வடமுனை ஆலா (ARCTIC TERN) (பறவைகள் அறிவோம்-26)

பி.இளங்கோ
இந்தப் புவி உலகில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த உயிரினமாகப் பறவையினம் திகழ்கிறது. பறக்கும் திறன் படைத்த பறவையினங்களில் நெடுந்தூரம் பறக்கக் கூடிய ஆற்றல் பெற்ற பறவை ஆர்டிக் ஆலா. இப்பறவை வலசைக்காக ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு (ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை) சுமார் 12,000 மைல் தூரம் பறந்து செல்கின்றது.
சுமார் 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் பூமியில் தோன்றின. அவற்றில் சில மரத்துக்கு மரம் தாவியும், குதித்தும், ஓடியும் கொண்டிருந்தன. காலப்போக்கில் அவற்றின் விரல்கள் மெதுவாகப் பரிணாம மாற்றம் அடைந்து இறக்கைகளாக மாறின. அந்த இறக்கையைக் கொண்டு அவற்றால் சிறிது தூரம் பறக்கவும் முடிந்தது. அதன் வழித் தொடர்ச்சியாக இப்புவியில் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியதுதான் இன்று நாம் காணும் பறவையினம்.
பறவையின் உடலில் உருவாகும் புரதப் பொருள்களிலிருந்துதான் இறகுகள் உருவாகின்றன. பல ஆயிரம் இறகுகளைக் கொண்டதுதான் இறக்கைகள். சுமார் ஆயிரம் இறகுகளிலிருந்து 25,000 இறகுகள் வரை கொண்ட பறவைகள் இருக்கின்றன. பொதுவாக வானம்பாடிப் பறவைக்கு 1,500 இறகுகளும், கழுகுக்கு 5,000த்திலிருந்து 8,000 இறகுகளும், வாத்துக்கு சுமார் 12,000 இறகுகளும், அன்னப்பறவைக்குச் சுமார் 25,000 இறகுகளும் உள்ளன. இறக்கையைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால் பறவையின் தலைப் பகுதியில் உள்ள இறக்கை தடிமனாகவும், வால் பகுதியை நோக்கிச் செல்லச் செல்லக் கூர்மையாகவும் செல்லும். பறவைகளின் இறகுகளில் பலவகைகள் உள்ளன. சில இறகுகள் நீளம் அதிகமாகவும், சில இறகுகள் நீளம் குறைந்தும் காணப்படுகின்றன. பெரும்பாலும் பறவைகளின் தன்மைக்கும், பயன்பாட்டுக்கு ஏற்பவும் வகைப்படுகின்றன. மேலும், இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு உள்ளது. அந்தத் தண்டின் இருபுறமும் சிறிய நுண் எலும்புகளைப் பார்க்கலாம். இந்த நுண் எலும்புகளுக்கிடையே சிறிய ஓட்டையுடன் கூடிய மூடி போன்ற அமைப்புகள் உள்ளன. இவை சிற்றிழைகள் என்றழைக்கப்படுகின்றன. இவ்விழைகள் பறக்கும்போது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க உதவுகின்றன. நடுப்பகுதியில் இரண்டு பக்கமும் சரியான அளவில் இருக்கும் இறகை, வால் இறகு என்றழைப்பார்கள். இந்த இறகு பறவை பறக்கும்போது வளைந்து, நெளிந்து செல்லவும், அதே சமயம் பறவையின் பறக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தி பறவை இறங்க நினைக்கும், குறிப்பிட்ட இடத்தில் இறங்கி மிகச் சரியாக அமரவைக்கவும் பயன்படுகின்றன. அதுபோல, இறகும், தண்டின் ஒரு பக்கம் அதிகமாகவும், மறுபக்கம் குறைவாகவும் காணப்படும். பறவை சிறகை விரிக்கும்போது, இறகுகள் குறைவாக உள்ள பகுதி இறக்கையின் உள்நோக்கியும், அதிகமாகக் காணப்படும் பகுதி வெளியேயும் சென்று வழவழப்பான இறக்கை அமைப்பை உருவாக்குவதால் எளிதாகப் பறப்பதற்கு உதவுகிறது. மேலும், கீழ் இறகு என்ற அமைப்பு மூலம் பறவைகளின் உடலை குளிரில் இருந்தும், மழையிலிருந்தும், அதிக