இரும்பு விலங்கு பூட்டப்பட்ட பெரியார்!(நடந்த கதை-12)

விஷ்ணுபுரம் சரவணன்

நிறைய தடைகள் செழியா… ‘பெரியார் விடுதலையானதும் அவரை எப்படி ஊர்வலமாக அழைச்சிட்டுப் போக அனுமதி கொடுத்தீங்க? அந்த மாவட்டத்துக்குள்ளே பெரியார் வர, தடை இருக்கும்போது எப்படி வர விட்டீங்க’ன்னு அரசு தரப்புல கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தாங்க”
“ஓ!”
’இதெல்லாம் ஒருபக்கம் நடந்தாலும் சத்தியாகிரகம் செய்யறவங்க தினமும் போராட்டத்தைத் தொடர்ந்துக்கிட்டு இருந்தாங்க.”
“எதிர் தரப்புல ஒண்ணுமே செய்யலையா அம்மா?”
“அதெப்படி இருப்பாங்க. ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த 250 பேருக்கு மேல ஒண்ணா கூடி ஆலோசனைக் கூட்டம் போட்டாங்க. எப்படியாவது இந்தப் போராட்டத்தை நிறுத்தணும் என்பதுதான் அவங்க நோக்கமே”
”ம்ம்”
”இந்தப் பக்கம் தீயர், புலையர் உள்ளிட்ட ஜாதியைச் சேர்ந்தவங்க பெரிய கூட்டத்தை நடத்துறாங்க. ஆயிரக்கணக்கான மக்கள் வந்தாங்களாம். சத்தியாகிரகம் நடத்துற மக்கள எப்படியாச்சும் கலைச்சி விடணும்னு ஆதிக்க ஜாதிக்காரங்க பல வேலைகள் பார்க்கிறாங்க”
“அப்படி என்ன செஞ்சாங்க?”
“அரசியல் ரீதியாய் பெரிய அளவுக்கு ஒரு பக்கம் நடத்திக்கிட்டு இருந்தாலும், சின்னச் சின்னதா தொந்தரவு பண்ற வேலையும் செஞ்சாங்க. சத்தியாகிரகம் செய்யற ராமன் என்பவர், ஒரு செய்தி சொல்றதுக்காக ஓடி வராரு. தெருவுல இருந்த ஆதிக்க ஜாதி நாயர்ல ஒருத்தர் ராமனைக் கட்டிப்பிடித்து பாராட்டுறதைப் போல பிடிக்கிறாரு”
“அப்பறம்?”
“அந்த நாயர் கையில வச்சிருந்த சுண்ணாம்பை ராமன் கண்கள்ல அப்பிவிட்டுறாரு”
“அய்யோ… கண்ணெல்லாம் எரியுமே?”
“ஆமா, ராமன் துடிதுடிச்சுப் போனாரு. தரையில விழுந்து புரண்டாரு.. உடனே அவருக்குச் சிகிச்சை கொடுக்கத் தூக்கிக்கிட்டு ஓடுனாங்க”
“கொஞ்சம் கூட மனுஷத் தன்மையே இல்லாம இப்படியெல்லாம் நடந்துப்பாங்களா என்ன?”
“அதுதான் ஜாதி, மத வெறி. அதை எதிர்க்கிற மனுஷனை, மனுஷனா பார்க்க விடாது. அவனோட ஜாதியா மதமாத்தான் பார்க்கும். அதனால தான் பகுத்தறிவுவாதிகள் இந்த வேறுபாடுகளுக்கு எதிராய்ப் போராடிக்கிட்டே இருக்காங்க. பாதிக்கப்பட்ட ராமனோட இடது கண் பார்வையை இழக்கிற அளவுக்குச் சுண்ணாம்பால பாதிப்படைச்சிருச்சு”
”அச்சச்சோ… தெருவுல நடக்கணும்னு உரிமையைக் கேட்டதால ஒருத்தரு கண் பார்வையையே இழந்து போராட வேண்டி இருக்குல அம்மா?”
“சத்தியாகிரகம் செய்தவங்க அடைஞ்ச பாதிப்புகள் ஏராளம். ஆனாலும் போராட்டத்துல வெற்றி பெறாம ஓயப்போறது இல்லேன்னு உறுதியா இருந்தாங்க. தலைவர்களும் அதுக்கு, சரியா வழிகாட்டிட்டு இருந்தாங்க”
“ம்ம்”
“தலைவர்கள் கைதானால் போராட்டம் தோல்வி அடைஞ்சிடும்னு நினைச்சாங்க ஆனா அப்படி நடக்கல. இருந்தாலும் தொடந்து தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. வைக்கத்துக்கு வரக்கூடாதுனு பெரியாருக்கு மறுபடியும் தடை விதிச்சாங்க”
“மறுபடியுமா?”
”ஆமாம். பெரியார் அதையும் பொருட்படுத்தல. நீதிமன்றத்துல விசாரிச்சாங்க. அந்த நேரத்துல பெரியாரோட இணையர் அன்னை நாகம்மையார் வைக்கத்துல இருந்தாங்க. அங்கிருந்த ஆறு பெண்களைத் திரட்டி சத்தியாகிரகம் செய்தாங்க. தொடர்ந்து பல போராட்டங்களையும் முன்னெடுத்தாங்க”
“ஓ… பெரியார் தாத்தா என்ன செஞ்சாங்க!”
“அவரு தடையாணைய எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. அதனால அவருக்கு நான்கு மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுச்சு”
“இப்பதானே அவர் சிறையில இருந்து வெளியே வந்தாரு?”
