ஜாதியற்ற மனிதன்(நம்ம ஊர் பாட்டி-7)


அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் படுத்துக் கிடந்தார் மீசைக்காரர் ஜெகநாதன். அவர் மனைவி மீனாட்சியும் மகன் சந்திரனும் டாக்டருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர்.
“டாக்டர்… அவருக்கு இப்ப எப்படி இருக்குங்க?” என்று அழுதபடியே கேட்டார் அவர் மனைவி மீனாட்சி.
“அம்மா! உங்க பையன் ரத்தத்தைக் கூட டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டோம். அது வேற பிளட் குரூப்பா இருக்கு. நாங்க என்ன செய்ய முடியும்? பக்கத்துல உள்ள பிரைவேட் ஆஸ்பத்திரியிலேயும் கேட்டுட்டோம். அங்கேயும் இல்லியாம். ரத்தம் நெறைய வெளியேறிட்டதுனாலே உடனடியா ரத்தம் ஏத்தணும்”. என்றார் டாக்டர்.
“டாக்டர் கவலைப்படாதீங்க! இதோ இந்தத் தம்பி ரத்தம் நீங்க தேடுற ஒ நெகட்டிவ் … பிளட் குரூப்தான். உடனே அவரு உயிரைக் காப்பாத்த ஆக வேண்டியதைப் பாருங்க”…. என்றார், அங்கு வந்த பாட்டியம்மா.
“வாங்க தம்பி!”…. ‘நர்ஸ்!!’ என்று அழைத்தபடி வந்து நின்ற இளைஞனுடன் பக்கத்து அறைக்குள் நுழைந்தார் டாக்டர்.
“யாரும்மா நீங்க! திடீர்னு ஒரு பையனைக் கூட்டிக்கிட்டு வந்து அந்தத் தம்பி ரத்தம் குடுப்பார்னு சொல்றீங்க. எனக்கு ஒண்ணுமே புரியலியே…” என்றார் மீனாட்சி.
“எதுவும் இப்பப் புரிய வேணாம். அவர் உயிர் பிழைக்கட்டும். மத்ததை அப்பறம் பேசிக்கலாம். அமைதியா இருங்க “என்றார் பாட்டி.
“கடவுள் மாதிரி வந்து காப்பாத்துறீங்களே, உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே” என்றார் மீனாட்சி
பாட்டி சிரித்தபடி…. “மாதிரிக்குக் கூட கடவுள் வர மாட்டார். எனக்கு நன்றியெல்லாம் வேணாம். வேலை ஆகட்டும்” என்றாள் பாட்டி.
மீனாட்சி அம்மாவும், மகன் சந்திரனும் நடப்பதை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீர் என பாட்டி அழைத்து வந்த இளைஞரின் ரத்தம் ஏற்றப்பட்டு மீசைக்காரர் ஜெகநாதனுக்கு சுய நினைவு திரும்பியது. கண் விழித்துப் பார்த்தார். மனைவியும் மகனும் அவர் அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஜெகநாதன் மெதுவாக மூச்சை இழுத்து விட்டபடி, “மீனாட்சி! நான் இப்ப எங்கே இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு?” என்று மெதுவாகக் கேட்டார்.
“நீங்க இன்னைக்கு விடியக் காலையிலே அஞ்சு மணி இருட்டுல நம்ம தோட்டத்துல கிணத்துக்கு வெட்டுன முப்பது அடி பள்ளத்திலே தவறி விழுந்துட்டீங்க. ஊரே சேந்து உங்களைத் தூக்கிக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியிலே சேத்தாங்க. நம்ம ஊருலே திண்ணை வச்ச ஓட்டு வீட்டுல புதுசா வந்திருக்கிற பாட்டியம்மா ஒரு வாலிபப் பையனைக் கூட்டிக்கிட்டு வந்துது. அந்தத் தம்பி ரத்தம் கொடுத்ததுனாலே உசுரு பொழச்சு இருக்கீங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் மனைவி மீனாட்சி.
“சரியான நேரத்துல அந்தப் பாட்டியம்மா மட்டும் அந்தப் பையனைக் கூட்டி வந்து ரத்தம் தரலேன்னா…. உங்களை உசுரோடவே பாத்திருக்க முடியாதுப்பா….” என்றார் மகன் சந்திரன்.
“ஆமாங்க மிஸ்டர் ஜெகநாதன், நீங்க கீழே விழுந்து தலையிலே அடிபட்டதனால நிறைய ரத்தம் போயிடுச்சு. வரதன்னு உங்க ஊருக்குப் பக்கத்து ஊரு தம்பி வந்து ரத்தம் தந்ததாலே தான் உங்களைக் காப்பாத்த முடிஞ்சுது.
இனி உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அடிபட்ட காயம் ஆறிப் போச்சுன்னா எல்லாம் சரியாயிடும். அது வரைக்கும் நல்லா ரெஸ்ட் எடுங்க”. என்றார் டாக்டர்.
“ரொம்ப நன்றி டாக்டர். நான் எப்ப வீட்டுக்குப் போவேன்…” டாக்டரைப் பார்த்துக் கேட்டார் ஜெகநாதன்.
