கதை கேளு கதை கேளு

விழியன்
போர்வையைப் போர்த்திக் கொண்டு மூவரும் வாசலில் கோலம் போடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். சிரானிகாவின் வீட்டு வாசலில் இரட்டையர்கள் கண்மணியும், கவினும் படபடப்பாக அமர்ந்து இருந்தனர். “நிஜமாத்தான். இருங்க, இன்னும் சில நிமிடங்களில் கோலம் உருமாறும் பார்!” என்றாள் சிரானிகா. ஆம். கோலம் வேறு வடிவம் எடுத்தது. கவினுக்குக் கைகள் நடுங்கின. “இது என்ன மேஜிக் (தந்திரக்) காட்சி போல இருக்கே” என்றான்.
இது தொடங்கியது ஒரு கணித மாநாட்டுக்குப் பின்னர்தான். சில நாட்களுக்கு முன்னர், “பாட்டி, எனக்குக் கோலம் போடக் கற்றுத்தாங்க” என்று சிரானிகா சொன்னதும் வியப்பாகப் பார்த்தார் பாட்டி. சிரானிகா ஏதாவது கிண்டல் செய்கிறாளோ என்று யோசித்தார். மாநாட்டில் கோலத்திற்கும் கணிதத்திற்கும் உள்ள இணைப்பை விளக்கி இருந்தனர். அதிலும் அந்தப் புள்ளிக்கோலம் ஒரு மாதிரி அவளுக்கு ஈர்ப்பைக் கொடுத்தது. வீட்டுக்கு வரும் வழியிலேயே தன்னிச்சையாகப் புள்ளிகள் வைத்து சுருள் சுருளாக ஏதோ வரைந்திருந்தாள். ஆனால், பாட்டியிடம் சில கோலங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று கேட்டாள்.
அன்று மாலையே நோட்டுப் புத்தகத்தில் சில புள்ளிக்கோலங்களைப் பாட்டி சொல்லிக் கொடுத்தார். சிரானிகா வசிப்பது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான். பல நூறு குடும்பங்கள் அங்கே வசிக்கின்றன. கோலம் போடுவதற்கு எல்லாம் அங்கே வசதி இல்லை. தன் வீட்டு மாடிப்படிக்கு அருகே காலியாக இருந்த இடத்தில் கோலம் போட்டுப் பழகினாள். அந்த மாடியில் உள்ள பசங்க எல்லோரும் விநோதமாகப் பார்த்தனர். சிரானிகாவிற்கு கோலமாவைப் பிடித்து, எப்படி புள்ளி வைப்பது என்றும் ஆரம்பத்தில் தெரியவில்லை. அய்ந்து விரல்களையும் பயன்படுத்தினாள்; பின்னரே பெருவிரல் மற்றும் ஆள்காட்டிவிரல் கொண்டு புள்ளிகளை வைத்தாள். அய்ந்துக்கு அய்ந்து கோலத்தை முதலில் போட்டாள் சிரானிகா.
மறுநாள் காலையில் அது ஏழுக்கு ஏழாகி இருந்தது. யாராவது அவள் போட்ட கோலத்தை அழித்து மாற்றி இருப்பார்களோ என நினைத்தாள். இரண்டாம் நாளும் கோலம் மாறி இருந்தது. யாரும் கலைக்கவில்லை. ஆனால், நேர்த்தியாக வேறு உருவத்தில் இருந்தது. அய்ந்தாம் நாள்தான் கண்மணிக்கும் கவினுக்கும் தெரிவித்தாள். இருவரும் நம்பவில்லை. சிரானிகா நடந்ததைத் திரும்பத் திரும்பச் சொன்னதால் நம்பவேண்டிய நிலைக்கு வந்தனர்.
“இன்னைக்கு நைட் கோலம் போட்டுட்டு, பக்கத்துலயே சேர் போட்டு உட்கார்ந்து பார்ப்போம்” என்று முடிவெடுத்தனர்.
இதோ, இப்போது உருமாற்றத்தைப் பார்த்துவிட்டனர். மூவரில் கண்மணி நிதானமாகப் இருந்தாள். “பதறாதீங்க, அந்தக் கோல மாற்றம் நமக்கு ஏதோ சொல்லுது. அந்த மாற்றத்தைக் கவனி. அது ஏதோ தாறுமாறாக மாறல. நீ முதல் நாளில் இருந்து பார்த்த உருவங்களை எல்லாம் சொல்லு” என்றாள். தனது கணக்கு ரஃப் நோட்டின் கடைசிப் பக்கத்தில் சிரானிகா சொன்னதை ஒவ்வொன்றாக எழுதினாள். அவற்றில் சிலவற்றை வரைந்தாள்.
