சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் (நடந்த கதை-11)

விஷ்ணுபுரம் சரவணன்

இந்தியா முழுவதும் உள்ள தீண்டாமையை ஒழிப்பதற்காக முதன்முதலாக வைக்கத்தில் இந்தப் போரா ட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தைக் காப்பது அவசியம்’ என தமிழ் நாடார் சங்கத்தை சேர்ந்தவர்கள் அறிக்கை விட்டிருந்தாங்க. அந்தளவுக்கு தமிழ்நாட்டுலேயும் வைக்கம் போராட்டத்தைப் பற்றின தாக்கம் இருந்துச்சு செழியா?”
“ம்ம்… பெரியார் தாத்தாவை எப்போ கைது பண்ணினாங்க?”
“சொல்றேன். ‘வைக்கம் போராட்டத்துல பெரியாரின் பேச்சு மக்களை விழிப்படைய வைச்சுது. அதனால், அவரைக் கோட்டயம் மாவட்டத்துக்குள்ளே வரவோ, தங்கவோ கூடாதுன்னு 1924 ஆம் ஆண்டு மே மாசம் மூன்றாம் தேதியன்று, நீதிபதி தடை உத்தரவு போட்டார். இந்த உத்தரவுக்கு 17 ஆம் தேதி பதில் கொடுத்தார் பெரியார்”
“என்ன பதில் அம்மா?”
“உங்கள் உத்தரவுக்கு மதிப்புக் கொடுக்க முடியாததுக்கு வருந்தறேன்”
“அப்படின்னா… புரியலையே?”
“அதாவது இந்தத் தடை உத்தரவு அவரை அடக்குவதற்கும், அந்த இயக்கத்தை ஒழிக்கிறதுக்காகவும்தானு பெரியார் புரிஞ்சுகிட்டார். அதனால அந்தத் தடை உத்தரவை மீறப்போறேனு சொன்னாரு”
“ஓ! சூப்பரு”
“அந்த நேரத்துல பெரியாரோட இணையர் நாகம்மையும் அங்கே வந்திருந்தாங்க.”
“அவங்களும் போராட்டத்துல கலந்துகிட்டாங்களா?”
“ஆமா, மே மாசம் 20 ஆம் தேதி சத்தியாகிரகப் போராட்டத்துல நாகம்மையாரும் முன் வரிசையில நின்னாங்க. அன்னிக்கு மட்டுமல்ல, அதற்கு அடுத்தடுத்த நாட்களிலேயும் போனாங்க. ஒருநாள் அய்ந்து பெண்களோடு நாகம்மையார் வைக்கம் சத்தியாகிரப் போராட்டக் களத்துக்குப் போயிட்டாங்க. அங்கே இருந்த போலீஸ்காரங்க, நாகம்மையார்கிட்ட வந்து ‘நீங்க என்ன ஜாதி?’னு கேட்டாரு. அதுக்குப் பதில் சொல்லாமல் ‘எல்லோரும் பாகுபாடு இல்லாம இந்தத் தெருவுல நடக்கணும். அதுதான் எங்க கோரிக்கை’ னு உறுதியாச் சொல்லியிட்டாங்க”
“ம்ம்…”
“பெரியாருக்கு விதித்த தடை தொடர்பான விசாரணை மே மாசம் 22 ஆம் தேதி நடந்துச்சு”
“என்ன தீர்ப்புச் சொன்னாங்க அம்மா?”
“பெரியார் தன்னோட முடிவுகள்ல உறுதியா நிற்பார்ன்னு நமக்குத்தான் தெரியும்ல… சமாதானம் உண்டு பண்ணவே வைக்கத்துக்கு, தான் வந்ததாகச் சொன்னார். அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயாராக இருக்கேனும் தெளிவாகச் சொன்னார். அதனால அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைனு தீர்ப்புக் கொடுக்கப்பட்டுடுச்சு”
“ம்ம்… நானும் அப்படித்தான் ஆகும்னு நினைச்சேன். எந்த ஊர்ச் சிறையில அவரை அடைச்சிருந்தாங்க?”
“முதல் ஏழு நாள்கள் வைக்கம் காவல் நிலையத்தில் இருந்த சிறையிலேயும் அடுத்து ஆறுகுட்டி (அருவிக்குத்தி) என்ற ஊர்ல உள்ள சிறைச்சாலையிலேயும் அடைச்சிருந்தாங்க. தனக்குத் தண்டனை கொடுக்கப்படும்னு பெரியாருக்கு நல்லாத் தெரியும். அதனால சிறைக்குப் போவதற்கு முன்பே போராட்டம் தொடர்ந்து நடக்க சில ஏற்பாடுகள செய்திருந்தாரு, பெரியார் கைது செய்யப்பட்டதும் தமிழ்நாட்டுல இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்ல ஒருவரான வரதராஜுலு நாயுடுவை வைக்கத்திற்கு வரச் சொல்லி தந்தி கொடுத்தாங்க போராட்டக்காரங்க”
“ம்ம்…”
“மே மாசம் 26 ஆம் தேதி ராஜாஜி வைக்கம் சென்றாரு. சிறையில இருந்த பெரியாரையும் சந்திச்சாரு. அங்கே நடந்த பொதுக்கூட்டத்துலேயும் கலந்துகொண்டு உரையாற்றினாரு”
“இதெல்லாம் நடந்தாலும் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்துச்சா அம்மா?”
