நம்ம ஊர் பாட்டி 8 கல்யாண வயசு!

எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்
பாட்டி காலை உணவைச் சாப்பிட்டு முடித்துக் கை கழுவும் நேரத்தில்… மூடி இருக்கும் வாசல் கதவில் யாரோ முட்டி மோதிக் கொள்வது போல் பெருத்த ஓசை.
விரைந்து சென்று வாசல் கதவைத் திறந்தார் பாட்டி.
கதவைத் திறந்த வேகத்தில் ‘பொத்’தென ஒரு பெண்மணி வீட்டின் உள்ளே வந்து விழுந்தார்.
பாட்டி பதற்றத்துடன் “அட! யாரும்மா நீ… எழுந்திரும்மா… எழுந்திரு” என்று சொல்லி முடிக்கும் முன்னே…
“அடியேய்!… மரியாதையா வந்துடு!… இல்ல… ஒரே வெட்டு!… மவளே நீ ரெண்டு துண்டாயிடுவ… வா… இந்தப் பக்கம்… வாடி!” என கரகரத்த குரலில் கத்திய படி கையில் அரிவாளுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அந்த ஆளைவிட அதிக சத்தத்தோடு, “நிறுத்துய்யா! முதல்ல வீட்டைவிட்டு வெளியே போ! யாருன்னே தெரியலே, இந்த வீட்டுக்குள்ளே வந்து ‘வெட்டுவேன்… குத்துவேன்’னு கத்திக்கிட்டு… போய்யா வெளியே” என்றார் பாட்டி.
“பாட்டி ரொம்ப நாளா பூட்டியிருந்த வீட்டுக்குள்ள நீ வந்து பூந்துக்கிட்டு என்னை ‘வெளியே போ’ன்னு சொல்ல நீ யாரு?” என்றார் அந்த ஆள்.
“நான்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. நான் வந்து ஒரு மாசம் ஆச்சு!”
“ரொம்ப நாளா பூட்டிக்கிடந்த வீட்டுக்கு நீதான் சொந்தமா… அது கிடக்கட்டும். நீ தள்ளிப் போ… இன்னைக்கு அவளை வெட்டாம விடமாட்டேன்… அடியேய்…!!” என எகிறிக் குதித்தார்.
“யோவ்! சும்மா நிறுத்துய்யா… நீங்க ரெண்டு பேரும் யாரு? எதுக்காக இந்த அம்மாவை ‘வெட்டுவேன், குத்துவேன்’னு அய்யனாரு மாதிரி அருவாளைத் தூக்கிக்கிட்டு வந்துட்டே”… என்று பேசிக் கொண்டே வாசலைத் தாண்டி வெளியே வந்தார் பாட்டி.
பாட்டியின் பின்னாலேயே பயந்திடாத அந்தப் பெண்மணியும் வந்தார்.
“பாட்டிம்மா! நாங்க ரெண்டு பேரும் புருஷன்… பொண்டாட்டி!” என்றார் அந்தப் பெண்மணி.
“ஓ! புருஷன்… பெண்டாட்டியா? ஆமா… உங்களுக்குள்ள என்ன ஆச்சு?”
“ஆங்! நாங்க ரெண்டு பேரும் ஓடிப் புடிக்கிற விளையாட்டு விளையாடுறோம். இவளை அவுட்டாக்குறதுக்காகத் துரத்திக்கிட்டு வந்தேன்”
“ஏப்பா! தொட்டு அவுட்டாக்க வந்த மாதிரியா வந்திருக்கே… ஆளையே வெட்டி அவுட்டாக்கிற மாதிரி அருவாளோட நிக்கிறே.”
“தெரியுதில்லே! அப்புறம் எதுக்கு குறுக்கே நிக்கிற பாட்டி? தள்ளிப்போ…! இவளை வெட்டுற வெட்டுல ரத்தம் உன் மேலே பட்டாலும்படும்… இவளை…” எனக் கத்திக்கொண்டு கோபத்தில் குதித்தான்.
“நிறுத்து! நீ இந்த அம்மாவை… அதாவது உன் பொண்டாட்டிய வெட்டப்போறே…! அவ்வளவுதானே… வெட்டிக்க… ஆனா… வெட்டுறதுக்கு முன்னே உங்க பேரைச் சொல்லு!”
