நல்லவற்றையே நாட வேண்டும் (சிறார் பாடல்)

வாழைப் பழத்தை உண்கின்றோம் – தோலை வாயில் வைத்தா கடிக்கின்றோம்?
முள்பழம் டுரியான் சுவைதானே – சுளையை மூடி இருக்கும் ஓடெதற்கு?
பப்பா ளிப்பழம் உண்கின்றோம் – மேலே படிந்த தோலை ஒதுக்குகின்றோம்
பலாவின் சுளையே இனிக்குமாம் – தோலும் பசியை போக்கக் கூடியதோ?
கைபே சியிலே பாடங்கள் – நாம்
கல்வி கற்கப் பயன்படுமே
பொய்யாய் அதிலே பலஉண்டாம் – அவை
புறத்தே தள்ள வேண்டியவை
வேண்டும் ரோசா மலர்தானே – அதில்
முளைத்து இருக்கும் முள்ஏனோ?
வேண்டும் வேண்டும் நல்லவையே – நாம்
விலக்க வேண்டும் அல்லவையே!
எத்தனை பேர்உடன் வருகிறார் – அவர்
எல்லா ரும்நம் நண்பர்களா?
முத்தாய் ஒளிரும் நல்லவரே – நாம்
முன்னே றிடநல் துணையாவர்!
– முனைவர் முரசுநெடுமாறன்





