வெறுப்பற்ற கல்வி வேண்டும்!(நினைவில் நிறுத்துவோம்)

சிகரம்
வாழ்க்கையென்பது உல்லாசமாய்ச் சுற்றி, விரும்பியதைச் சுவைத்து மகிழ்ந்து, சுகம் காண்பது அல்ல. மாறாக, கல்வி, அறிவுதிரட்டல், நுட்பமாய்ச் சிந்தித்தல், சாதிக்க நினைப்பதை – அடைய நினைப்பதை – அதீதமான உழைப்பின் மூலம் பெறுதல். அதன் மூலம் நிறைவு பெறுதல் என்பதே வாழ்க்கை ஆகும்.
பருவமும் இலக்கும்:
நோக்கம் என்பது பருவத்திற்கு ஏற்ப மாறும். பிஞ்சுப் பருவத்தில் இருக்கும் இலக்கு, பள்ளிப் பருவத்தில் மாறும். பள்ளிப் பருவத்தில் இருக்கும் இலக்கு கல்லூரிப் பருவத்தில் மாறும், கல்லூரிப் பருவத்து இலக்கு குடும்ப வாழ்வில் மாறும்.
பிஞ்சுப் பருவ இலக்கு:
பிஞ்சுப் பருவத்திற்கென்று பெரிய இலக்குகள் என ஏதும் இருக்க வாய்ப்பில்லை. பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள் ஆகியோரைச் சார்ந்து வாழும் பருவம். அப்பருவத்தில் மற்ற குழந்தைகளோடு ஓடியாடி, துள்ளித் திரிந்து மகிழ்வது தான் பெரும் விருப்பமாக இருக்கும். அடுத்து, தாங்கள் விரும்பிய தின்பண்டங்களை வாங்கித் தின்னப் பிடிக்கும். அதன் மீதான நாட்டம் பிஞ்சுப் பிள்ளைகளைத் தூண்டும். விளையாட்டுப் பொருள்களை அதிகம் பயன்படுத்த ஆர்வம் எழும். பள்ளிக்குச் செல்வதும், பாடம் படிப்பதும் பிடிக்காமல் இருக்கும்.
பள்ளிப் பருவம்:
குழந்தைப் பருவத்தைக் கடந்து பள்ளிப் பருவம் வரும்போது பிஞ்சுகளுக்குப் படிப்படியாக பொறுப்புகள் வரும். சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்லுதல், நாள் முழுவதும் பள்ளியில் அமர்ந்து பாடம் கேட்டல், வீட்டுக்கு வந்த பின்பும் ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களைச் (HOME WORK) செய்தல் என்று ஒன்றைத் தொடர்ந்து இன்னொரு வேலையும் இருக்கும். வெறுப்பு வரும்.
வெறுப்புக் கொள்ளாமல் விருப்பமாய்ச் செய்யப் பழக்குதல்:
நாம் எந்த ஒன்றையும் எடுத்த எடுப்பிலேயே விரும்புவதும், வெறுப்பதும் கூடாது. எதையும் நன்கு அறிந்த பின்பே விரும்ப வேண்டும் அல்லது விலக்க வேண்டும். இது பொருளுக்கும் பொருந்தும்; மனிதர்க்கும் பொருந்தும்.
‘சாக்லேட்’, ‘அய்ஸ்கிரீம்’, ‘சிப்ஸ்’ என்று பல உணவுப் பொருள்களைப் பார்த்த மாத்திரத்திலே குழந்தைகள் விரும்பும் உளநிலையுள்ளது.
அதேபோல் செல்பேசியில் காட்சிகளைப் பார்ப்பதும், தொலைக்காட்சி (T.V.)யில் காட்சிகளைப் பார்ப்பதும் குழந்தைகளை ஈர்க்கும். ஆனால், பாடப் புத்தகங்களைக் கண்டால் ஆர்வம் ஏற்படுவதில்லை; வெறுப்பு வரும்.
பருப்புச் சோறு, அவித்த முட்டை, ஆட்டு எலும்பு சூப், வேகவைத்து மசித்த கீரை இவற்றை பிள்ளைகள் பெரிதும் விரும்புவதில்லை; வெறுக்கவும் செய்வர்.
ஒன்றை விரும்பவும், வெறுக்கவும் அதன் புறத்தோற்றமே முதன்மைக் காரணியாக அமைகிறது. அதனால் தான் குழந்தைகள் எளிதில் புரிந்து படிப்பதற்கேற்றவாறு பாட நூல்கள் அவர்களை ஈர்த்துப் படிக்கத் தூண்டும் வண்ணம் கவர்ச்சியாகத் தயாரிக்கப்படுகின்றன.