“என் பேரு சிங்காரம்! அவ பேரு அலங்காரம்”
“அட! பேரு நல்லாருக்கே. நீ சிங்காரம். இந்த அம்மா அலங்காரம். உங்க புள்ளை பேரு என்ன பலகாரமா?” என சிரித்தபடி கேட்டார் பாட்டி.
“இல்லே பாட்டியம்மா! எங்க பொண்ணு பேரு… முத்தாரம்…” என பதில் சொன்னார் அலங்காரம்.
“சிங்காரம்… அலங்காரம்… முத்தாரம்… அதுசரி உங்களுக்குள்ள என்ன விவகாரம்? என்றார் பாட்டி.
“எங்க பொண்ணு முத்தாரத்துக்கு உடனே கல்யாணம் செய்யணும்னு சொல்றாரு இந்த மனுசன்”.
“கல்யாணம் செய்யிற வயசிருந்தா முறைப்படி கல்யாணம் செய்து வைக்க ஒரு அப்பா நினைக்கிறது தப்பா?
“அப்படிச் சொல்லு பாட்டி! காலாகாலத்துலே பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வைக்கிறதுல என்ன தப்பு?” என்றார் சிங்காரம்.
“இவரு செய்யிறது எல்லாமே தப்புதான் பாட்டி! ஒன்பதாவது பாசாகி, பத்தாவது போகப் போற முத்தாரத்தோட படிப்பைப் பாதியிலே நிறுத்தி, இவங்க அக்கா மகனுக்குக் கட்டி வைக்கணும்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாரு.”
“ஏன் இன்னொரு கால் என்ன ஆச்சி?”
“காலெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இவரு மூளைதான் சரியில்லே…” “ஏய்! யாருக்கு மூளை சரியில்லே! பொட்டைக் கழுதை! உனக்கு என்னாடி தெரியும்?” என்று சீறினார் சிங்காரம்.
“ஆம்பளைக் கழுதை! உனக்கு எல்லாமே தெரியுமோ? படிக்கிற பொண்ணுக்கு இப்ப எதுக்கு அவசர அவசரமாக் கல்யாணம் செய்யணும்?” என்றார் பாட்டி.
“என்னா பாட்டி? சந்தடி சாக்குலே என்னை ஆம்பளைக் கழுதைன்னு சொல்றே?” என்றார் சிங்காரம்.
“ஏப்பா… நீ கூடத்தான் போற போக்குல உன் பொண்டாட்டிய பொட்டைக் கழுதைன்னு சொன்னே… உன்னைச் சொன்னா மட்டும்… உரைக்குதோ…? ஒரு பொண்ணைச் சொன்னா உரைக்காதா?”
“சரி! அதைவிடு பாட்டி! என் பொண்ணுக்கு இந்தச் சின்ன வயசுல கல்யாணம் கட்டாம உன்னை மாதிரி பல்லுப்போயி பாட்டி ஆன பிறகா கல்யாணம் கட்ட முடியும்?… காலம் ரொம்பக் கெட்டுப் போயிக் கிடக்கு. அதெல்லாம் உங்களுக்கு சொன்னாப் புரியாது. அப்படி புரியாததுனாலேதான் இப்ப கல்யாணம் வேணாம்னு இவ தகராறு பண்றா!”
“யப்பா! சிங்காரம்… அந்தக் காலம்… இந்தக் காலம் என்றெல்லாம் இல்ல. எப்பவுமே காலம் நல்லாதான் இருக்கு. உன்னை மாதிரி சில பேருதான் காலத்தைக் கெடுக்குறாங்க!
இன்னைக்கு அறிவியல் வளர்ந்ததுனால பல உண்மைகள் உலகத்துக்குத் தெரியுது. எல்லா செய்தியும் நடந்த அடுத்த நொடியே உலகத்துக்கே தெரிஞ்சு போகுது.”
“பாட்டி! பொம்பளைப் புள்ளைய வளர்த்துக் கரை சேக்குறது… வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதரி இருக்கு.”
“உன்னை யாருப்பா நெருப்பை எடுத்து வயத்துல கட்டிக்கச் சொன்னது. யப்பா… சிங்காரம் உன் பொண்ணை முதல்ல நல்லாப் படிக்க வையி. அப்புறம் கல்யாணம் செய்யலாம்.”
