மின் சிட்டு MINIVET(பறவைகள் அறிவோம்-24)

பி.இளங்கோ

இயற்கையின் சுற்றுச் சூழலைக் காப்பதில் பறவைகளுக்குத் தனியிடமுண்டு. இயற்கை விவசாயத்தையும் கிராமப்புறச் சூழல்களையும் தக்க வைக்கவும் உதவுகின்றன. குறிப்பாக கரிமக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் அகற்றுவதில் அவை சிறந்த துப்புரவாளர்களாகச் செயல்படுகின்றன. பொதுவாக, அனைத்துப் பறவைகளும் முட்டையிலிருந்தே உருவாகின்றன. தாயின் வயிற்றுக்குள் உருவம் பெறாமல், மூடிப் பாதுகாக்கப் பட்ட கோள வடிவிலான கால்சியம் கார்பனேட் மற்றும் கரிமப் பொருள்களால் ஆன ஓர் உறுதியான ஓட்டுக்குள் திரவ நிலையில் கருப்பெற்று முட்டையாக உருவாகி, புவிக்கு வருகின்றன. பின்னர் ஒரு குறிப்பிட்ட கால அளவு புவி தருகின்ற வெப்பத்தாலும் தாய் தருகின்ற வெப்பத்தாலும் உயிர் பெறுகிறது. பறவை முட்டையின் வடிவமும், நிறமும் பாதுகாப்புக்கான காரணங்களில் ஒன்று.
முட்டைகள் ஏன் இப்படி இருக்கின்றன?
நன்றாகப் பறக்கும் பறவைகளின் உடலமைப்பு மெலிதாகவும், குறுகலாகவும் இருக்கும். இதனால் அவற்றின் கருப்பையில் முட்டைக்குக் குறைவான இடமே இருக்கும். இந்த இடப் பற்றாக்குறையைச் சமாளிக்க நீள் வட்ட முட்டைகளை இடுகின்றன. மேலும் அடைகாக்கும் போது இந்த வடிவம் தாய்ப் பறவையின் அழுத்தத்தால் உடையாமல் இருக்கவும் உதவுகிறது. அது போல பாறைகள் அல்லது செங்குத்தான இடங்களில் கூடு கட்டும் பறவைகளுக்கு இந்த வடிவம் முட்டையை உருண்டு விழாமல் பாதுகாக்கிறது. அதை லேசாகத் தள்ளிவிட்டால் கூட, அது நேராக உருண்டு செல்வதற்குப் பதிலாக ஒரே இடத்தில் வட்டமாகச் சுழலும். பெரும்பாலான பறவைகளின் முட்டைகள் அவை வாழும் சுற்றுப்புறச் சூழலுடன் ஒத்திருக்கும் வகையில் நிறங்களைக் கொண்டிருக்கின்றன. இது வேட்டையாடுபவர்களிடமிருந்து முட்டைகளைப் பாதுகாக்க உதவுகிறது.
உதாரணமாக, தரையில் கூடு கட்டும் பறவைகளின் முட்டைகள் மணல் அல்லது இலைகளின் நிறத்தில் இருக்கும். குளிர்ப் பிரதேசங்களில் வாழும் பறவைகளின் முட்டைகள் அடர் நிறத்தில் இருக்கும். இது சூரிய ஒளியை உறிஞ்சி முட்டைக்குள் உள்ள கருவை வெப்பமாக வைத்திருக்க உதவும். அதே நேரத்தில் வெப்பமான பகுதியில் வாழும் பறவைகளின் முட்டைகள் வெளிர் நிறத்தில் இருக்கும். இது சூரிய ஒளியை எதிரொளித்து முட்டை அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது. முட்டையின் ஓடு மிகவும் வலுவானது. அதன் வளைந்த வடிவம் அடைகாக்கும் காலங்களில் பறவையின் எடையை முட்டையின் அனைத்துப் பகுதிகளிலும் சமமாகப் பகிர்வதால் முட்டை உடைந்து போகாது. ஆனால், குஞ்சு உள்ளே வளரும் போது அதன் வளர்ச்சிக்குத் தேவைப்படும் கால்சியத்தை முட்டையின் ஓட்டிலிருந்து உறிஞ்சி விடுகிறது. இதனால் ஓடு மெலிதாகி, குஞ்சு வெளியே வருவதற்கு ஏற்றதாகிறது.