”ஆமா செழியா… சிறையில இருந்து வெளியே வந்து ஒரு மாசம்கூட முழுசா ஆகல. அதுக்குள்ள அவரை மறுபடியும் சிறையில அடைச்சிட்டாங்க. இந்த விஷயங்கள் எதுவும் தெரியாத பல பேரு இப்பக்கூட வைக்கம் போராட்டத்துக்கும் பெரியாருக்கும் சம்பந்தமே இல்லேன்னு பேசிக்கிட்டு இருக்காங்க”
“அவங்க எல்லாம் இந்த வரலாற்றைப் படிச்சிப் பார்க்க மாட்டாங்களா?”
“படிக்காம இருப்பாங்களா… தெரியாமப் பேசினாலோ, எழுதினாலோ நாம போய் ஆதாரங்களைக் கொடுக்கலாம். பெரியாரைப் பற்றி அவதூறு செய்யணும்னு எழுதறவங்களையும் பேசறவங்களையும் ஒண்ணும் செய்ய முடியாது”
“அப்படியே விட்டுட்டா, பெரியார் தாத்தா பற்றி அவங்க சொல்றதுதான் உண்மைன்னு சில பேர் நினைச்சிட மாட்டாங்களா அம்மா?”
”சில பேர் நினைப்பாங்கதான். ஆனா, பொய்க்கு ஆயுசு குறைவு செழியா… அதுக்காக அப்படியே விட்டுடவும் முடியாது. சரியான வரலாற்றை நாமதான் சொல்லிக்கிட்டே இருக்கணும்”
”ஆமா”
“பெரியாரைச் சிறையில அடைச்சிட்டாங்க. கடுங்காவல் தண்டனை என்பதால சின்னச் சின்னச் சலுகைகள் கூட அவருக்குக் கொடுக்கப்படல”
”அப்படின்னா?”
“கொடும் குற்றவாளிகளான கைதிகள் போட்டிருக்கும் சிறை உடைகள்தான் பெரியாரும் போட்டுக்கணும். கைகள்ல இரும்பு விலங்குகளையும் மாட்டி விட்டிருப்பாங்க. அதை விடவும் பெரிய துயரம் என்னென்ன… தனிமைச் சிறையில போட்டிருப்பாங்க. மத்தவங்கள்கிட்ட பேசக்கூட முடியாது”
“ரொம்ப அநியாயமா இருக்கும்மா… தெருவுல எல்லோரும் நடந்துபோற உரிமை கேட்டதுக்கா இந்தத் தண்டனை?”
”ஆமா செழியா… அவர் சிறையில இருந்தப்ப பெரிய சம்பவம் ஒண்ணு நடந்துச்சு”
”சம்பவமா… என்னம்மா அது?”
“சொல்றேன். வைக்கம் போராட்டத்தை நிறுத்தறதுக்கும் போராட்டக்காரங்கள அழிக்கிறதுக்கும் மகாராஜா சில நம்பூதிரிப் பார்ப்பனர்களையும் வைதீகர்களையும் வைச்சு பெரியளவில் சத்துரு சம்ஹார் யாகம் நடத்தினாரு”
“யாகம் நடத்தினா எப்படிப் போராட்டம் நிக்கும். அதுக்குப் பதிலா போராடுறவங்க கிட்ட போய் பேசலாம்தானே?”
“பகுத்தறிவோடு யோசிச்சா உன்னை மாதிரிதான் யோசிக்கணும். ஆனா, அவங்க கடவுள் பக்தி அப்படி யோசிக்க விடல”
“சரிம்மா, யாகம் நடத்துனதால போராட்டம் செஞ்சவங்களுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துடுச்சா?”
“இல்ல, யாகம் நடத்தின மகாராஜா தான் இறந்துபோயிட்டாரு”
“ஓ! மந்திரம் ‘ரிவர்ஸ்ல’ வேலை செஞ்சிடுச்சா அம்மா?”
“சிரிப்புக்காக இப்படிச் சொன்னாக்கூட மந்திரம் வேலை செய்யும்னு அர்த்தம் வந்துடும் இல்லையா?”
“அட ஆமாம்ல…”
“ஆமா.. பெரிய யாகம் நடத்திக்கூட சத்தியாகிரகத் தலைவர்களை ஒண்ணும் செய்ய முடியலேன்னு மக்கள் பேசிகிட்டாங்க.
”ம்ம்ம்… அப்பறம்?”
“பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிறையில நடத்தப்படுறதக் கண்டிச்சி ராஜாஜி, திரு.வி.க. போன்ற பலரும் அறிக்கை விட்டாங்க. பத்திரிகைகளும் இதை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்துச்சு.”
“இத்தனை பேர் கண்டிச்சத்துக்குப் பலன் கிடைச்சுதா?”
“கிடைச்சுது. 43 நாள்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிச்ச பெரியார் விடுதலை செய்யப்பட்டாரு. அவரோட கேசவமேனன் உள்ளிட்ட சிலரும் விடுதலை செய்யப்பட்டாங்க”
“பெரியார் தாத்தா முன்னாடி ஒரு மாசம், இப்போ 43 நாள்கள் ஜெயில்ல இருந்தாரு இல்லையம்மா?”
“ஆமா செழியா”
“பெரியார் தாத்தா ஜெயில்ல இருந்து வெளியில வந்ததும் போராட்டம் நடக்குற இடத்துக்குப் போகாமல் இருந்தாரா?”
”அதெப்படி இருப்பாரு.. அவர் எப்போ போனாரு தெரியுமா?” <
(தொடரும்)




