இவையெல்லாம் உண்மையல்ல(நினைவில் நிறுத்துவோம்)

சிகரம்
பிஞ்சுகளிடம் அறிவுக்கும், உண்மைக்கும் மாறான, அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் சுற்றியுள்ளவர்களால் பிள்ளைப்பருவம் முதவே பரப்பப் பட்டுவருகின்றன. இப்படிப்பட்ட கருத்துகள் குடும்பத்தில் உள்ளவர்கள், பக்கத்தில் வாழ்வோர், உறவினர்கள், நண்பர்கள், உடன் படிப்போர், ஆசிரியர் என்று பலராலும் பரப்பப்படுகின்றன. அறிவார்ந்த கருத்துக்களைக் கூறி, அறிவுக்கும், அறிவியலுக்கும் புறம்பான கருத்துகளை ஏற்கக்கூடாது, நம்பக்கூடாது என்று வலியுறுத்த வேண்டிய, வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்கள் கூட இதில் கடமை தவறுவதோடு, மூடக்கருத்துகளை மூளையில் ஏற்றுகின்றவர்களாகவும் செயல்படுவது வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது.
எனவே, இப்படிப்பட்டசூழலில், பிஞ்சுகள் விழிப்போடு சிந்தித்து, அறிவுக்கு ஒவ்வாதனவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும். அதற்கு அவை பற்றிய தெளிவும், விளக்கமும் அவர்களுக்குத் தேவை என்பதால், சில விளக்கங்களைப் பிஞ்சுகளுக்கு இங்கு கூறியுள்ளோம். அவற்றை ஆழமாய்ச் சிந்தித்து தங்கள் செயல்பாடுகளைப் பிஞ்சுகள் அறிவு வழியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இராசியான பொருள்
இந்தச் சட்டை இராசியானது, இந்தப் பேனா இராசியானது, இந்த இடம் இராசியானது என்று நம்பும் நிலை பிஞ்சுகளிடம் காணப்படுகிறது. ஆனால் இவை உண்மையல்ல, இவை மூடநம்பிக்கைகள்.
ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு சென்ற போது, சென்ற காரியம் வெற்றி பெற்றால் இந்தச் சட்டை இராசியான சட்டை என்று எண்ணிகிறார்கள். அதே சட்டையைப் போட்டுக் கொண்டு இன்னொரு முறை சென்ற போதும் காரியம் வெற்றி பெற்றால் அச் சட்டை ‘இராசியான சட்டை’ என்று உறுதியாக நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சில முக்கியமான செயல்களைச் செய்யும் போது, வெற்றி பெற வேண்டும், நல்ல படியாகக் காரியம் முடிய வேண்டும் என்ற ஆவல் உள்ள செயல்களைச் செய்யும் போது அந்தச் சட்டையை போட்டுக் கொண்டு செல்வதை வழக்கமாக்கியும் கொள்வர்.
அதே போல் மாணவர்கள் ‘இராசியான பேனா, என்று நம்புவதும் வழக்கத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பேனாவைக் கொண்டு தேர்வு எழுதிய போது, வினாத் தாள் எளிமையாக அமைந்து அதிக மதிப்பெண் கிடைத்து விட்டால், அந்தப் பேனாவை இராசியான பேனா என்று நம்புகின்றனர். அதன்பின் எந்தத் தேர்வுக்குச் சென்றாலும் அந்தப் பேனாவை எடுத்துச் சென்று அப் பேனாவால் எழுதுவர். தாங்கள் சிரமப்பட்டுப் படித்தது கவனமாகச் சரியாகத் தேர்வு எழுதியது போன்றவற்றால் தான் அதிகப்படியான மதிப்பெண் கிடைக்கிறது என்ற உண்மையை மறந்து, குறிப்பிட்ட பேனாவால் தான் தேர்வு சிறப்பாக எழுத முடிந்தது என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை, உண்மைக்கு மாறான எண்ணம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் எழுதும் தேர்வுக்கும், எழுதப் பயன்படுத்தப்படும் பேனாவுக்கும் என்ன தொடர்பு? நன்றாக எழுதக்கூடிய பேனாவாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, அது இராசியானா பேனாவா? என்று பார்ப்பது அறியாமையாகும்.
