கோடை விடுமுறையைக் கொண்டாடுங்கள்!( நினைவில் நிறுத்துவோம்)

சிகரம்
பிஞ்சுப் பருவத்தில் பள்ளி விடுமுறை யென்றாலே மகிழ்வு தரக்கூடியது என்றாலும், நீண்ட கோடை விடுமுறை, பிஞ்சுகளின் நெஞ்சுக்கு பெரும் மகிழ்ச்சியையும், நிறைவையும் தரக்கூடியது ஆகும்.
சனி, ஞாயிறு பிஞ்சுகளுக்குப் பிடித்தமான நாள்கள், அதேபோல் இடையிடையே வரக்கூடிய விழாக்களுக்கான விடுமுறைகளும் உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தரும். கோடை விடுமுறையே உங்களுக்குக் கொண்டாட்டம் என்றால் அது உண்மையே!
ஆனால், இந்தக் கோடை விடுமுறையை நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குக் கொண்டாடி மகிழ முடியுமா என்றால் அது பெரும்பாலும் இல்லையென்ற விடையே கிடைக்கிறது.
எனவே, இந்த விடுமுறையைச் சார்ந்து, பெற்றோர், கல்வித் துறை, அரசு, சமூக ஆர்வலர்கள், உளவியல் வல்லுநர்கள், கல்வியாளர்கள் கலந்து பேசி நல்ல தீர்வுகளை, முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவது கட்டாயம்.
பிஞ்சுகளை வதைக்கும் நடைமுறைகள்
உழைக்கின்ற உழைப்பாளிகளுக்கு எப்படி ஓய்வு என்பது கட்டாயமோ, ஒவ்வொரு மனிதருக்கும் உறக்கம் என்பது கட்டாயமோ, அதுபோலப் படிக்கின்ற பிஞ்சுகளுக்குக் கோடை விடுமுறையில் அவர்கள் பெற வேண்டிய மன அடிப்படையிலான மடைமாற்றங்கள், மனமகிழ்வுகள், உடல்ரீதியான உல்லாசங்கள் கட்டாயம்.
ஆனால், இன்று நடப்பில் என்ன செய்யப்படுகிறது! கோடை விடுமுறையில் பிஞ்சுகளுக்குப் பட்டியல் போட்டு, பணிகளைத் தருகிறார்கள். சிறப்பு வகுப்புகள், அடுத்த ஆண்டுக்கான பாடங்களை நடத்துதல், தேர்வுகள் நடத்துதல் என்று கோடை விடுமுறை நாள்கள் முழுவதும் பிஞ்சுகளைக் கசக்கிப் பிழிகின்றனர். இது மிகவும் தப்பான கைவிடப்பட வேண்டிய செயல்பாடுகள்.
பகல் முழுவதும் உழைத்து விட்டுச் சென்ற உழைப்பாளியை அதன்பின் ஓய்வெடுக்க அனுமதிக்காமல், தொடர்ந்து உழைக்கச் சொல்வது எவ்வளவு தப்போ, அவ்வளவு பெரிய தப்பு.
விடுமுறை ஏன்?
கோடை விடுமுறையில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், தேர்வுகள் நடத்தாமல் போனாலும் அவர்கள் வெய்யிலில் அலைந்து கொண்டுதானே இருப்பார்கள்? அப்படியிருக்க, அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் என்ன தப்பு என்று கேட்பர்.
உழைப்பு, படிப்பு, இசை என்று எந்த வேலையை ஒருவர் செய்தாலும், அவருக்கு ஓய்வு என்பது – வேலையைச் செய்யாமல் – ‘கம்’ என்று வீட்டில் உட்கார்ந்து இருப்பது என்று பொருள் அல்ல. அப்படி உட்கார்ந்து இருக்கவும் இயலாது.
அவர்கள் வழக்கமாகச் செய்கின்ற வேலையிலிருந்து மாறுபட்ட ஒரு வேலையைச் செய்வதே அவர்களுக்கு ஓய்வு ஆகும். அலுப்பு ஏற்படாமல் ஆர்வமுள்ள ஒன்றைச் செய்வது ஓய்வுக்குச் சமம்.
பகல் முழுவதும் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர், மாலை 5 மணிக்கு மேல் விளையாடுவது அவருக்கு உற்சாகம், மகிழ்வு, மன நிறைவை உருவாக்கும்; சோர்வு அகற்றும்; புத்துணர்ச்சியை உருவாக்கும்.
