தேனீ பேசுகிறது

அருமை யான பூங்காவில்
அலையும் சிறிய தேனீநான்!
நானே உணவு தேடுகிறேன்
நலமாய் உழைத்து வாழுகிறேன்.
இங்கே வந்த(து) ஒரு குடும்பம்
இருக்கையில் அமர்ந்த(து) அக்குடும்பம்
பலகா ரங்கள் குவிந்தன
பார்த்தேன் அந்தக் காட்சியை!
தொட்டுத் தின்ன எதுஎன்று
தொலைவில் இருந்து பார்க்கையிலே
புட்டியில் இருந்த தேன்அவர்கள்
புசிக்க உதவிடக் கண்டேனே!
ஆயிரம் ஆயிரம் பூக்களிலே
அலைந்து துளித்துளி யாய்ச்சேர்த்தோம்!
எந்த முயற்சியும் செய்யாமல்
இந்தக் கூட்டம் எம்தேனை
உறிஞ்சி அருந்தி மகிழ்வதனை
உற்றுப் பார்த்தேன் எனக்கேதும்
இல்லை இல்லை பொறாமையே
என்னால் பலபேர் வாழ்கின் றார்
என்பதை உணர்ந்த போதினிலே
எனக்கது இன்பம் பேரின்பம்!
– முனைவர் முரசு நெடுமாறன்