“ரெண்டு, மூணு நாள் கழிச்சுதான் நீங்க வீட்டுக்குப் போக முடியும்” டாக்டர்.
“எல்லாம் நல்லா ஆனபிறகே அனுப்புங்க டாக்டர்” என்றார் மீனாட்சி.
“ஒகே! ஓகே! மிஸ்டர் ஜெகநாதன் நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லியபடி நகர்ந்தார் டாக்டர்.
காலை நேரம்…
பாட்டி வீட்டு வாசலில் இரு சக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. மீசைக்கார ஜெகநாதனின் மகன் சந்திரன் ஓட்டி வர, அதிலிருந்து இறங்கினார் ஜெகநாதன். கால் தங்கித் தாங்கி மெதுவாக நடந்து வாசலில் நின்று “பாட்டியம்மா! பாட்டியம்மா!” என்று குரல் கொடுத்தார்.
உள்ளிருந்து வந்த பாட்டி ஜெகனாதனைப் பார்த்ததும். “அடடே வாங்க! வாங்க! எங்க வீட்டுக்கெல்லாம் கூட வருவீங்களா? பரவாயில்லியே… அந்த அளவுக்கு உடம்பு குணமாயிடுச்சா?” என்றார்.
“பாட்டி! உடம்பு மட்டுமில்லே, என் மனசும் குணமாயிடுச்சு! உங்களை நேரிலே பாத்து நன்றி சொல்லத்தான் வந்தேன்”, என்றபடி மகனைப் பார்த்தார் ஜெகநாதன்.
மகன் தன் கையில் வைத்திருந்த பையை நீட்டினான். அதை வாங்கி, “இந்தாங்க இது என் நன்றிக் காணிக்கை“ என்று நீட்டினார்.
அந்தப் பையை வாங்க மறுத்தபடி “அய்யய்யே! இதெல்லாம் எனக்கு எதுவும் வேணாம். எனக்கு உண்மையிலேயே நன்றி சொல்லனும்னு விரும்புனா அரசுப் பள்ளிக்கூட சத்துணவு ஆயா சொக்கம்மா மேலே நீங்க கொடுத்த பொய்க் குற்றச்சாட்டைத் திரும்ப வாங்கிட்டு மறுபடி அவங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்க, அதுபோதும்”. என்றார் பாட்டி.
ஜெகநாதன் “என் ஜாதித் திமிருக்குக் கிடைச்ச தண்டனை தான்… நான் வெட்டுன பள்ளத்திலே நானே தவறி விழுந்தது. சொக்கம்மாவுக்கு இனி எந்தச் சிக்கலும் இருக்காது. அதை நான் சரி பண்ணிடுறேன்”. என்றார் ஜெகநாதன்.
“பள்ளத்திலே விழுந்த காயம் ஆறுதோ இல்லியோ… உள்ளத்திலே விழுந்த பள்ளம் மாறுதே அதுவே போதும். போயி ஓய்வெடுங்க” என்றார் பாட்டி.
“பாட்டியம்மா! நீங்க கூட்டிக்கிட்டு வந்து எனக்கு ரத்தம் குடுத்த தம்பி வரதன் யாரும்மா?”
“கட்டாயம் தெரிஞ்சுக்கணுமா?”
“ஆமா! இவ்வளவு பெரிய உதவி செய்து என்னை உசுரோட உலவ வச்ச அவரைத் தெரிஞ்சுக்க வேணாமா?”
“அந்த வரதன் வேற யாருமில்லே… நீங்க ஜாதியக் காரணம் காட்டி வேலையே விட்டுத் தூக்க நினைச்ச அரசுப் பள்ளி சத்துணவு அம்மா சொக்கம்மாவோட ஒரே மகன். அவனுக்கும் உங்க ‘ஓ நெகட்டிவ்‘ ரத்தம் தான்.”
மறுபடியும் ஒரு முறை பள்ளத்தில் விழுந்தது போல் இருந்தது ஜெகநாதனுக்கு.
“ஜாதிப் பெருமையை விட ரொம்ப ரொம்ப அவசியமானது அடுத்த மனிதனை நேசிக்கிற அன்புதான். அந்தத் தம்பி வரதன் நேத்து ராத்திரி சிங்கப்பூருக்குக் கிளம்பிப் போயிட்டான். அங்கே வேலை கிடைச்சுடுச்சு. இனி கயிறு கட்டி மனிதர்களை ஜாதியாப் பிரிக்காம சமத்துவம்கிற கயிறாலே… எல்லாரையும் ஒன்னாச் சேக்க முயற்சி பண்ணுங்க.” என்றார் பாட்டி.
ஜாதியற்ற மனிதனாக ஜெகநாதன் கண் கலங்கியபடி பாட்டியையே பார்த்துக் கொண்டு நின்றார்.
ஜாதி எனும் அழுக்கில்லாத புதிய ஜெகநாதன் தத்தி நடந்து மோட்டார் வாகனத்தில் புறப்பட்டார். இதையெல்லாம் வீட்டுத் திண்ணையில் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் அப்புவும், அகிலாவும் ஓடி வந்து பாட்டியைக் கட்டி அணைத்துக் கொண்டனர். <
(பாட்டியின் லூட்டி தொடரும்)



