நிலத்தின் வேந்தரைப் போற்றுவோம்!(சிறார் பாடல்)

உலகத் துக்கே உணவளிக்கும்
உழவர் நமது உயிர்காப்போர்;
நிலத்தில் நன்றாய் உழைத்திடுவர்;
நெல்லை நிறைய விளைத்திடுவர்;
கலப்பை தன்னை ஏந்திடுவர்;
காளை யோடு புறப்படுவர்;
புலரும் காலை நேரத்தில்
புறப்பட் டுப்பணி தொடங்கிடுவர்!
நிலத்தை உழுது சமன்செய்து
நீரைப் பாய்ச்சி விதைவிதைத்து
நலத்தைக் கெடுக்கும் களைநீக்கி
நல்ல உரத்தால் வளமாக்கிப்
பலநாள் பாது காத்ததன்பின்
பருவம் தன்னில் அறுவடையை
நலமாய்ச் செய்தே அரிசியினை
நமக்கு அளிக்கும் உயர்மாந்தர்!
கலத்தில் சோற்றைக் கண்டவுடன்
களிப்பால் நாமும் மகிழ்கின்றோம்;
நிலத்தில் சிந்திக் களையாமல்
நிறைவாய் நாமும் உண்ணுகையில்
உலகுக் குணவைத் தருகின்ற
உழவர் தம்மை வணங்கிடுவோம்;
நிலத்தின் வேந்தர் தாம்அவரை
நெஞ்சுள் வாழ்த்திப் போற்றிடுவோம்!
– கே.பி. பத்மநாபன், கோவை



