருந்து நிகழ்ச்சியை முடித்து பொள்ளாச்சி முகாம் அலுவலகத்தில் இருந்தார்.
அப்போது, விருது பெற்ற கையுடன் அனுமித்தா தம் குடுமபத்தினருடன் வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தான் பெற்ற பதக்கத்தையும், சான்றிதழையும் காட்டி வாழ்த்துப் பெற்றார்.
சிலம்பம் உடல்நலம், உள்ளநலத்தை மட்டும் அல்ல, அதன் மூலம் கிடைக்கும் தன்னம்பிக்கை பெண்களின் சுயமரியாதையும் காப்பாற்றக் கூடியது. இதற்காகவே பெண்கள், “சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் தந்தை பெரியார்.
அன்று பெரியார் சொன்னதை, இன்று ‘பெரியார் பிஞ்சு’ அனுமித்தா கடைபிடித்து, வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறார்.
ஆசியப் போட்டிகளிலும் அவர் மிளிரவேண்டும் என்று “பெரியார் பிஞ்சு” இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்.<