முட்டையிலிருந்து வெளியே வரும் புதிதாகப் பொறித்த குஞ்சுகளுக்கு அவற்றின் அலகில் ஒரு கூர்மையான முனை இருக்கும் இது முட்டைக் குஞ்சு பல் என்றழைக்கபடுகிறது இந்த முனையைக் கொண்டு குஞ்சு பலவீனமான ஓட்டை உடைத்து வெளியே வருகிறது. குஞ்சு வெளிவந்த சிறிது நேரத்திலேய இந்தப் பல் தானாகவே விழுந்து விடுகிறது.
சிலுசிலுவென வேரை நனைக்கும் பயிர்களையும், வானை நோக்கி வளரும் மரங்களையும், சுவை மிக்க கனிகளைத் தரும் செடிகளையும் தருவன பறவைகளே! பறவைகள் விதைகளை இயற்கையின் மீது நம்பிக்கைகொண்டு மண்ணில் விதைக்கின்றன. அவை வளர்ந்து பெரிதானவுடன் பல்லுயிர்களும் பயன்பெறுகின்றன. பிஞ்சுகளே! நமது பறவைப் பயணத்தில் இந்த இதழில் நாம் காணவிருக்கும் பறவை மின் சிட்டு.
15 வகை மின்சிட்டுகள்!
மின்சிட்டு என்பது தெற்காசியாவில் காணப்படும் சிறிய வண்ணமயமான பறவையினமாகும். இப்பறவைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா, கருப்பு, சாம்பல், பழுப்பு ஆகிய வண்ணங்களில் தமிழ்நாடு மலைப்பகுதிகளிலும், வெப்ப மண்டல தெற்காசியா மற்றும் கிழக்காசியாப் பகுதிகளில் உள்ள காடுகளிலும், தோட்டங்களிலும் மரங்கள் அடர்ந்த மலைக்காடுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் இவற்றைக் குளிர்காலத்தில் மலை சார்ந்த சமவெளிப் பகுதிகளிலும் காண முடிகிறது. இச் செயல் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. மின்சிட்டுகளின் பேரினத்தின் கீழ் 15 வகையான சிற்றினங்கள் உள்ளன. இவை கூட்டமாகவும் மரங்களின் உச்சியில் மரங்கள் முழுவதும் போர்வை போர்த்தியது போல நெருக்கமாக குழுவாகவும் அமர்ந்து கொண்டு பூச்சிகளையும், சிலந்திகளையும் தங்களுக்கான உணவாய் உண்ணுகின்றன. இப்பறவைகள் முழு வாழ்க்கையையும் மரங்களுக்குள்ளாகவே அமைத்துக்கொள்கின்றன. இப்பறவை வலசைக்குச் செல்லாது.
மின்சிட்டுப் பறவை நீண்ட உடலையும் குட்டையான கால்களையும், நீண்ட வாலையும் கொண்டது. இதன் தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் கருமை நிறத்துடனும், உடலின் அடிப்பாகம், பிட்டம் மற்றும் வால் பகுதியில் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுவதால் இப்பறவையை எளிதில் அடையாளம் காணமுடிகிறது. பெண் பறவை வண்ணங்களில் வேறுபடுகிறது. உடலின் அடிப்பாகம், பிட்டம் மற்றும் வால் பகுதிகளில் மஞ்சள் நிறங்களைக் கொண்டிருக்கின்றன. இப்பறவை உடல் அமைப்பில் சிறியதாக இருந்தபோதிலும் மிக வேகமாகப் பறக்கும் திறனுடையது.
