உண்டியல்! (சிறார் பாடல்)
பஞ்சம் பசி பட்டினி
போக்க வந்த பணத்தினைக்
கொஞ்ச மேனும் சேமிக்க
சொல்லித் தந்த உண்டியல்!
நாய்க் குட்டி உண்டியல்
பூனைக் குட்டி உண்டியல்
காய்கனிகள் வடிவிலே
கலக்கலான உண்டியல்!
சின்னச் சின்ன வயதிலே
சேர்த்து வைக்கப் பழகினால்
என்ன வயது ஆயினும்
எதுவும் சுமைகள் இல்லையே!
என்னைப் போல நீங்களும்
சேமித்திட வேண்டுமா?
எங்கள் வீடு வாருங்கள்
உண்டியலைப் பாருங்கள்!
– அருப்புக்கோட்டை செல்வம்