வெயிலிலிருந்தும் காப்பாற்றிக் கொள்கிறது. அதனைத் தொடர்ந்து பறவைகள் பறந்து கொண்டிருக்கும் போது இறகுகள் யாவும் சரியாக விரிந்து உள்ளனவா என்பதையும், பறக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றனவா என்பதையும் உன்னிப்பாகக் கவனித்துக் கூறுவதற்கென்று சில இறகுகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அழகுக்காகவும் தனது இணைப் பறவையைக் கவர்ந்திழுக்கவும் தனிப்பட்ட இறகுகளும் உள்ளன. பறவை வளர்ச்சி அடையாத போது இருக்கும் இறகுகள், வளர, வளர அவற்றுக்கு உகந்ததாக இருப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய இறகுகளை உதிர்த்து புதிய இறகுகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. இந்த இறகைச் சுற்றியுள்ள சிற்றிழைகள் உடைந்து பொடிப்பொடியாக மாறி, ஒரு வழுவழுப்பான படலத்தை இறகுகள் மீது உருவாக்குகின்றன. இதுபோன்ற இறகுகள் தண்ணீரில் மிதக்கும் பறவைகளுக்கு மிகவும் அவசியமாகின்றன. இந்த இறகின் உதவியால் அவற்றால் இலகுவாகத் தண்ணீரில் மிதந்து செல்ல இயலும். இவ்வளவு சிறப்புப் பெற்ற பறவையினங்களில் பெரியார் பிஞ்சு வாசகர்களே! இன்று நாம் காணவிருக்கும் பறவையினம் வடமுனை ஆலா (ARCTIC TERN). நெஞ்சில் அச்சங்கள் இல்லாமல், நீண்ட தூரங்களைத் துயரமாக எண்ணாமல், உலகிலேயே மிக நீண்ட தூரம் வலசை செல்லும் பறவையினம் வடமுனை ஆலா. வடதுருவ ஆர்க்டிக் பகுதியிலிருந்து தென்துருவ அண்டார்டிகா வரை ஆண்டுக்குச் சுமார் 35,000 முதல் 70,000 கி.மீ. வரை பயணம் செய்யும் இப்பறவைகள் ஓராண்டில் இரண்டு கோடைக் காலங்களை அனுபவிக்கின்றன. வடமுனை ஆலாவின் வாழ்நாள் சுமார் 35 ஆண்டுகள். இக்காலத்தில் பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான சராசரி தொலைவான தோராயமாக 3,84,400 கி.மீ. தூரத்தைப் போல வடமுனை ஆலாக்கள் 3 முறை சென்று வரும் தூர அளவுக்கு பயணப்படுகின்றன. அதாவது, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை பறப்பதற்காகவே செலவிடுகின்றன. இத்தனைக்கும் இப்பறவையின் எடை 100 கிராம் அளவே. நீளம் 35 செ.மீட்டரும் சிறகுகளை விரித்தால் 85 செ.மீ. அளவையும் கொண்டிருக்கும் மிகச் சிறிய பறவையே. தலையில் தொப்பி வைத்தாற் போல் கருப்பு வண்ணமும் இறக்கையும் தோள் பகுதியும் சாம்பல் நிறத்திலும் வயிறும், மார்புப் பகுதியும் தும்பைப் பூப் போல வெண்மை நிறத்திலும் இருக்கும். வால் இறகுகள், மீனின் வால் போன்று பிளவுபட்ட அமைப்பிலும், அலகும் கால்களும் கோவைப்பழம் போல் சிவப்பு நிறத்திலும் காணப்படும். கால் விரல்கள் ஒன்றோடு ஒன்று மெல்லிய சவ்வினால் இணைக்கப்பட்டுள்ளன. நீரின் மேல்பகுதியில் நீந்தி தனக்கான உணவைப் பிடித்தும் உண்ணுகின்றன. இப்பறவை நீர்நிலைப் பறவை என்பதால், இப்பறவையின் விருப்ப உணவு மீனும் நீர்வாழ் உயிரினங்களுமாகும். ஆறு, ஏரி, கடல் பரப்பின் மேல் பறந்து கொண்டே உணவைத் தேடும். தனக்கான உணவைப் பார்த்துவிட்டால் உடனடியாக மின்னல் வேகத்தில் செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் மீனோடு வெளியே வந்து விண்ணில் பறக்கும். அப்படிப் பறக்கும் போதே அலகில் உள்ள மீனை உயரே தூக்கிப்போட்டு மீன் தலைகீழாக வரும்போது தன் அலகை அகலவிரித்து அப்படியே விழுங்கும் தன்மையுடையது.
