இயற்கையைக் காப்போம்!

காடு நன்றாய்ச் செழித்தால்தான்
காலம் தவறா மழைபொழியும்;
பாடு பட்டே மரங்களையே
பாது காத்தல் நம் கடமை!
நாடு பசுமை யாயிருக்க
நதியும் நீரும் பெரும்தேவை;
கேடு செய்யும் கழிவுகளால்
கெடுக்க வேண்டாம் நதிநீரை!
ஆடும் மாடும் பசியாற
அங்கும் இங்கும் புல்வேண்டும்;
வாடும் மாந்தர் பசிபோக்க
வயலில் நெல்லும் வேண்டும்தான்;
மேடு பள்ள நிலம்தன்னை
மேழி கொண்டே உழுதிடுவோம்;
ஊடு பயிரும் வளர்த்திடுவோம்;
உயர்வாய் நிலத்தைப் போற்றிடுவோம்!
காடும் நிலமும் நதிநீரும்
காற்றும் இயற்கைச் செல்வங்கள்;
ஈடும் இணையும் இல்லாத
இவற்றைக் காத்தல் நம்கடமை;
வீடும் நாடும் குவலயமும்
விலையில் லாத உயிரினமும்
கேடும் இன்றி வாழ்ந்திடவே
கேண்மை நமக்கிங்(கு) இயற்கையே!
– கே.பி.பத்மநாபன், கோவை




