உத்வேகமூட்டும் விஞ்ஞானிகள்(நூல் மதிப்புரை)

தென்றல் மணிமேகலை
புத்தகத்தின் பெயர்: உத்வேகமூட்டும் விஞ்ஞானிகள்
நூலாசிரியர்: நிமிஷ் கபூர்
பக்கங்கள்: 56
நன்கொடை: 50
வெளியீடு:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம், அறிவியல் பலகை, காந்தி மண்டபம் சாலை,
சென்னை – 600 025.
செல்: 9840969757
| ச |
ுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறோம். இந்த 2025 ஆம் ஆண்டிலேயே அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தும் கல்வி, உயர்கல்வி, பெரிய பெரிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
அதில் கல்வி, தொழில் இரண்டும் நமக்கு எளிதில் கிடைத்தாலும் அறிவியல் வளர்ச்சி என்பது பெரும் அறைகூவலாக உள்ளது. மயில்சாமி அண்ணாதுரை, அப்துல்கலாம் போன்ற பல அறிவியலாளர்களை நாம் பார்த்துள்ளோம்.
1922ஆம் ஆண்டில் பிறந்த ஆறு விஞ்ஞானிகள் பற்றிய புத்தகம்தான் இந்தப் புத்தகம். அந்த ஆறு விஞ்ஞானிகளும் தங்களுடைய அறிவியல் துறையில் என்னென்ன செய்தார்கள், எவ்வளவு துன்பங்களை – எதிர்ப்புகளை எதிர்கொண்டார்கள், என்னென்ன கண்டுபிடித்தார்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்களில் அவர்களின் வளர்ச்சிக்கு எது உந்து சக்தியாக இருந்தது என்பன போன்ற பல செய்திகளை இந்தப் புத்தகம் தருகிறது.
ஹர்கோபிந்த் கொரானா என்னும் அறிவியலாளர் மரபணுக் குறியீட்டைப் புரிந்து கொள்வதில் முக்கியப் பங்கு வகித்தவர். ஒருவரையொருவர் சாராமல் செயலாற்றி, மரபணுத் தகவல்களைப் புரதங்கள் மற்றும் உயிரணுக்களின் செயல்பாடுகளாகப் பெயர்ப்பதைக் காண்பித்தார்.
நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால் நீங்கள் தனியாகவே பயணம் செய்ய வேண்டும் என்பது கொரானாவின் மேற்கோள். எப்போதும் தொலைநோக்காளராக, அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்.
ஆண் அறிஞர்களுக்கு இணையாக இராஜேஸ்வரி சாட்டர்ஜி என்னும் அம்மையார் இருந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கவில்லை. மேலும் பெண்கள் எனில் எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களுக்கு இடம் இருந்ததில்லை. ராஜேஸ்வரி இந்த இரட்டைத் தடுப்புகளை எதிர்கொண்டு தகர்த்து சாதனை படைத்தார்.
பேராசிரியர் பா.ராமமூர்த்தி, இவர் ஓர் நரம்பியல் வித்தகர். சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட நரம்பியல் அறுவைச் சிகிச்சையை நிலை நாட்டியவர். பேராசிரியர் ராமமூர்த்தி ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கைக்கு உயிரூட்டியவர். நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கி, இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்தவர்.
ரசாயனப் பொறியியலின் மீது லத்தா கொண்டிருந்த நேசம் அபரிமிதமானது. அவர் ஒரு நிறுவனத்தைக் கட்டமைப்பவராகவும், தொலைநோக்குக் கொண்டவராகவும், நிருவாகத் திறன், ஆராய்ச்சி, கற்பித்தல் ஆகிய நற்பண்புகளின் கலவையாகவும் நவீன ஆராய்ச்சிகளின் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் ஜி.எஸ்.லத்தா.
எலவர்த்தி நாயுடம்மா – இவர் ஒரு வேதியியல் பொறியாளர், விஞ்ஞானி. ஆந்திரப்பிரதேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் தொழில் துறை வேதியியலில் இளநிலை படித்தார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1943ஆம் ஆண்டு தோல் தொழில் நுட்ப நிறுவனத்தில் 17 ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். தோல் அறிவியல் பயிற்சிக்கு இங்கிலாந்து சென்றவர். 1958 CSTR மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSTRI) இயக்குநராக 1973 வரை பணியாற்றினார்.
36 வயது இளைஞர் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த, தோல் கைவினைஞர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் பாரம்பரியத்திற்குக் கட்டுப்பட்ட தொழில் துறையின் நடவடிக்கைகளில் அறிவியல் மனப்பான்மையைப் புகுத்த முயற்சி செய்வேன் என்று சொன்னது அனைவரின் இதயத்தைத் தொட்டது. தீண்டத்தகாதவர்களாவும், பல நூற்றாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் இருந்த தோல் பதனிடுபவர்கள் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வீடுகளில் அவர் ஏற்றிய அறிவியல் விளக்கு இன்று பல தொழில்களை உருவாக்கி உள்ளது.
இறுதியாக, இருபரிமாண வரைபடத்தை அறிமுகப்படுத்திய ஜி.என்.இராமச்சந்திரன். இராமச்சந்திரன் ஃபை–பிசி வரைபடம் அல்லது இராமச்சந்திரன் பிளாட் எனப்படும் வரைபடம் இவரது குழுவால் அறிமுகம் செய்யப்பட்டது. கொலாஜனின் மும்மடங்கு – ஹெலிக்ஸ் அமைப்பானது மூலக்கூறு உயிரியலில் ஒரு முக்கியமான மைல்கல்.
இந்த ஆறு அறிவியலாளர்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் படித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த அறிஞர்களைப் பற்றி எழுதி அனுப்புங்கள்.<



