AI ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கை வழிகாட்டி!(அறிவியல் வளர்ச்சி)

‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்
இன்றைய உலகம் தொழில்நுட்பத்தால் நிறைந்தது. மொபைல் போன், லேப்டாப் என நாம் எங்கும் ARTIFICIAL INTELLIGENCE (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பார்க்கிறோம். இது நமக்குப் பல உதவிகளைச் செய்தாலும், சில திருடர்கள் இதை வைத்து மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். புத்திசாலிப் பிஞ்சுகளாக நீங்கள் இதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
‘ஏஅய்’ மோசடிகள் என்றால் என்ன?
இப்போது இருக்கும் ‘ஏஅய்’ தொழில்நுட்பத்தால் ஒருவரின் குரலை அப்படியே நகலெடுக்க முடியும். அதாவது, உங்கள் குரலை ஒரு சில நொடிகள் கேட்டாலே, ‘ஏஅய்’ மூலம் நீங்கள் பேசுவது போன்றே யாராலும் பேச முடியும். இதற்கு ‘VOICE CLONING’ என்று பெயர்.
திருடர்கள் உங்கள் குரலில் உங்கள் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ போன் செய்து, “அம்மா, நான் ஆபத்தில் இருக்கிறேன், உடனே பணம் அனுப்புங்கள்” என்று பொய் சொல்லி ஏமாற்ற வாய்ப்புள்ளது. அதேபோல், உங்களைப் போலவே இருக்கும் போலி வீடியோக்களையும் (DEEPFAKES) அவர்களால் உருவாக்க முடியும்.
நீங்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
அந்நியர்களிடம் பேசாதீர்கள்! கேம் விளையாடும்போதோ அல்லது ஆன்லைனிலோ தெரியாத நபர்களிடம் உங்கள் குரலையோ, ஒளிப்படத்தையோ (Photo) பகிராதீர்கள்!
லிங்க்குகளைத் (Link) தொடாதீர்கள்! “உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது’ என வரும் கவர்ச்சிகரமான மெசேஜ்களை கிளிக் செய்யாதீர்கள்!
பெற்றோருக்கு நீங்கள் தரும் ‘சைபர்‘ அறிவுரை:
நீங்கள் ஒரு குட்டி ஆசிரியராக மாறி, உங்கள் பெற்றோரிடம் இந்தச் செய்திகளைச் சொல்லுங்கள்:
ரகசியக் குறியீடு (FAMILY PASSWORD): உங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு ரகசிய வார்த்தையை முடிவு செய்யுங்கள். யாராவது அவசரம் என்று போன் செய்தால். அந்த ரகசிய வார்த்தையைச் சொன்னால் மட்டுமே நம்பச் சொல்ல வேண்டும்.
பதற்றப்பட வேண்டாம்: உங்கள் குரலில் யாராவது போன் செய்து பணம் கேட்டால், உடனே பதற்றப்படாமல் உங்கள் பள்ளிக்கு அல்லது உங்களுக்கு நேரடியாகப் போன் செய்து சரிபார்க்கச் சொல்ல வேண்டும்.
தகவல் பகிர்வு: சமூக வலைதளங்களில் நமது தனிப்பட்ட விவரங்களைப் (போன் நம்பர், வீட்டு முகவரி) பகிர வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது ஒரு மாயாஜாலக் கோல் போன்றது. அதை அறிவோடும், எச்சரிக்கையோடும் பயன்படுத்தினால் நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கலாம். நீங்களே உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரண்!<