ஆக, வழக்கமான பணியிலிருந்து விடுபட்டு, அவர்களுக்கு விருப்பமான செயலைச் செய்வது, ஒருவருக்குச் சோர்வை, சலிப்பைத் தராது. மாறாக, அவருக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். இந்த உளவியல் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தால், உள்வாங்கினால் இதற்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
எனவே, மாணவர்களுக்குக் கோடை விடுமுறையை அவர்கள் விருப்பப்டி கழிக்க அனுமதி வேண்டும். கோடை விடுமுறை விடப்படுவதன் நோக்கமும் அதுதான். அந்த நோக்கத்திற்கு மாறாய், மாணவர்களுக்குக் கோடை விடுமுறையிலும் பாடம் சார்ந்தவற்றையே செய்யச் சொல்வது ஏற்புடையதல்ல.
பிஞ்சுகள் கவனத்திற்கு…
கோடை விடுமுறை என்பது உங்கள் உள்ளம் மகிழ்வதற்கான, புத்துணர்ச்சிக்கான, மடைமாற்றத்திற்கான ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்து செயல்படவேண்டும். அடுத்த கல்வி கல்வியாண்டுக்குச் செல்வதற்குரிய புதிய உணர்வை, உற்சாகத்தைப் பெற இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கோடை விடுமுறை நாள்களை உறவினர், நண்பர்களுடன் கழித்தல், விளையாடி மகிழ்தல், சுற்றுலா செல்லல், மனதுக்குப் பிடித்தமான இசை, ஓவியம், கதை படித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடி மகிழ்தல் போன்றவற்றைச் செய்தல் வேண்டும். இதற்கு விடுமுறை நாள்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தவர்களுடனும், நண்பர்களுடனும் கலந்து பேசி எதை, எத்தனை நாள்கள் செய்வது என்று முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி அவற்றைச் செய்தால், தடையின்றித் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். சுற்றுலாச் செல்லும்போது தங்கள் உடல்நிலை அதற்கேற்பத் தகுதியாகவுள்ளதா? உடல் நலப் பாதிப்பு ஏதாவது உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உடல்நலப் பாதிப்பு இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, மலைப்பகுதிக்கோ, நீர் நிலைப் பகுதிக்கோ சுற்றுலா செல்லும் போது இதயம் சார்ந்த பிரச்சினை எதுவும் இல்லையென்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரைகளை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீச்சல் தெரியாமல் புதிய இடங்களில் உள்ள ஆறு, நீர்வீழ்ச்சிப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. கடல் பகுதிக்குச் செல்லும்போது கடல் அலையில் இறங்கக் கூடாது. நீச்சல் தெரிந்தவர்களுக்குக்கூட கடல் அலை உயிருக்கு ஆபத்தாக அமையும். எனவே, கணுக்கால் அளவு நீரில் நிற்பதே நல்லது. திடீரென அலை வேகமாக வந்தால், கரையை நோக்கி விரைவாய் வந்துவிட வேண்டும்.
பெரியவர்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். குடும்பச் சுற்றுலாவாக இருந்தால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களும், சுற்றுலா அமைப்பின் மூலமாகச் சென்றால், அந்த அமைப்பினரும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
வெளியூர்களுக்குச் செலலும்போது அங்குள்ள விபத்துக்கான வாய்ப்புகள், ஆற்றின் ஆழம் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து செயல்பட வேண்டும். உணவு தூய்மையாக உள்ளதா என்பதை உறுதி செய்து தரமான உணவு விடுதிகளில் சாப்பிட வேண்டும். கண்ட நீரைக் குடிக்காமல், தூய குடிநீரைக் குடிக்க வேண்டும். மலைச்சரிவு, பள்ளத்தாக்குப் பகுதிகளில் எச்சரிக்கைத் தடுப்புகளைத் தாண்டிச் செல்லக்கூடாது. கொடிய விலங்குகளிடம் விலகி இருக்க வேண்டும். இது போன்றவற்றைப் புரிந்து மகிழ்வுடன், நிறைவுடன் கோடை விடுமுறையை மகிழ்வுடன் கழிக்கப் பிஞ்சுகளுக்கு வாழ்த்துகள்!<





