அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)

சிகரம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று ஒரு பழமொழி உண்டு. அது உளவியல் சார்ந்த ஓர் அனுபவ மொழி. நல்லதே ஆயினும் அதற்கும் ஓர் அளவு உண்டு. அந்த அளவு கடந்தால் அதுவே கேடாகும் என்பதே அது உணர்த்தும் கருத்து.
தூய்மை:
தூய்மை, சுத்தம் என்பது கட்டாயத் தேவை. உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம் ஆகியவை தூய்மையாய் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதேபோல் நம் உடல் தூய்மை என்பதும் கட்டாயம். இவற்றைத் தூய்மையாக வைத்திருப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால், அந்த முயற்சிக்கும் ஓர் அளவு உண்டு.
குடிநீர் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதற்குத் தூய்மையற்ற நீரை விலக்க வேண்டும். தூய்மையான நீரை அல்லது தூய்மை செய்யப்பட்ட நீரைப் பருக வேண்டும். மாறாக, நீர்த் தூய்மை பற்றி அளவுக்கு அதிகமாக அதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது. குடிக்கும் நீரை நுண்ணோக்கி (Microscope) மூலம் ஆய்வு செய்து பார்க்க முற்படக்கூடாது.
குளிக்கும்போது உடல் தூய்மை செய்து கொள்வது கட்டாயம். அப்போது அளவுக்கு அதிகமாகத் தூய்மைப்படுத்துகிறோம் என்று வழலைக்கட்டியால் (Soap) அதிக நேரம் தேய்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
ஆடையை நீரில் அலசும்போது ஓரளவுக்கு அதை அலசுவது கட்டாயம். மாறாக, பலமுறை அலசிக் கொண்டிருப்பது கூடாது. அது தேவையற்றதும் ஆகும்.
‘நூறு விழுக்காடு தூய்மை என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. முடிந்த அளவு என்பதே நடைமுறைக்கு உகந்தது. அளவுக்கு அதிகமாகச் சுத்தம் பார்ப்பது ஒருவகை மனநோய், என்கிறது உளவியல்.
அய்யம்:
சந்தேகம் வரும்போது ஒருமுறைக்கு இருமுறை சோதித்துப் பார்ப்பது கட்டாயம். மாறாக சோதித்துப் பார்த்த பின்னரும் சந்தேகப்படுவது அளவுக்கு மீறிய செயலாகும். வீட்டைப் பூட்டிவிட்டு செல்லுகையில், பூட்டப்பட்டதா என்ற சந்தேகம் வந்தால் ஒருமுறைக்கு இருமுறை சோதிக்கலாம். அப்படி சோதித்துப் பார்த்து விட்டு, கொஞ்ச தூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்ப்பது உள நோயின் அடையாளமாகும்.
துணைநிற்றல்:
பிள்ளைகளைப் பெரியவர்கள் வழிநடத்த வேண்டும்; அவர்கள் செயல்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், வழிநடத்துகிறோம், துணை நிற்கிறோம் என்று பிள்ளைகளைச் செய்யவிடாமல் நாமே செய்து கொண்டிருப்பது தப்பு.
பிள்ளைகள் நடக்கப் பழகும்போது அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது கடமை. ஆனால், பிள்ளைகள் விழவே கூடாது என்று எதிர்பார்ப்பது சரியல்ல. விழும் அளவை, அடிபடும் அளவை முடிந்த அளவு குறைக்க முயற்சிக்க வேண்டும் என்பதே சரியானதாகும்.
சுமை:
படிக்கின்ற பிள்ளைகள் அதிக நேரம் படிக்க வேண்டும் என்பது கட்டாயம். அதே நேரத்தில் உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் அளவுக்கு அதிக நேரம் செலவிடுவது என்பது சரியாகாது. படிப்புக்குக் கொடுக்கும் முன்னுரிமையை உடல் நலத்திற்கும் கொடுக்கவேண்டும். படிப்பு, அதிக மதிப்பெண் வாழ்வின் உயர்வுக்குத் தேவை என்றாலும், அதற்கான முயற்சிக்கும் ஓர் அளவு வேண்டும். அளவுக்கு அதிகமான உழைப்பு, முயற்சி எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதை மறக்கக் கூடாது.
பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளுக்கு அதிகச் செய்திகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தேவைதான். ஆனால், அந்த ஆசை பேராசையாக மாறக்கூடாது. 50 ஆண்டுகளுக்கு முன், 5 வயது முடிந்தபின் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது தான் நடப்பில் இருந்தது. அதன்பின் மழலையர் பள்ளி என்று தொடங்கப்பட்டு மூன்று வயதில் L.K.G.யில் சேர்ப்பது வழக்கில் வந்தது. அதன்பின் அளவுக்கு மிஞ்சிய ஆசையில் மூன்று வயதிற்கு முன்பே Pre.K.G. என்று சொல்லிக்கொண்டு பிள்ளைகளைப் பள்ளிக்குத் தள்ளுவது அறிவுக்கு உகந்த செயலா என்பதை கல்வி தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும்.
மழலையர் கல்வி:
5 வயது முதல் 7 வயது வரை பிள்ளைகளை நன்கு விளையாட்டாக வளர விட்டு அதன்பிறகு கல்விக்கூடங்களில் சேர்க்கும் நாடுகளில் தான் பிள்ளைகளின் கல்வித்தரம் மிகவும் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதே போல் வயதிற்கு ஏற்ப கல்விச் சுமை ஏற்றப்படவேண்டும். மாறாக, அய்ந்து வயதிலே அனைத்தையும் கற்பித்துவிட வேண்டும் என்று முயற்சிப்பது அறியாமையாகும், புரியாமையாகும்.
அய்ந்து வயதில் எவ்வளவு கற்பிப்பது சிறப்போ அந்த அளவுக்கு மட்டுமே கற்பிக்க வேண்டும். மாறாக, தூக்க முடியாத பாடச்சுமையை முதுகிலும், மூளையிலும் ஏற்றுவது கொடுமை, மடமையாகும்.
அய்ந்தாம் வகுப்பு வரை விளையாட்டுடன் கூடிய கல்விமுறையே, அறிவு வளர்ச்சிக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் உரியது, உகந்தது.
கட்டுப்பாடு:
கட்டுப்பாடு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முதன்மையானது; கட்டாயம் பின்பற்றப்பட வேண்டியது. ஆனால், அந்தக் கட்டுப்பாடும் அளவுக்கு மிஞ்சிச் செல்வது கேடாக மாறும். கட்டுப்பாடு என்ற பெயரில் அடக்கி, ஒடுக்கி, விருப்பத்திற்கு எதிராய்த் திணிப்பதும், அளவுக்கு அதிகமாய்க் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கச் செய்வதும் சரியன்று.
கட்டுப்பாட்டின் நோக்கு – ஆதிக்கம் செலுத்துவதோ, அடிமைப்படுத்துவதோ அல்ல. அது நலன்சார்ந்ததாய், அன்பு மிகுந்ததாய் இருக்கவேண்டும். மாணவர்களை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைப்பது கட்டாயம். அதற்காக மாணவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது, வருத்துவது கூடாது. அன்போடு, மாணவர்களைச் செம்மைப்படுத்துவதாய், படிப்பில் சிறக்கச் செய்வதாய், வாழ்வில் உயரச் செய்வதாய், பின்னாளைய வாழ்வை வடிவமைக்கச் செய்வதாய் அமைய வேண்டும்.
அடிப்பது, கடுமையாகத் தண்டிப்பது, பிஞ்சுகளின் உள்ளம் அச்சப்படும் வகையில் செய்வது அறவே தவிர்க்கப்படவேண்டும்.
அதே போல், பிள்ளைகள் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்பது, தங்கள் கடமையைச் சரியாகச் செய்வது, ஆசிரியர்களிடம் மரியாதையாய், பாசத்தோடு பழகுவது கட்டாயம்.
இராணுவக் கட்டுப்பாடு என்பது அந்தத் துறைக்குப் பொருந்தும். அதை மற்ற துறைகளில் கடைப்பிடிக்கக் கூடாது. குறிப்பாக பள்ளிகளில் அது அறவே கூடாது.
“கடிதோச்சி மெல்ல எறிக” என்ற வள்ளுவர் கூறும் வழியே கட்டுப்பாட்டின் அளவாகும். தோசை சுடும்போது அளவோடு வேகவைக்க வேண்டும். சரியாக வேகாமல் போனாலும் பயன் இல்லை. அதிகம் தீய்த்தாலும் கருகிப்போகும். இந்த அளவை அனைத்திலும் நாம் கடைப்பிடிக்கவேண்டும்!<




