நன்றிக் கடன் (உலகத் தாய்மொழி நாள் )

பெற்ற தாயைப் பேணுதல் போல்
பிறந்த மண்ணைப் போற்றுதல் போல்
சுற்றம், உறவை அணைத்தல் போல்
சூழ்ந்த நட்பைக் காத்தல் போல்
நற்ற மிழ்தன் நலம்தன்னை
நாளும் போற்றல் நம்கடமை;
உற்ற வாறு நாமெல்லாம்
உறுதி மொழியை ஏற்றிடுவோம்!
பற்றை வைப்போம் தாய்த்தமிழில்;
படித்தே உயர்வோம் தமிழ்த்தாயால்;
மற்ற மொழிகள் இருந்தாலும்
மாந்த ராய்இத் தமிழ்மண்ணின்
முற்றம் தன்னில் பிறந்ததனால்
முத்த மிழ்தன் மக்களெனப்
பெற்ற மாண்பைப் போற்றிடுவோம்;
பேரின் பத்தைப் பெற்றிடுவோம்!
மற்ற மொழிகள் எத்தனையோ
மறைந்த வரலா றிங்குண்டு;
வற்றிப் போகா உயிர்மொழியாய்
வாழ்வ தென்றும் நம்தமிழே;
கற்றுத் தெளிந்த யாவருமே
கன்னித் தமிழைக் காத்திடுவோம்;
பெற்று வளர்த்தத் தமிழ்த்தாய்க்குப்
பெரிய நன்றிக் கடனிதுவே!
– கே.பி.பத்மநாபன், கோவை