வடமுனை ஆலா பருவ வயதடைய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பொதுவாக விலங்குகள், பறவைகள் பருவகாலங்களுக்கு ஏற்ப இடம் பெயர்வதுண்டு. இதனை வலசை போதல் என்கிறோம். இனப்பெருக்கத்திற்காக சால்மன் மீன்கள் கடலிலிருந்து நன்னீரை நோக்கிச் சுமார் 2,400 கி.மீ. வரையிலும், பிரேசில் ஆமைகள் சுமார் 2,000 கி.மீ. தூரமும், அதுபோல வடஅமெரிக்க மான்கள் சுமார் 5,000 கி.மீ. தூரமும் பயணம் செய்கின்றன. அந்த வகையில் வடமுனை ஆலா வடதுருவத்தில் இனப்பெருக்கம் செய்துவிட்டு, பனிக்காலத்தைத் தவிர்க்கத் தென்துருவ அண்டார்டிகாவுக்குப் பறந்து செல்கிறது. வலசை செல்லும்போது உணவு உண்பதில்லை. வலசை செல்லும் முன்னர், நிறைய மீன்களை உண்டு, அதில் கிடைக்கும் கொழுப்பைச் சேமித்துக் கொள்வதால், பசியைத் துறந்து பறக்கின்றன. பெரும்பாலும் 4,000 கி.மீ.க்கு ஒருமுறைதான் சிறிது நேரம் இளைப்பாறுகிறது. நீண்ட தூரப் பயணத்தின்போது பறக்கும்போதே தூங்கிக்கொண்டே செல்லும், முழுவதும் தூங்குவதற்குப் பதிலாக மூளையில் ஒரு பகுதியை மட்டும் உறங்க வைத்து மற்ற பகுதிகளை விழிப்புடன் வைத்துக்கொள்ளும் இந்த நுட்பம் இந்தப் பறவைக்குப் பாதுகாப்பாக உள்ளது. இதற்கு யூனிஹெமிஸ்பெரின் தூக்கம் என்று பெயர்.
பருவ வயது வந்த பெண் பறவையைக் கவர்வதற்காக அழகான மீனைப் பரிசாக எடுத்துச் சென்று பெண் பறவையின் முன்பு கண்களால் காதல் பேசி, கண்கள் இரண்டையும் கடையாணிச் சக்கரம்போல் உருட்டிக் கொஞ்சுகின்றது. இக்கொஞ்சல்களில் மனதைப் பறிகொடுக்கும் பெண் ஆலா சம்மதம் தெரிவிக்கும். கருவுற்ற காலத்தில் இவை நிலத்தில் சருகுகளாலும், நார்களைக் கொண்டும் அழகான கூட்டைக் கட்டுகின்றன. அதில் 3 முட்டைகளை இட்டு ஆண், பெண் இருபாலரும் அடைகாக்கின்றன. 3 வாரங்களில் முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. தனியே பறந்து செல்லும் ஆற்றல் 6 மாதங்களில் கிடைத்த போதிலும் சுமார் 2 ஆண்டுகள் தாயின் அரவணைப்பிலே வாழ்கின்றன.
பறவைகள் எப்போதும் தன்னுடைய வாழ்வு, மற்ற உயிரினங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டுமென்றே பறக்கின்றன. ஆனால், பறவைகளின் வாழ்க்கைப் பயணம் மிகவும் சிரமமானதாகவும், சிக்கலானதாகவும் உள்ளது. வேகமான பருவநிலை மாற்றத்திற்கான முதன்மைக் காரணம், மனிதர்களின் ஆற்றல், அவர்கள் நுகரும் வேகம், ஆற்றல் சமன்பாடற்ற நிலை எனப் பலவகையான காரணங்களால் உயிர்க்கோளத்தில் மிகப்பெரிய ஆற்றல் சீர்கேட்டை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். பொதுவாக மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்குப் பறவைகள், தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் கணிசமாக உதவி செய்கின்றன. புவி வெப்பமடைதல் மலர்களின் ஆயுளைக் குறைக்கிறது. வெயிலைச் சமாளிக்க மலர்களிலுள்ள புற ஊதாத் துகள்கள் உதவுகின்றன. துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூடுதலாக வெய்யிலைச் சமாளிக்கும். மலர்களில் இருந்து வரும் வாசனை வீரியம் புவிவெப்பமடைதலின் காரணமாகக் குறைந்துள்ளதால் அவற்றால் அதிகமான மகரந்தச் சேர்க்கையைத் தன்னகத்தே கவர இயலவில்லை. அதுமட்டுமல்லாமல், பறவைகள், பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியும், பூக்கும் பருவமும் தப்பிப் போவதால், உணவு தரும் தாவரங்களின் பெருக்கமும் கணிசமாகக் குறைகிறது. இந்நிலையை மாற்ற குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் பறவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வீடு தோறும் மரங்கள் வளர்க்க…
நாடு தோறும் பறவைகள் பறக்கும்!