“ஏ, இது ஒரு ‘க்ளூ’ போல இருக்கு. A12ன்னு வருது. ஆனால், A12ன்னா என்னன்னு தெரியலையே?” என்று கூறினாள். நமக்குத் தெரிஞ்சு 12A இருக்கு, அது நமக்குப் பக்கத்து க்ளாஸ் ரூம். வேற?” என்றான் கவின்.
“ஒருவேளை A12 அப்பார்ட்மெண்ட் ஏதாச்சும் இருக்குமோ?” என்றாள் சிரானிகா.
அவர்களுடைய குடியிருப்பில் அப்படி ஒரு கட்டடம் இருந்தது. நேரம் அப்போது இரவு 1 மணி. மின்தூக்கி வழியே இறங்கினால் மாட்டிக்கொள்வோம் என படிக்கட்டு வழியாக அய்ந்தாம் மாடிகளில் இருந்து இறங்கினர். A12 என்பதை நோக்கிச் செல்வது முட்டாள்தனம் என்றாள் கண்மணி. ஆனால், மற்ற இருவரும் அங்கே ஏதாவது கிடைக்கும் என்றனர். “Dude, follow Siranika hunch” என்றாள். A12 கட்டடத்தின் தரைத்தளத்தில் ஓர் உடற்பயிற்சிக் கூடம் (Gym) மற்றும் நூலகம் உள்ளது. நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. ஆனால் கவின் இருட்டான பகுதிக்கு சென்றான்.
“ஹே..” என்று கூச்சலிட்டாள் சிரானிகா.
அங்கே யாரோ ஒருவர் கவிழ்ந்து படுத்திருப்பதைப் பார்த்தான் கவின். வலியால் துடிக்கும் சத்தம் கேட்டது. அவள் அணிந்திருந்த உடைகள் விசித்திரமாக இருந்தன. மற்ற இருவரும் அருகில் வந்தவுடன் அவரது உடலைத் திருப்பினாள்.
“ஆரிக்..!” என்றாள் வியப்புடன்.
‘ஆரிக்கா? யார் இவர்?’ எனக் கண்மணியும் கவினும் குழம்பினர். “யேய், ஆரிக் தெரியாதா? ‘நட்சத்திரத் தனிமை’ நாவலில் வரும் கேரக்டர். விண்வெளிக்குச் சர்வசாதாரணமாப் போயிட்டு வர்ர இளைஞர். ஜூப்பிட்டர்ல இருந்து கல்லு எடுத்துட்டு வந்து, அவர் தங்கையிடம் கொடுப்பாரே, அவர்தான் ஆரிக். இங்க பாரு தோள் பட்டையில் ஈக்வேஷன், நெற்றியில் அதே குறி. இவர் ஆரிக்தான்” என்றாள் உறுதியாக.
என்னது, ஒரு நாவலில் இருந்து ஒரு கதாபாத்திரம் வெளிய வந்திருக்கா? அவர் பாக்கெட்டில் என்ன இருக்கும், அதில் என்ன எழுதி இருக்கும் என்பதைச் சரியாகச் சொன்னாள் சிரானிகா. வாயடைத்து நின்றனர் இருவரும். ஆனால், இப்ப நாம என்ன செய்யணும் என்றும் குழம்பி இருந்தனர். ஆரிக் மெல்லக் கண் சிமிட்டினார். “காப்பாத்துங்க…” எனச் சொல்லிவிட்டு மீண்டும் மாயமாகிவிட்டார். அருகே ஒரு துண்டுச் சீட்டு இருந்தது “எனது ஆற்றலை மீட்டெடுக்க கோணமலரைக் கொண்டு வாங்க” என்று இருந்தது. அங்கே தெரிந்த கொஞ்ச வெளிச்சத்தில் கண்மணி வாசித்தாள்.
“கோணமலரா??” என்று விழித்தான் கவின்.
“டேய், அது அந்த நாவலில் வரும் ஒரு செடி. இரு, அது என்னான்னு யோசிக்கறேன். அநேகமா கதை நடப்பது ஓர் இணை உலகத்தில் (Parallel World). அந்த உலகத்தில் கோணமலருக்கு இணையா நம்ம உலகத்தில் என்ன இருக்குன்னு யோசிப்போம். கோணமலரில் 137.5° கோணம் இருக்கும். ஒருவித சுழல் வளர்ச்சியும் இருக்கும். நம்ம உலகத்தில அப்படி…?” எனச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கண்மணி குறுக்கிட்டாள்.
“துளசி!”.
