செ.நு. இரட்டையர்: உங்கள் உடல்நலனைப் பாதுகாக்கும் டிஜிட்டல் நிழல்

‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

நமது உலகம் அறிவியலால் மிக வேகமாக மாறி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்புதான் ‘ஏஐ ட்வின் ஹெல்த்‘ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இரட்டையர் தொழில்நுட்பம். விளையாட்டுகளில் நாம் ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ஆடை அணிவித்து விளையாடுவது போல, மருத்துவத் துறையில் உங்களைப் போலவே ஒரு டிஜிட்டல் உருவத்தை உருவாக்குவதுதான் இதன் அடிப்படை. இது வெறும் படம் மட்டுமல்ல, உங்கள் உடலின் உள்ளே நடக்கும் மாற்றங்களை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு நேரடி வரைபடம் ஆகும்.
இந்தத் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்றால், நாம் கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் அல்லது உடலில் பொருத்தப்படும் சிறிய சென்சார்கள் மூலம் நமது உடலின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம், நமது இதயம் எப்படித் துடிக்கிறது, நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரை நம் உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பன போன்ற ஆயிரக்கணக்கான தகவல்கள் கணினிக்கு அனுப்பப்படுகின்றன. அந்தத் தகவல்களை வைத்து செயற்கை நுண்ணறிவு உங்களைப் போன்றே ஒரு டிஜிட்டல் இரட்டையரை உருவாக்குகிறது.
இந்த டிஜிட்டல் (எணினி) இரட்டையர் ஒரு சிறந்த நண்பனைப் போல உங்களுக்கு உதவும். உதாரணமாக, உங்களுக்குத் தலைவலி அல்லது காய்ச்சல் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்பே, உங்கள் உடலின் மாற்றங்களைக் கவனித்து இந்தத் தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதனால் நோய் தீவிரமடைவதற்கு முன்பே நம்மால் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் உடல் அமைப்பு மாறுபடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட மருந்து உங்கள் உடலுக்குப் பொருந்தி வேலை செய்யுமா என்பதை இயல்பாகவே உங்கள் உடலில் செலுத்தப்படுவதற்கு முன்பே, உங்கள் டிஜிட்டல் இரட்டையரிடம் கொடுத்து, அந்த மருந்து உங்கள் உடலுக்குப் பொருந்துமா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது தவறான சிகிச்சைகள் நடப்பதைத் தவிர்க்க உதவுகிறது.
உணவு விஷயத்திலும் இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். சாக்லேட் சாப்பிடுவது ஒருவருக்குத் தடையாக இருக்காது. ஆனால் மற்றவருக்கு அது சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். உங்கள் டிஜிட்டல் இரட்டையர் உங்கள் உடலுக்கு எது தேவையானது, எது தேவையற்றது என்பதைத் துல்லியமாகச் சொல்லிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் நாம் நோய்கள் வந்த பிறகு மருத்துவமனைக்கு ஓடுவதைத் தவிர்த்து, நோய்களே வராமல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும். இதுவே எதிர்கால மருத்துவத்தின் ஆய்வுக்களமாக அமையப்போகிறது.<