“ஆமா. அது திட்டமிட்டபடி சரியா நடந்துட்டுத்தான் இருந்துச்சு. வரதாராஜுலு நாயுடுவும் வைக்கத்துக்கு போறாரு. பல கூட்டங்கள்ல கலந்துக்கிறாரு. உடனே அவர் பதினைஞ்சு நாள்கள் பொதுக்கூட்டங்கள்ல பேசக்கூடாதுன்னு தடை விதிக்கிறாங்க. அதனால அவர் சில நாள்கள் தமிழ்நாட்டுக்கு போயிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வராரு. அதேபோல மே 31 ஆம் தேதி வைக்கத்துல இருந்த இருந்த ராஜாஜியும் ஆலப்புழைக்குப் போறாரு”
“அப்பறம் போராட்டம்?”
“அது தினமும் தொடர்ந்து நடந்துக்கிட்டுதான் இருந்துச்சு. போராட்டக்காரர்கள் அமைதியா ராட்டினத்துல (தக்கிளி) நூல் நூற்றுக்கிட்டு இருந்தாங்க.”
“ராட்டினம்னா?”
“அது நூல் நூற்பதற்கான கருவி. காந்தியார் போட்டோக்கள்ல பார்த்திருப்பியே… இரு காட்டுறேன்” என்ற அம்மா, லேப்டாப்பில் அதைக் காட்டினார்.
“ஓ! இதுவா… எங்க பள்ளிக்கூடத்துல இருக்கும் காந்தி போட்டோவுலகூட இருக்கு:
“போராட்டக் களம் பரபரப்பாகவே இருந்துச்சு. முன்னே இருந்ததை விட மக்கள் கிட்ட இந்த விஷயம் அதிகமாப் பரவுச்சு”
“ஓ!”
“இப்படியே மார்ச் மாத இறுதியில தொடங்கின போராட்டம் ஏப்ரல், மே மாதங்கள் முடிஞ்சு, ஜூன் மாதத்துலேயும் தொடர்ந்துச்சு. ஜூன் அய்ந்தாம் தேதி நாகம்மையாரோட சேர்த்து ஆறு பெண்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்தாங்க”
“ம்ம்”
“ஜூன் 15 ஆம் தேதி ஈழவர் ஜாதியில் பிறந்த இரண்டு பெண்களை அழைச்சிக்கிட்டு கோவிலுக்குள்ள போறதுக்கு முயற்சி செய்தாங்க நாகம்மையார். ஆனா, அங்கே இருந்தவங்க உள்ளே விடாம தடுத்துட்டாங்க”
“பெரியார் தாத்தா அப்ப சிறையிலதானே இருந்தாரு?”
“ஆமா. ஜூன் 21 ஆம் தேதி ஒரு மாத சிறைத் தண்டனை முடிஞ்சு ஆறுகுட்டி சிறைச்சாலையில இருந்து பெரியார் விடுதலை ஆகிறார்”
“ஒரு மாதம் முழுக்க சிறையில இருந்தாரா?”
“ஆமா, எப்பவுமே பெரியார் சிறைக்குப் போறதுக்கு தயங்கினதோ அஞ்சியதோ இல்ல. அவர் விடுதலையாகி வந்ததும் வைக்கத்துக்கு வராரு”
“மறுபடியும் வைக்கத்துக்கா?”
“ஆமா, படகுத்துறையில இருந்து போராட்டக்காரர்கள் ஊர்வலத்தோடு பெரியாரை அழைச்சிட்டுப் போனாங்க”
“அப்படின்னா, அவர் அங்க வரக்கூடாதுனு இருந்த தடை இப்போ இல்லையா?”
“இருந்துச்சு. அதை எல்லாம் ஏற்கக்கூடியவரா பெரியார் அன்னிக்கு மாலையில பெரிய பொதுக்கூட்டம் நடந்துச்சு. அதுல பெரியார் விளக்கமாப் பேசினார். காவல் துறை அடக்குமுறையைக் கண்டிச்சும், எப்பவுமே அகிம்சை முறைப் போராட்டத்துல இருந்து விலகிடக்கூடாதுனும் பேசினாரு. அப்போ பெரியாரை நோக்கி கூட்டத்துல இருந்து ஒரு கல் வீசப்பட்டுச்சு”
“அய்யய்யோ… பெரியார் தாத்தா அடிப்பட்டுட்டாரா?”
“இல்ல.. இல்ல.. அந்தக் கல் அங்கே நின்னுட்டு இருந்த ஒரு பையன் மேல பட்டுச்சு.”
“யார் அந்தக் கல்லை விட்டெறிஞ்சது?”
“போராட்டத்தை நிறுத்த பலரும் முயற்சி செஞ்சாங்க இல்லையா… அவங்கள்ல ஒருத்தவங்களா இருப்பாங்க.”
“ம்ம்… இருக்கும். இருக்கும். அதுக்கு அப்பறம் பெரியார் தாத்தா அங்கே சாதாரணமா போறதுக்கு அனுமதிச்சிட்டாங்களா அம்மா?”
“அதுக்கும் பல தடைகள் வந்துச்சு செழியா?”
“அப்படியா… என்ன தடைகள்?” <
(தொடரும்)