இராசியான இடம்
தேர்வுக்குப் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்தால் நன்றாகக் தேர்வு எழுதலாம் என்ற நம்பிக்கை மாணவர்களிடம் காணப்படுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட மரத்துக்கு அடியில் அல்லது ஒரு குறிப்பிட்ட அறையில், அல்லது ஒரு குறிப்பிட்ட நாற்காலியில் அமர்ந்து படிக்கும் வழக்கம் உள்ளது. இதுவும் அறிவுக்கும், அறிவியலுக்கும், உண்மைக்கும் எதிரான நம்பிக்கையாகும்.
படிக்கின்ற இடத்தைப் பொறுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று நம்புவது சரியில்ல, உண்மையும் அல்ல. குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்தால் தேர்வு நன்றாக எழுதலாம் என்பது அறிவியல் ஆதாரமற்றது. படிக்கின்ற இடம் படிப்பதற்கு வசதியான இடமா? வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள இடமா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, அது இராசியான இடமா என்று பார்க்கக் கூடாது.
படிக்கக் கூடிய இடம் கவனச்சிதறல் இல்லாத இடமாக இருக்க வேண்டும். அருகில் அதிக ஓசைகள் எழாத இடமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் வந்து செல்லக் கூடிய இடமாக இருக்கக் கூடாது என்பது தான் முக்கியம்.
தடுக்குதல்
ஒரு செயலைச் செய்யப் புறப்படும்போது கால் தடுக்கினாலோ, தலையில் இடித்துக் கொண்டாலோ, “எங்க போகிறாய்?” என்று மற்றவர்கள் கேட்டு விட்டாலோ ‘அக் காரியம் நிறைவேறாது; வெற்றி பெறாது’ என்று நம்பி மனம் தளர்ந்து போகின்றனர். இது மூடநம்பிக்கையே தவிர, அறிவுக்கு உகந்த நம்பிக்கையல்ல.
தடுக்குவதாலோ, இடித்துக் கொள்வதாலோ உடலில் பாதிப்பு வரக் கூடாது என்பது பற்றித்தான் கவலைப்பட வேண்டுமே தவிர, தடுக்குவதால், இடிப்பதால் காரியம் நிறைவேறாது என்று நம்புவது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையாகும்.
சோதித்தால் உண்மை வெளிப்படும்
மேற்கண்ட நம்பிக்கைகள் ஒரு முறை இருமுறை நடப்பதை வைத்து நம்புவதால் வருவது இவற்றில் உண்மை சிறிது கூட இல்லை. இவை அனைத்தும் மூடநம்பிக்கைகளே என்பதை அறிய இந்தச் செயல்களைப் பலமுறை சோதித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சட்டையைப் போட்டுக் கொண்டு சென்றால் அக் காரியம் வெற்றி பெறுமா? என்பதை அறிய அச் சட்டையை பல காரியங்களுக்குப் போட்டுக் கொண்டு சென்று சோதித்துப் பார்த்தால் அதில் பல காரியங்கள் வெற்றி பெறாமல் போவதை அறியலாம்.
அதே போல, இராசியான பேனாவில் பலமுறை தேர்வு எழுதினால், பல தேர்வுகள் சரியாக எழுத முடியாமல் போகும் உண்மை வெளிப்படும்.
இராசியான இடம் என்று கருதிய இடத்தில் அமர்ந்து படித்து நிறைய தேர்வுகளை எழுதிப் பார்த்தால் பல தேர்வுகளில் சரியாக எழுத முடியாத உண்மை வெளிவரும்.
எனவே, ஒரிருமுறை நடப்பதை வைத்து ‘இது இராசியானது, இது இராசியில்லாதது’ என்று முடிவுக்கு வருவது தப்பு. பலமுறை சோதித்தால் இந்த நம்பிக்கை ‘வெறும் மூடநம்பிக்கை,’ ‘உண்மைக்கு மாறான நம்பிக்கை’யென்பது வெளிப்படும். மூடநம்பிக்கையும் விலகும்.
ஆகவே, பிள்ளைகளும், பெரியவர்களும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைக்காமல், தங்களுடைய உழைப்பு, திறமை, முயற்சி இவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டும். பகுத்தறிவோடு தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.<