குழந்தைகள் நல்லனவற்றை வெறுக்கவும், கேடானவற்றை விரும்பவும் செய்வதற்குப் பெற்றோரின் அணுகுமுறைகளும் கூட பெரிதும் காரணமாய் அமைகின்றன.
பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகள் மீதுள்ள அன்பால், பற்றால், பாசத்தால், சாக்லேட், அய்ஸ்கிரீம் போன்ற பொருள்களை குழந்தைப் பருவத்திலே அதிகம் கொடுத்துப் பழக்குகின்றனர். விருந்தினராக வரக்கூடிய உறவினர்களும் இது போன்ற பொருள்களையே அதிகம் வாங்கிவந்து தருவர்.
பிஞ்சுப் பிள்ளைகள் முதலில் ஒரு பொருளின் சுவை அறிந்து, அதை விரும்பிவிட்டால், அதையே அடம்பிடித்துக் கேட்பர். அதன்பின் நல்ல பண்டங்களைக் கொடுத்தால் அதை வெறுத்துத் தள்ளுவர்.
எனவே, குழந்தைகளுக்கு எது நல்லதோ அதை மட்டுமே அவர்களுக்கு முதலில் அறிமுகம் செய்து பழக்க வேண்டும். கேடான, சுவையானவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
ஆசைக்கு ஒரு நாள், இன்றைக்கு மட்டும் என்று தொடங்குவது தான், அதுவே வழக்கமாக மாறிவிடுகிறது.
சாக்லேட் சாப்பிட்டுப் பழகிய குழந்தைகளுக்கு, அதன் பின் எந்த நல்ல பொருளைக் கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
அதே போல் குழந்தைகளுக்கு செல்பேசி காட்சிகளையும், டி.வி. காட்சிகளையும் காட்டிப் பழகிவிட்டால், அதன்பின் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
எனவே, பிஞ்சுப் பருவத்திலே எண்கள், எழுத்துக்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உருவப் பொம்மைகளையோ அல்லது படங்களையோ காட்டி அவற்றைப் பார்த்துச் சொல்லும்படி பழக்கிவிட்டால், அதன்பின் புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பர். மாறாக முதலிலே குழந்தைகளிடம் செல்பேசியைக் கொடுத்து பார்க்கப் பழக்கினால் அவர்கள் பாடப் புத்தகங்களை வெறுக்கவே செய்வர்.
அதே போல் பாடப் புத்தகங்களை எழுத்து வடிவில் முதலில் காட்டுவதைத் தவிர்த்து, படக்காட்சிகளைக் காட்டி கருத்துகளைக் கூறினால் பிள்ளைகள் ஆர்வமுடன் கேட்பர்.
பாடத்தில் உள்ள செய்திகளையே நேரடியாகப் படிக்கச் சொல்லாமல் கதை சொல்வது போல் கூறினால் பிள்ளைகள் ஆர்வமுடன் கேட்பர். பிள்ளைகளுக்கு பாடப் புத்தகங்களைக் காட்டிச் சொல்லித் தருவதற்கு முன் கதைகள் கூறி பிள்ளைகளுக்கு ஆர்வம் உண்டாக்க வேண்டும். சிறு சிறு செய்திகளையும் கதை போலக் கூறி விளக்க வேண்டும். பிள்ளைகளையும் கூறும்படிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களுக்கும் கற்பனைத் திறனுடன், கருத்துகளை வெளியிடும் ஆற்றலும் வளரும்.
பிஞ்சுப் பருவத்தில் விளையாட்டாகக் கற்பிக்க வேண்டும்.
எடுத்த எடுப்பிலே பாடப்புத்தகம், கரும்பலகை, கையில் பிரம்பு, மிரட்டல், உருட்டல் என்பது கற்பித்தல் முறையாகாது. மாறாக, கற்பிக்கும் ஆசிரியர்கள் தாயாக, தந்தையாக மாறி, பிள்ளைகளிடம் பாசம் காட்டி, அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டே சொல்ல நினைக்கும் செய்தியை அவர்கள் உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டும்.
மூன்று வயதிலே தந்தை தாயோடு நெருங்கி, அவரின் அரவணைப்பில் வளர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, பாடப் புத்தகங்களை அடுக்கி அச்சுறுத்துவது சரியான‑ கல்வி முறையாகாது. இதைப் பெற்றோர்களும், கல்வியாளர்களும், அரசும் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முடிந்த அளவுக்குப் பள்ளியில் சேர்க்கப்படுவதற்குரிய வயதை உயர்த்த வேண்டும். 5 வயதுக்கு முன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது சரியா என்பதை நாடு அளவில் உளவியல் வல்லுநர்களும், கல்வியாளர்களும் கூடி, கட்டாயம் முடிவெடுக்க வேண்டும். அதுதான் பிள்ளைகளின் உடல்நலத்துக்கும், உள்ள நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்றதாய் இருக்கும். <




