திரைக் கவர்ச்சி – கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

சிகரம்

“கவர்ச்சி எங்கே
கவனம் அங்கே”
என்பது உளவியல் தத்துவம். குழந்தைப் பருவம் முதற்கொண்டே ஒருவரைக் கவரக்கூடியவை பல உண்டு. வண்ணப் பொருள்கள், வண்ணப் பூக்கள், எரியும் விளக்கு, பூனை, பறவை, நாய், ஆடு, ஓடும் நீர், நிலவு, விண்மீன்கள் என்று பிள்ளைப் பருவத்தில் எத்தனையோ நம்மைக் கவரும்.
உண்ணும் உணவில் பல நம்மைக் கவரும். சந்திக்கும் மனிதர்களில் சிலர் நம்மைக் கவர்வர்; ஆடை, அணிகலன், வாகனம் என்று பல நம்மைக் கவரும்.
சிலரை விளையாட்டு கவரும்; சிலரை நூல்கள் கவரும்; சிலரைப் பூங்கா கவரும், செல்பேசியும், திரைப்படங்களும் பலரைக் கவரும். இவற்றுள் எவையெல்லாம் அதிகம் கேடு தருகின்றனவோ அவை அதிகம். கவனம்.
பாகற்காயை விட பலாச் சுளை கவரும், பருப்புச் சோற்றைவிட பரோட்டா கவரும். பேரீச்சையை விட, சாக்லெட் கவரும். கற்றுச் சிறப்பதைவிட சுற்றித்திரிவது பிடிக்கும்.
இங்குதான் பிள்ளைகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நம்மை ஈர்ப்பவை, கவரக்கூடியவை, நமக்குப் பிடிப்பவை எல்லாம் நமக்கு நன்மை தருமா? கேடு செய்யுமா? தெரிந்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்; தெரியச் செய்ய வேண்டியது பெரியவர்களின் கடமை!
பிள்ளைகள் சாக்லெட் விரும்பிச் சாப்பிடுவதா? அதைச் சாப்பிடக்கூடாது என்று கட்டளையிடுவதைவிட, கட்டாயப்படுத்து வதைவிட, ஏன் சாப்பிடக்கூடாது? எதனால் அது தவிர்க்கப்பட வேண்டும்? அதில் உள்ள கேடுகள் என்ன?
சாக்லெட்டை விட பேரீச்சம்பழம் எவ்வளவு சிறந்தது? உடலுக்கு ஊட்டமும், நலமும் தரக்கூடியது என்பதை எடுத்துக்கூற வேண்டும். சாக்லெட் சாப்பிடுவதால் உடல் பருமனாய் ஆகும், பல் சொத்தை ஏற்படும் என்று அதன் கேடுகளைப் படங்கள் மூலமோ, பாதிக்கப்பட்டவர்களைக் காட்டியோ அறிவுறுத்த வேண்டும்.
செல்பேசியைப் பிள்ளைகள் அதிகம் பயன்படுத்தும்போது எதைப்பார்க்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், ஏன் தவிர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்பனவற்றை பக்குவமாகப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
எந்த ஒன்றும் பிள்ளைகளை ஈர்க்கும்போதே அது கேடு செய்வதாயின் தொடக்கத்திலேயே பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி, அதற்கு அவர்கள் அடிமையாகிவிடாமல் தடுக்க வேண்டிய பெரிய கடமை பெரியவர்களுக்கு உண்டு. அக்கடமையை அவர்கள் தவறாது செய்ய வேண்டும்.
கேடான உணவுகள், கெட்ட பழக்கங்கள், பொய் கூறுதல், உண்மையை மறைத்தல், கட்டுப்பாடின்மை, ஒழுக்கமின்மை இவற்றை பிஞ்சுப் பருவத்திலிருந்தே தவிர்க்க, விலக்க அறிவுறுத்த வேண்டும், வழிகாட்ட வேண்டும்.
செல்பேசியும், திரைப்படங்களும் இன்றைய காலச் சூழலில் பிள்ளைகள், இளைஞர்கள் மத்தியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை கூரான கத்தியைப் போன்றவை. நல்லவற்றிற்கும் பயன்படும், தீங்கு செய்யவும் காரணமாக இருக்கும். செல்பேசியும், திரைப்படங்களும் நன்மையும் தரும், கேடும் செய்யும். காரணம் அவற்றுள் நல்லவையும் உள்ளன. கேடானவையும் உள்ளன.
எனவே, அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் எடுத்துக்கூறி வழிகாட்ட வேண்டும்.
