அதிர்வை உண்டாக்கிய பெரியார் பேச்சு!(நடந்த கதை-10)

விஷ்ணுபுரம் சரவணன்
ஆறு மாசமா சிறையில இருக்கிற டி.கே. மாதவனின் மனைவி எழுதின அறிக்கை… அதில் எழுதியிருந்தது எல்லாம் பலரையும் உலுக்கிடுச்சு”
“என்ன எழுதியிருச்சும்மா?”
“வைக்கம் போராட்டம் ஒருபக்கம் சென்றாலும் அவங்க எழுதினது முக்கியமான ஒன்றைப் பத்தி… திருவாங்கூர்ல சட்டம் ஒழுங்குனு சொல்லிக்கிட்டும், மதத்தின் பேரைச் சொல்லிக்கிட்டும் போடுகிற தடைகள் மனிதர்களோட அடிப்படை உரிமைகளையே பறிக்குது. இது மனிதர்கள் சுதந்திரமா செயல்பட முடியாத நிலைமைக்குக் கொண்டு போயிடுச்சு’னு அறிக்கையில எழுதியிருந்தாங்க”
“அட. ஆமாம்மா… ஓர் ஊர்ல எங்காவது ஒரு இடத்துல கலவரம் நடந்தா அந்த ஊரே பதற்றமாயிடும் இல்ல… வழக்கமா கடைக்குப் போறவங்க… வெளியூருக்குப் போறவங்க இவங்களுக்குக்கூட கஷ்டம்தான்.. சரியாதான் சொல்லியிருக்காங்கம்மா.”
“அதுமட்டும் சொல்லல செழியா.. போராட்டத்துல கலந்துகிறதுக்கு இன்னும் பலரும் முன்வரணும்னு அழைச்சாங்க. கூடவே போராட்டத்துக்கு நிதி கொடுக்கணும்னு கேட்டுகிட்டாங்க”
“கணவர் ஜெயிலுக்குப் போனாலும் உறுதியா நிற்கிறாங்களே… சூப்பர்ம்மா… அங்கே போராட்டம் தொடர்ந்து நடந்துகிட்டுதானே இருந்துச்சு?”
“ஆமா செழியா.. ஏப்ரல் 22 ஆம் தேதி வழக்கமா போற மூன்று பேர் என்று இல்லாம 20 பேர் சேர்ந்து 23 பேரா போராட்டத்துக்குப் போனாங்க. பெரியாரும் இன்னும் சில தலைவர்களும் அதில கலந்துக்கிட்டாங்க. மக்கள் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே இருந்துச்சு.. பணம், அரிசின்னு தங்கள்கிட்ட இருக்கிறத நன்கொடையா கொடுத்தாங்க”
“அரிசி எல்லாமா?”
“ஆமா… டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரைக் கைது செஞ்சாங்கன்னு சொன்னேன் இல்ல”
“ஆமா”
“அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்துச்சு. அவருக்கு இரண்டு மாத காலத்துக்கு ஜாமின் கொடுத்தாங்க. அதுக்கு 200 ரூபா பணமும் ஜாமின் பத்திரமும் எழுதிக்கொடுக்கச் சொன்னாங்க. ஆனா, அவர் அதைக் கொடுக்க மறுத்துட்டு சிறைக்குப் போயிட்டார்”
“நிஜமாவா…? ஸ்ட்ராங் மேன். தமிழ்நாட்டுல இருந்து ஆதரவா ஒன்னும் நடக்கலையாம்மா?”
“ஆதரவு பெருகிட்டுதான் இருந்துச்சு. தமிழறிஞர் திரு.வி.க ஒரு பத்திரிகையில வைக்கம் போராட்டத்தோட நியாயத்தை எடுத்துச் சொல்லி பெரிய கட்டுரை எழுதினார் ”
“ஓ!”
“பெரியாரும் மற்ற தலைவர்களும் பல ஊர்களுக்குச் சென்று வைக்கத்தில் நடக்கும் போராட்டத்தப் பற்றி மக்கள்கிட்ட பேசிகிட்டே இருந்தாங்க”
“என்ன பேசினாங்க?”
“உதாரணத்திற்கு – திருவனந்தபுரத்தில நடந்த கூட்டத்தில் பெரியார் பேசறப்ப, ‘வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல; மதச் சண்டையும் அல்ல; வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல். சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது’னு போராட்டத்தின் அடிப்படை விஷயங்கள முன்வைத்தார். அப்பறம் ஆதிக்க ஜாதியினரோட பிடிவாதம் பற்றியும், காவல் துறை அடக்குமுறையைப் பற்றியும் பேசினாங்க”
“ம்ம்ம்”
“மே 3 ஆம் தேதி சீக்கிய மதத்தைச் சேர்ந்த அகாலியர் அங்கு வந்தாங்க. சத்தியாகிரகம் செய்யற எல்லோருக்கும் உணவு ஏற்பாட்டை அவங்க கவனிச்சிகிட்டாங்க. அந்த நேரத்துலதான் ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவங்க சத்தியாகிரகம் செய்யும் இரண்டு பேரை கடுமையாத் தாக்குனாங்க. உடனே அதுக்கு எதிர்ப்பு வருது. சம்பந்தபட்ட காவலர்களைக் கடுமையா எச்சரிக்கை பண்ணினதால அதுமாதிரி தொடராம நின்னுடுச்சு”
“காவல் துறை சும்மாவே இருக்காதாம்மா?”
