மீன் கொத்தி (KING FISHER) (பறவைகள் அறிவோம்)

பி.இளங்கோ
என்னைப் பொறுத்தவரை உயிரினங் களுள் வியப்புமிகு சிறப்புக் கூறுகளைக் கொண்ட உயிரினம் பறவைகளே! உலகின் இருட்டு கிழிபடும் அதிகாலை வேளையிலும் அந்தி மாலைப் பொழுதிலும் பறவைகள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் கானகத்தில் பறந்து செல்லும் அழகைக் கவனித்துப் பார்த்தால், மரத்திலிருந்து உதிர்ந்த இலை காற்றில் பறப்பது போல நம் மனமும் பாரமற்ற இலையாய் காற்றில் மிதந்து போகும். மேலும் புல்வெளியின் மேல் தூங்கும் பனித்துளியை, பறவைகள் தம் இறகுகளால் செல்லமாய்த் தட்டிச் சிதறடிக்கும் அழகே அழகு!
தத்தித் தத்தி நடந்து வரும் குழந்தையைப் போல கிளைக்குக் கிளை தாவிப் பறக்கும் அவற்றைக் காணும் கனிக்கூட்டங்களெல்லாம் தலையாட்டி அழைக்கும் அழகே அழகுதான். வனத்தைப் பெருக்கவும் வளம் கூட்டவும் வனத்தில் பறந்து கொண்டே விதைக்கும் உழவர்கள் தாம் பறவைகள்.
பெரியார் பிஞ்சு வாசக நெஞ்சங்களே! இவ்வாறு சிறப்பு மிக்க பறவையினங்களில் இன்று நாம் காணவிருக்கும் பறவை மீன்கொத்தி (KING FISHER).
மீன்கொத்தி என்பது கண்களைக் கவரும் பளபளப்பான வண்ணங்கள் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான பறவையினமாகும். இது உலகம் முழுவதும் காணப்பட்டாலும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இப்பறவையை பெரும்பாலும் நீர் நிறைந்த வயல்வெளிகளிலும், குளங்கள், குட்டைகள் போன்ற பகுதிகளிலும் எளிதாகக் காணமுடிகிறது. மீன்கொத்தி பறவை சுமார் 26 செ.மீ முதல் 28 செ.மீ நீளம் வரை வளரக் கூடியது. இதன் எடை சுமார் 65 கிராம் முதல் 85 கிராம் வரையிலும் இருக்கும். முதுகு இறகுகள் மற்றும் வால் ஆகியவை நீல நிறத்திலும், தலை, வயிறு மற்றும் தோள்பட்டை அடர் பழுப்பு நிறத்திலும், தொண்டை மற்றும் மார்புப் பகுதியில் வெள்ளை நிறத்திலும் உள்ளன. இறக்கையின் முனைப் பகுதி வெள்ளை நிற வண்ணங்களும், இதன் நீண்ட அலகும் குறுகிய கால்களும் மருதாணிச் சிவப்பாக இருக்கும். இப்பறவையின் அலகு வேல் முனை போல் தடித்தும் நீண்டும் முனை கூர்மையாகவும் இருப்பதால் தண்ணீருக்குள் நீந்தும் மீன்களை லாவகமாகப் பிடிக்க உதவுகிறது. பிடித்த மீனை மரக்கிளையின் மீது அமர்ந்து, அதைக் கிளையில் அடித்துக் கொன்று உண்ணும். மேலும் தவளை, சிறுபாம்பு, பல்லி, வெட்டுக்கிளி, எலி, நண்டு புழு, பூச்சிகளையும் உண்ணும்.
‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே! நீ ஒரு நாள் வரும் வரையில் நான் காத்திருப்பேன் நதிக்கரை ஓரம், என்று பருவமடைந்த ஆண் பறவை காந்திருக்கும். இணைப் பறவையைக் கவர்ந்திழுக்கத் தன்னுடைய பளபளக்கும் இறக்கையை விறைப்பாகத் திறந்து, திறந்து மூடியும், அலகை உயர்த்திச் சிறப்புச் சத்தம் எழுப்பியும், சைகை செய்தும், பெண் பறவையைக் கவர முயற்சிக்கும். இச்செயல்களைக் காணும் பெண் பறவை பிடித்திருப்பின் ஆண் பறவையை கடையாணிச் சக்கரம் போல் கண்ணிரண்டையும் சுழற்றி, அடிமேல் அடிவைத்து அதனருகே சென்று தன்னுடைய இறக்கையை வேகமாக அசைத்து, ஒருவிதமான சிணுங்கல் குரல் எழுப்பும். இரண்டின் உடலும் உள்ளமும் இணைந்தோங்கி நிற்கும் பொழுது பெரும்பாலும் அதிகாலை (6மணி முதல் 10 மணி வரை) வேளையாக இருக்கும். இனப்பெருக்கக் காலம் பின்பனிக்காலம் (பிப்ரவரி) முதல் கார்காலம் வரை (ஆகஸ்ட்) நீடிக்கும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது. இதற்கு மரத்தின் மீது கூடுகட்டும் பழக்கம் கிடையாது. மாறாக இணைப் பறவைகளும் சேர்ந்து உலர்ரக மண்ணில் சுமார் 50 செ.மீ முதல் 1 மீட்டர் அடி ஆழமான குழியைத் தோண்டி அதனுள் 3-5 வரையிலாள உயர்தர முட்டையை இட்டு சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம் என்று இருபாலரும் இணைந்தே சுமார் 20 முதல் 22 நாள்கள் வரை அடைகாக்கின்றன. வண்ண வண்ண முகம் காட்டி, வானவில்லின் நிறம் காட்டி, சின்னச் சின்னக் கீச்சுக்குரலோடு சித்திரம் போலே வெளிவரும் குஞ்சுகளை இரு பறவைகளும் சேர்ந்தே உணவு கொடுத்துப் பாதுகாக்கின்றன. மீன் கொத்திப் பறவைகளின் வாழ்நாள் 5 ஆண்டுகள் மட்டுமே இருந்த போதிலும், வாழும் காலம் வரை விதைகளைச் சுமந்து கொண்டு பூமிப்பந்தைப் பசுமையாக்கத் துடிக்கும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
அந்த வழியில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 165 கலை, அறிவியல் கல்லூரிகளில் மரம், செடி, பழங்கள் தரும் கொடிகள் நிறைந்த பசுமை முகப்புகளை ஏற்படுத்தி, அதைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளைச் சுற்றிலும் பயன் தரும் பசுமை மரங்களை நட்டுப் பாதுகாத்திட வேண்டும் என்ற சட்ட திட்டமும் செயற்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நகர்ப்புறங்களில் இருக்கும் பசுமையைப் பாதுகாக்கவும், புதிய பசுமைப் பரப்பை உருவாக்கவும் சென்னை உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் உள்ள மரங்களைக் கணக்கெடுக்கும் பணியைத் தமிழ்நாட்டு வனத்துறை விரைவில் நடத்த உள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் திறனை வலுப் படுத்த சென்னை, கோவை, திருப்பூர், மதுரை திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் மரங்களுக்குப் புவிசார் குறியிடுதல், மரங்களின் வகைகளை ஆவணப்படுத்துதல், மரத்தின் உயரம் மற்றும் அகலம் என விரிவான பட்டியல் தயாரிக்கப்படும். காலநிலை சம்பந்தமான பல ஆரோக்கியமான திட்டங்களையும் இலக்குகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய வண்ணம் உள்ளது. வருங்காலத்தில் காலநிலை, சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளையும் வழிநடத்தும் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்…
“கானெங்கும் பெருகட்டும் பல்லுயிர்கள்!
வானெங்கும் பறக்கட்டும் பறவைகள்!<



