விக்கல் வருவது ஏன்? How it Works(துன்னுகுச்சீட்டு)

அபி
படுத்துத் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, புவியரசனுக்குத் திடீரென விக்கல் வர ஆரம்பிச்சிடுச்சு. தண்ணீர் குடிச்சும் நிற்கவில்லை, மூச்சு இழுத்து விட்டும் நிற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்துத் தானாகவே நின்றுவிட்டது. அவனுக்கு, எப்படி திடீரென விக்கல் சத்தம் வந்தது, எப்படி திடீரென நின்றுவிட்டது என்று புரியவே இல்லை.
நாம விக்கலைப் பற்றி புரிஞ்சிக்கலாமா?
நாம் சுவாசிக்க நுரையீரல் பயன்படுது. ஆனால், அது மட்டும் இல்லை, அதோட சேர்ந்து டயாபிரமும் phrenic நரம்பும் தேவைப்படுது.
டயாபிரம் என்பது நம்ம நுரையீரலுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இடையில் இருக்கும் சுவர் போன்ற ஒரு தசைப் பகுதி. இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. நம்ம கழுத்திலிருந்து, இந்தத் தசைக்கு, ஒரு நரம்பு வரும். அதன் பெயர்தான் phrenic நரம்பு. தசையின் வலப்புறமும், இடப்புறமும் இந்த நரம்புகள் இருக்கும்.
இந்த இரண்டு நரம்புகளும் டயாபிரமும் உற்ற தோழர்கள்! இவை இரண்டோட கூட்டணியால தான், நாம சரியா மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுகிறோம்.
அது எப்படின்னு பார்க்கலாமா?
டயாபிரம் சுருங்கும்போது, அது, வயிற்றுப் பகுதியை நோக்கிப் போகும். அப்படிப் போகும் போது நுரையீரல் இருக்கும் பகுதியில், ஒரு வெற்றிடம் உருவாகும். இதைச் சமன் செய்யத்தான் மூக்கு மூலமாகக் காற்றை நாம, உள்ளிழுக்கிறோம். இந்தக் காற்று தொண்டையில் இருக்கும் குரல்வளையைத் தாண்டி, மூச்சுக் குழாய்க்குள் போகும். அதன் வழியாக, நுரையீரலுக்குள்ளே போகும். சுருங்கி இருந்த டயாபிரம் கொஞ்ச நேரம் கழித்து விரிந்து அதனுடைய சாதாரண நிலைக்கு வரும். அப்போது விரிந்த நிலையில் இருக்கும் நுரையீரல் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிச் சுருங்கும்போது, அதன் உள்ளே இருக்கும் காற்று, வெளியே போக ஆரம்பிக்கும்.
அது சரி, இதுல phrenic நரம்புகள் என்ன செய்யும்?
Phrenic நரம்பு தான், டயாபிரம் எப்போ, எவ்வளவு நேரம் சுருங்கணும் என்பதை முடிவு செய்யும். Phrenic நரம்பு டயாபிரம்மைச் சுருங்க சொன்னால், உடனே டயாபிரமும், சுருங்கும். நேரம் ஆனதும் phrenic நரம்பு, டயாபிரமை விரியச் சொல்லும். அப்போ டயாபிரமும் விரியும்.
இதெல்லாம் சரி, விக்கல் சத்தம் எப்படி வருது?
டயாபிரம், சரியாகச் சுருங்கி விரிந்தால், நாமும், மூச்சை சரியாக உள் இழுத்து, வெளியே விடுவோம். அதுவே திடீரென டயாபிரமில் தசைப்பிடிப்பு (spasm) ஏற்பட்டால் டயாபிரம் மிக வேகமாகச் சுருங்கும். அப்போது நுரையீரலுக்குள்ளே ரொம்ப வேகமாகக் காற்று வரும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், நுரையீரலால் காற்றை ஏற்க முடியாது. அப்போது காற்று உள்ளே வருவதைத் தடுத்து ஆகணும். நுரையீரலுக்குள்ளே, அதிக அளவுல காற்று உள்ளே போகாமல் தடுக்க இன்னொரு நண்பன் வருது. அதன் பெயர் குரல்வளை மூடி.
வேகவேகமாகக் காற்று உள்ளே வரும்போது, இதுக்கு மேல நுரையீரலால் காற்றை உள் இழுக்க முடியாது என்ற நிலை வந்தவுடன், சட்டென இந்தக் குரல்வளை மூடி, மூடிக்கொள்ளும். அப்படி மூடிவிட்டால், காற்று நுரையீரலுக்குள்ளே போக வழி இருக்காது. காற்றும் நுரையீரலுக்குள்ளே போகாது. இப்படித்தான் குரல்வளை மூடி நுரையீரலுக்கு உதவுது. (நண்பேண்டா!).
அப்போது விக்கல் சத்தம்?
குரல்வளை மூடி சட்டென மூடிக்கொள்ளும்போது, அது ஓர் ஒலியை எழுப்பும். நாம, சடாரென கதவைச் சாத்தினால் ஒரு சத்தம் வருமே, அது மாதிரி. இப்படி குரல்வளை மூடி, சட்டென மூடிக்கொள்ளும் போது வரும் சத்தம்தான் விக்கல் சத்தம். டயாபிரமில் எத்தனை முறை தசைப் பிடிப்பு ஏற்படுதோ, அத்தனை முறை நமக்கு விக்கல் வரும். இப்படித்தான் புவிக்கு விக்கல் சத்தம் கேட்டிருக்கு.
அது சரி, ஏன் விக்கல் வந்தால் தண்ணீர் குடிக்கவோ, மூச்சை இழுத்து விடவோ சொல்றாங்க?
பதில் அனுப்புறீங்களா?
(அனுப்புங்க… சரியான பதிலுக்குப்
பரிசு உண்டு)