“அவங்களா எதுவும் செய்ய முடியாது செழியா…! மேல உள்ளவங்க இல்லனா அந்த ஊர்ல செல்வாக்குல உள்ளவங்க சொல்றதக் கேட்டு நடந்துகிறாங்க”
“ஆனாலும் ரொம்ப தப்பும்மா?”
“தப்புதான்! சரி, போராட்டம் பற்றி வருவோம். சுவாமி சிரத்தானந்தா, ஆரிய சமாஜத்தார், இலங்கையில் உள்ள குழுக்கள் என பலரும் வைக்கத்துக்கு ஆதரவுகொடுத்தாங்க. கொழும்புலேயிருந்து போராட்ட நிதியா பணம் கூட அனுப்பியிருந்தாங்க. சிரத்தானந்தா தனது பேட்டிகள்லகூட வைக்கம் போராட்டத்தைப் பற்றிப் பேசியிருக்காரு”
“ம்ம்ம்”
“பெரியாரோட பேச்சு வைக்கம் சுற்றுவட்டரத்துல பெரிய அதிர்வுகள கொடுத்துச்சு. அதைக் கேட்டு பலரும் போராட்டத்துல கலந்துக்க முன்வந்தாங்க”
“அதைத் தெரிஞ்சுகிட்டு எதிர்தரப்பு சும்மாவா இருந்தாங்க”
“சரியா கணிக்கிற…! கோட்டயம் மாவட்டத்துக்குப் பெரியார் வர்றதுக்குத் தடை போட்டுச்சு அரசாங்கம்”
“நான் நினைச்சேன்ம்மா”
“ஈ.வெ.ராமசாமி வைக்கத்துக்கு வருவதாலும் அங்க தங்கறதாலும் கூட்டங்கள்ல பேசறதாலும் கலவரம் ஏற்படும்னு சொல்லி கோட்டயம் மாவட்டத்துல எந்தப் பகுதிக்கும் போகக்கூடாதுனு தடை விதிச்சிட்டாங்க”
“அந்த உத்தரவு பெரியார் தாத்தாவுக்குக் கிடைச்சுதா?”
“கிடைச்சுதே”
“பெரியார் தாத்தா என்ன செஞ்சார்… ‘வைக்கத்துக்கு வர மாட்டேன்’னு சொல்லிட்டாரா?”
“அதெப்படி சொல்வார்?… உத்தரவை மீறப்போறேன்னு சொல்லிட்டார்”
“வாவ்… செம… என்ன சொன்னார்னு முழுசா சொல்லுங்கம்மா”
“சொல்றேன். ‘உங்க உத்தரவு கிடைச்சுது. ஆனா, அதுக்கு மதிப்புக் கொடுக்க முடியல. அதுக்காக வருந்தறேன். வன்முறையையும் குழப்பத்தையும் இல்லாம செய்யறதுக்காகத்தான் நான் வைக்கத்துக்கு வந்து இத்தனை நாள் தங்கினேன். இப்படி இருந்தும் எனக்குத் தடை விதிச்சதும் இந்த இயக்கத்தையே ஒழிக்கிறதுக்காக என நினைக்கிறேன். அதனால நான் இந்த உத்தரவை மீற வேண்டியவனா இருக்கேன்’னு பதில் சொன்னார்”
“கொஞ்சம்கூட பயப்படாம சொல்லிருக்காரு பாருங்கம்மா”
“ஆமா. வைக்கம் போராட்டமே வன்முறை இல்லாத அமைதியான சத்தியாகிரகப் போராட்டம். அதுல தலைவர்கள் பேசினாலே கலவரம் வந்துடும்னு சொல்றது எல்லாம் சரியில்லையே. போதாக்குறைக்கு சத்தியாகிரகம் செய்யற அப்பாவித் தொண்டர்களத்தான் போலீஸ்காரங்க அடிச்சுக் காயப்படுத்துறாங்க”
“உண்மைதான் அம்மா. அங்க வரக்கூடாதுன்னு பெரியார் தாத்தாவுக்கு எப்போ தடை போட்டாங்க”
“மே மாசம் 3 ஆம் தேதியன்னிக்கு”
“வைக்கம் போராட்டம் ஆரம்பிச்சது மார்ச் 30ஆம் தேதின்னு சொன்னீங்க.. அப்பன்னா, ஒரு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு இல்லையாம்மா?”
“ஆமா செழியா. ஒவ்வொரு நாளுமே தொண்டர்கள் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டாங்க”
“ம்ம்ம்.. பெரியார் தாத்தா தடையை மீறுவேன்னு சொன்னதும் உடனே அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா அம்மா?”
“இல்ல செழியா… பெரியாரை எப்போ கைது செய்தாங்கன்னா….”
(தொடரும்…)


