தேர்வு அச்சம் தவிர்: தன்னம்பிக்கையுடன் வெற்றியை நமதாக்குவோம்!

சரவணா இராஜேந்திரன்
பயமே தோல்வியின் பாதி வடிவம்’ என்பார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூடத் தேர்வு அச்சத்தினால் தடுமாறுவது வருத்தத்துக்குரியது.
மாணவப் பருவத்தின் மிக முக்கியமான மைல்கற்களாகத் தேர்வுகள் கருதப்படுகின்றன. ஒரு மாணவன் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் கவனித்தவை, வீட்டில் பயிற்சி செய்தவை அனைத்தையும் வெளிப்படுத்தும் தருணம் இது. ஆனால், திறமையுள்ள பல மாணவர்கள் கூட ‘தேர்வு‘ என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைகிறார்கள். இந்தத் தேர்வச்சம் அவர்களின் இயல்பானத் திறனை முடக்கி, மதிப்பெண்களைக் குறைத்துவிடுகிறது.
தேர்வு அச்சம் ஏன் உருவாகிறது?
ஆண்டு முழுவதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில் தடுமாறுவதற்குப் பின்னால் உளவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.
தவறான வழிகாட்டுதல்கள்: சக மாணவர்கள் அல்லது மூத்த மாணவர்கள் சொல்லும் “இந்த ஆண்டு வினாத்தாள் கடினமாக இருக்கும்”, “இந்தப் பாடம் மிகவும் குழப்பமானது” போன்ற ஆதாரமற்ற தகவல்கள் ஒருவித பயத்தை விதைக்கின்றன.
வீண் ஆலோசனைகள்: பாடங்களைப் படிப்பதற்குப் பதிலாக, தேர்வைப் பற்றி நண்பர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் அலசுவது மாணவர்களின் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறது. மற்ற மாணவர்கள் எவ்வளவு முடித்திருக்கிறார்கள் என்ற ஒப்பீடு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது.
சரியான வழிகாட்டிகளின் பங்கு (ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்)
தேர்வு தொடர்பான அய்யங்கள் எழும்போதும், மனம் சோர்வடையும் போதும் மாணவர்கள் தகுந்த வழிகாட்டிகளை அணுக வேண்டும்.
ஆசிரியர்கள்: பாடத்தில் உள்ள நுணுக்கமான சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்பதே சிறந்தது. அவர்கள் பாடத்தை எளிமையாகப் புரிய வைப்பதோடு, தேர்வை எப்படி அணுக வேண்டும் என்ற நுட்பங்களையும் (EXAM TIPS) கற்றுத் தருவார்கள்.
பெற்றோர்: மாணவர்கள் தங்களின் பயத்தை முதலில் பெற்றோரிடம் பகிர வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான ஊக்கத்தையும், அமைதியான படிப்புச் சூழலையும் உருவாக்கித் தருவதன் மூலம் அவர்களின் பதற்றத்தைக் குறைக்க முடியும்.
சக மாணவர்களுடனான தொடர்பும் கவனச் சிதறலும்:
நட்பு என்பது படிப்புக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, தடையாக இருக்கக்கூடாது.
வரம்புகள்: பாடத்தில் அய்யம் இருந்தால் மட்டும் நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால், தேர்வு நேரத்தில் நீண்ட நேரம் அலைபேசியிலோ அல்லது நேரிடையாகவோ பேசுவது கவனத்தைச் சிதறடிக்கும்.
இடைஞ்சல்களைத் தவிர்த்தல்: குறிப்பாக இருபாலார் பயிலும் கல்வி நிலையங்களில், தேவையற்ற அரட்டைகள், மற்றும் தேர்வைக் குறித்த எதிர்மறை விவாதங்கள், படிப்புக்கு இடையூறாக அமையும். மற்றவர்களின் வேகத்தைப் பார்த்துப் பயப்படாமல், ஆசிரியர் வகுத்துக் கொடுத்த பாதையில் தனித்து நின்று பயிற்சி எடுப்பதே ஒரு மாணவனைத் தெளிவாக்கும்.
தேர்வு அச்சத்தைப் போக்கும் வழிமுறைகள்:
முறையான திட்டமிடல்: கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, பாடங்களை முன்கூட்டியே பிரித்து அட்டவணை போட்டுப் படிக்க வேண்டும்.
நேர்மறைச் சிந்தனை: “என்னால் முடியும்”, “நான் நன்றாகப் படித்திருக்கிறேன்” என்று நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் நலம்: போதிய உறக்கமும், சத்தான உணவும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது பதற்றத்தைக் குறைக்க உதவும்.
தேர்வு என்பது வாழ்வின் முடிவல்ல; அது நமது அறிவை ஆய்வு செய்யும் ஓர் எளிய வழிமுறை மட்டுமே! நண்பர்களின் வீண் பேச்சுகளுக்கும், தேவையற்ற வதந்திகளுக்கும் செவிசாய்க்காமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு செயல்படுவதே வெற்றிக்கான வழி. தேர்வு அச்சத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, தன்னம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு தேர்வினைச் சந்திப்போம்! உழைப்புக்கு ஏற்ற உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்.<