பின் பனிக்காலம் (பிப்ரவரி முதல் மார்ச்) முதல் குளிர்காலம் (ஆகஸ்ட் முதல் செப்டம்பர்) வரை இனப்பெருக்கக் காலமாகும். இக்காலகட்டத்தில் வயதிற்கு வந்த ஆண் மின் சிட்டு தனக்கான இணைப் பறவையைக் கவர, பெண் மின் சிட்டுவின் பார்வையில் படும்படி இறக்கைகளை அகல விரித்தப்படி உயரே பறந்து பின் மேலிருந்து கீழே சுழன்றபடியே வந்து மரக்கிளையில் அமரும். இதைக் காணும் பெண் பறவையின் கண்களில் கலங்கரை விளக்காய் பிரகாசமான ஒளி தோன்றி மறையும். தைப் பொங்கல் பானை நுரை போல் மனம் பொங்கி எழுந்து, இடைவெளியின்றி தன்னை எண்ணி நினைத்துக் கொண்டிருக்கும் ஆண் பறவையோடு எந்த இடைவெளியும் இன்றி இணை சேரும். கிளைகளில் ஒளிகின்ற காதல் பறவைகள் இருபது நொடிகளில் இருதய அறையெங்கும் மிருதங்க ஒலி கேட்கும். இந்நேரம் பொதுவாக காலை நேரமாயிருக்கும்.
இப்பறவைகள் உயர்ந்த மரங்களின் உச்சிக் கிளையின் மேற்பகுதியில் கோப்பை வடிவில் கூட்டைக் கட்டி அதில் இரண்டு முதல் நான்கு முட்டைகளையிட்டு ஊர் தூங்கும் நேரத்திலும் தங்களது அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றன. குஞ்சுகள் வானை நோக்கி கண் சிமிட்டியபடியே தானும் உதயசூரியனைக் காணப்போகிறேன் என்கிற குதூகலத்தில் தடைகளைத் தாண்டி முட்டையிலிருந்து வெளி வரும். வானம் திறந்திருக்கு – பறவைகள் பறப்பதற்கு.
இந்த உலகில் மனிதர்கள் மட்டுமல்ல; பிற உயிர்களும் சமமாக வாழ உரிமையுடையவை. ஆனால், எண்ணற்ற பறவைகள் பசியுடனும், பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாறி வரும் சூழல் காரணமாகவும் வனவிலங்குகளும், பறவையினங்களும் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து பாதிப்படைந்துள்ளன. இவற்றின் வலியைப் புரிந்து கொள்வதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் மனிதனின் அடிப்படைப் பண்பாகும். பறவைகளைப் பாதுகாக்கும் எண்ணம் மூச்சோடு கலக்கும் போது அன்றாடப் பயணங்கள் கூட உல்லாசப் பயணமாகின்றன.
அண்மைக்காலமாக புவி வெப்பமடைதல் பறவைகளின் இனபெருக்கத்தைக் குறைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இரை தேடும் ஆர்வத்தையும் குறைத்திருக்கிறது. அது போல புவி வெப்பமடைதல் மலர்களின் ஆயுளைக் குறைக்கிறது. வெயிலைச் சமாளிக்க மலர்களிலுள்ள புற ஊதாத் துகள்கள் உதவுகின்றன. துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூடுதலான வெப்பத்தைச் சமாளிக்கும். மலர்களில் இருந்து வரும் நறுமணம், வீரியம் எல்லாம் புவி வெப்பமடைதலின் காரணமாகக் குறைந்துள்ளன. அதிகரித்து வரும் வெப்ப அலைகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசும், இங்கிலாந்து அரசும் இணைந்து ஒரு வெப்ப மீள் திறன் மய்யத்தைச் சென்னையில் தொடங்கியுள்ளன. இந்த மய்யம் ஆசியாவுக்கான கால நிலை நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 2026 வரை செயல்படும். வெப்ப அபாய மேலாண்மையை ஒருங்கிணைத்தல், வெப்ப செயல் திட்டங்களை உருவாக்குதல், தொழில் நுட்பத்திறனை வலுப்படுத்துதல், கால நிலைத் தரவுகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான முதன்மை நிறுவனமாக இது செயல்படும். வெப்ப அபாய மேலாண்மைக்காக ஓர் அமைப்பை நிறுவிய இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. இத்தகைய பெருமைகளைத் தமிழர்களுக்கு வழங்கிய பெருமை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.
“பறவைகள் விண்ணில் வலம் வந்தால்
பல்லுயிர்கள் மண்ணில் வளம் பெறும்”<