மனிதவாழ்வு பல பருவங்களைக் கொண்டது. பிஞ்சுப் பருவம், பள்ளிப் பருவம், இளமைப் பருவம்… இப்படிப் பல. எந்தப் பருவத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதைப் புரிந்து நடக்கவேண்டும். அவர்களுக்கு பெரியவர்கள் புரியவைக்க வேண்டும்.
திரைப்படங்களும், செல்பேசியும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், அந்தந்தப் பருவத்திற்குரிய செய்திகள், பழக்கங்கள், செயல்கள் அமையும். அவற்றை மட்டுமே அறியக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால், செல்பேசியும், திரைப்படங்களும் வந்தபின் அந்த எல்லை, கட்டுப்பாடு, மறைப்பு நீங்கிவிட்டது. பெரியவர்கள் பார்க்கக் கூடியவற்றை, கேட்கக்கூடியவற்றை செய்யக்கூடியவற்றை பிஞ்சுக் குழந்தைகள் கூட பார்க்கவும், கேட்கவும் செய்யவும் கூடிய அவலம் நடப்பில் வந்துவிட்டது. ‘பிஞ்சிலே பழுத்தல்’ என்ற கொடும்நிலை இன்று மேலோங்கி நிற்கிறது.
போதைப் பொருள் பயன்பாடும், பாலுணர்வுச் செயல்பாடுகளும், வன்முறைச் செயல்களும் இளம் பருவத்திலேயே பின்பற்றப்படும் கேடான சூழல் பெருகிவருகிறது. திரைப்படங்களில் மறைக்கப்படும் காட்சிகள், செய்திகள் கூட செல்பேசிகளில் தடையின்றி கிடைக்கின்றன.
அறியாப் பருவத்தில், புரியாத நிலையில் பிஞ்சுகள் பெருமளவுக்குக் கெட்டழிய இவை கடினமாகின்றன.
வணிகர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்திற்காகச் செல்பேசியையும், திரைப்படங்களையும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். திரைக்கவர்ச்சி என்பது இன்று செல்பேசி வழியும் ஆதிக்கம் செலுத்துவதால், இரண்டும் கண்காணிக்கப்பட வேண்டியவையாய், எச்சரிக்கையாய் கையாளப்பட வேண்டியவையாய் மாறியுள்ளன.
சிறந்த அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள், புரட்சியாளர்கள், சாதனையாளர் களைவிட திரைப்பட நடிகர்கள் இளைஞர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அவலம் அதிகமாகி வருகிறது.
இளைய சமுதாயத்தையே வடிவமைக்கும் ஆற்றல் பெற்றவையாய், வாய்ப்புப் பெற்றவையாய் திரைப்படங்களும், செல்பேசியும் (சமூக ஊடகம்) மாறிவிட்டதால், எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் கூட, திரைக் கவர்ச்சியால் இளைஞர்களை ஆதிக்கம் செலுத்தும் சூழல் வந்துவிட்டது.
இந்த உண்மையைப் புரிந்து, சூழ்ச்சியாகத் திரைப்படங்களை நடிகர்கள் பயன்படுத்துகின்றனர். இளைஞர்களை, சிறுவர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய நடனம், சண்டைக் காட்சிகள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், காதல் காட்சிகள் போன்றவற்றைப் புகுத்துவதோடு, இளம்பிள்ளைகளோடு சேர்ந்தும் நடித்து, பிஞ்சுப் பருவத்திலேயே அவர்கள் நெஞ்சில் புகுத்திவிடுகின்றனர்.
அதன்பிறகு, அந்த நடிகர்களே அவர்களின் ரோல்மாடல் ஆகிவிடுகின்றனர். நடை, உடை, பழக்கவழக்கங்கள் எல்லாம் அந்த நடிகர்களின் பாணியிலே பின்பற்றப்படுகின்றனர். இதன் விளைவு இன்று மோசமாகி, அரசியல் தலைவர்களைக்கூட அவர்களையே ஏற்கும், கொண்டாடும் விழிப்பற்ற நிலை விரிவடைந்து விடுகிறது.
எனவே, பிஞ்சுகளும், மாணவர்களும், திரைப்பட நடிகர்களைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டும், தங்கள் வாழ்க்கை வழிகாட்டிகளாக, அறிவாளர்களை, கல்வியாளர் களை, தொண்டு செய்யக் கூடியவர்களைக் கொள்ள வேண்டும்; கொண்டாட வேண்டும், பின் பற்ற வேண்டும்.
ஆகவே, உங்களுக்கும், உங்கள் எதிர்காலத்திற்கும், நாட்டிற்கும் நல்லது. விழிப்போடு இருங்கள், எச்சரிக்கையாய் இருங்கள், சிந்தித்துச் செயல்படுங்கள், பெரியவர்கள் வழிகாட்டுங்கள்!<