துளசிச் செடியை வைத்து இவர்கள் மூவரும் கடந்த ஆண்டே அது ‘தெய்வீகச் செடியா? மருத்துவச் செடியா?’ என ஆய்வுக்கட்டுரை எழுதி இருந்தனர்.
ஆம். அதுதான் கோணமலர். உடனே ‘எங்கே கோணமலர், ச்சே துளசி எங்கே இருக்கு?’ என யோசித்தனர். மாறனின் வீட்டுக்குப் பின்புறம் துளசி மாடம் இருந்தது நினைவுக்கு வந்தது. மூவரும் அங்கே சென்றனர். “மாடத்தையே தூக்கிடுவோமா?” என்றான் கவின். “அடேய், இதென்ன ராமாயணமா, சஞ்சீவி மலையை தூக்கிட்டுப் போற மாதிரி! துளசி இலையை மட்டும் பறிச்சால் போதும்” என்றாள் கண்மணி.
சில இலைகளை எடுத்துக்கொண்டு ஆரிக்கைப் பார்த்த இடத்திற்கு மீண்டும் சென்றனர். அங்கே அவரைக் காணவில்லை. அங்கேயே அந்தத் துளசி இலைகளை வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் முழுக்க மூவருக்குள்ளும் இதே பேச்சு. கண்மணி காலையிலேயே நட்சத்திரத் தனிமை நாவலைப் படிக்கத் தொடங்கினாள். வகுப்புகளுக்கு நடுவே வேகமாக வாசித்தாள். ”இன்னைக்கு நைட் ஆரிக்கைச் சந்திக்கிறோம்” என்றாள் கண்மணி.
அதே 12 மணிக்கு அதே A12க்குச் சென்றனர். ஆனால், ஏமாற்றம். அங்கே ஆரிக்கோ அல்லது வேறு எந்தக் குறிப்போ கிடைக்கவில்லை. துளசி இலைகளும் காணவில்லை. ஏமாற்றத்துடன் சிரானிகாவின் வீட்டை நோக்கி நடந்தனர். வீட்டுக்குள் செல்லும் முன்னர், வாசலில் இருந்த கோலத்தைக் கவனித்தனர். “ஹே, இங்க பாரு, இப்ப வேற ஒரு எண்ணைக் காட்டுது. B23”.
ஓடு! உடனே B23க்கு ஓடினார்கள் மூவரும். அங்கே இருக்கையில் ஆரிக் அமர்ந்து இருந்தார். மூவருக்கும் அதிர்ச்சி. “மூவருக்கும் மிக்க நன்றி” என்று சொன்னார். “எப்படி இதெல்லாம் சாத்தியம்?” என்றாள் சிரானிகா. எதுவும் சொல்லாமல் புன்னகை செய்தார் ஆரிக். “ஏன் கோலத்தை தேர்வு செய்தீங்க? எப்படி அந்த உலகத்தில் இருந்து வந்தீங்க? ஏன் துளசி? உங்களை யாரு காயப்படுத்தினது? எங்களை எப்படி தேர்வு செய்தீங்க? மாரல் ஆப் த ஸ்டோரி என்ன?” என விடாமல் கேள்விகளை அடுக்கினாள் சிரானிகா.
“எல்லாத்துக்கும் உடனுக்கு உடனே பதில் வேணுமா? தேடுங்க!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார் ஆரிக்.
வாயடைத்து மூவரும் நின்றனர். எங்கும் ஆரிக்கைக் காணவில்லை என மீண்டும் வீட்டை நோக்கி நடந்தனர். கோலம் இப்போது எந்த ஒரு சேட்டையும் செய்யாமல் அமைதியாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் ஒரு வாக்கியமாக மாறியது “To be continued”
பின்குறிப்புகள்:
- கோலம் காட்டும் A12 என்பது சாதாரண கட்டட எண் இல்லை. அது ‘A’ axis–இல் 12th புள்ளி. ஆரிக் உலகத்திலிருந்து வந்த pattern frequency நம் கோலத்தில் காட்டும் அந்தப் புள்ளித் திசையே ‘க்ளூ’வாக மாறியது.
- கோணமலர் அவர்களது உலகத்தில் fractal energy விட்டு வளரும். நம்ம உலகத்தில் அதற்கு இணை துளசிதான். துளசி இலைகள் golden-angle (137.5°) கோணத்தில் சுழல்படியாக வளர்கின்றன; இது ஆற்றலை நிலையாகக் கொண்டு வரும் ஒரே கட்டமைப்பு. அதனால்தான் ஆரிக்கின் உடல் அதற்கு உடனே பதில் கொடுத்தது
- நட்சத்திரத் தனிமை நாவல் இன்னும் யாராலும் எழுதப்படவில்லை.<