“அதைத்தான் பாட்டியம்மா நானும் சொன்னேன்” என்றார் அலங்காரம்.
“பாட்டி! இன்னொருத்தன் வீட்டுக்குப் போற பொண்ணு… இவ்வளவு படிச்சதே அதிகம். மாமியார் வீட்டுல போயி என்ன செய்யப்போகுது… சோறு குழம்பு ஆக்கிப்போட, அழுக்குத் துணியைத் துவைச்சுப்போட, வீடு வாசல் கூட்டிப் பெருக்க, புள்ளை குட்டிய பெத்துப் போட… இந்தப் படிப்பு போதும்.”
“ஓ! அப்படி நினைக்கிறியா?… இதுக்கு எதுக்கு உன் பொண்ணைக் கட்டிக் கொடுக்குறே… இதுக்கெல்லாந்தான் மிஷினு வந்திருக்கே. அதை வாங்கிக் குடு. மாப்பிள்ளை அதைக் கட்டிக்கிடட்டும்.”
“என்னா பாட்டி கிண்டல் பண்றியா?”
“இப்படித்தான் பாட்டியம்மா, இவரு எது சொன்னாலும் ஏடாகூடமா சொல்லுவாரு. இவரு கிட்ட நம்மால பேசவே முடியாது” என்றார் அலங்காரம்.
“நீ ஏம்மா… இவருகிட்டப் பேசுறே… போலீசுல பேசு!”
“அவங்க கூட்டிக்கிட்டுப் போயி கல்யாணம் கட்டி வச்சு… வடை, பாயசத்தோட விருந்து வைப்பாங்க. கேக்குற பாரு… கேனத்தனமா ஒரு கேள்வி. சின்ன வயசுல கல்யாணம் செஞ்சா அது தண்டனைக்குரிய குற்றம்”
“என்னாது பெத்த பொண்ணுக்குக் காலாகாலத்துல கல்யாணம் செய்யிறது தண்டனைக்குரிய குத்தமா?”
“ஆமா! 18 வயசுக்கும் குறைவான பெண்ணுக்கோ… 21 வயசுக்கும் குறைவான ஆணுக்கோ திருமணம் செய்தா அது குழந்தைத் திருமணம். அதுக்குக் காரணமான குழந்தைகளைப் பெத்தவங்க… கல்யாணத்துக்கு வந்த மத்தவங்க… மண்டபம் வாடகைக்குத் தந்தவங்க, சமையல் செய்தவங்க, சாப்பிட்டவங்க, மேடை போட்டவங்க, மேளதாளம் வாசிக்கறவங்கன்னு எல்லாரும் ஜெயிலுக்குப் போகணும். அபராதம் கட்டணும்.”
“அய்யய்யோ! பாட்டியம்மா என்ன பயங்காட்டுறிங்க?”
“பயங்காட்டலே… குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் கடுமையான தண்டனையைத் தரத் தயாரா இருக்கு. நீ என்னடான்னா… சட்ட திட்டமே தெரியாம சட்டுப்புட்டுன்னு கல்யாணம் முடிக்க நினைக்கிறே. முதல்ல பொண்ணை நல்லபடியா நிறைய படிக்க வையிங்க. அதுக்கு இப்ப அதிகமான வாய்ப்பும் வசதியும் இருக்கு.
ஓர் ஆண் படிச்சா அது அவனுக்கு மட்டுந்தான் பயன்படும். ஒரு பெண் படிச்சா அந்தக் குடும்பத்துக்கே பயன்படும் புரிஞ்சுதா?” என்றார் பாட்டி.
விவரம் புரிந்த சிங்காரம் வெட்கப்பட்டு நின்றார்.
“கோபப்பட்டு அருவாளைத் தூக்கிறத விட்டுப்புட்டு… அறிவுப்பூர்வமா யோசிங்க. போங்க… போயி வேலையைப் பாருங்க!
அலங்காரம் நன்றியோடு பாட்டியைப் பார்த்துக் கையெடுத்து வணங்கியபடி முன்னே நடந்தார்.
ஆத்திரம் அடங்கி அறிவார்ந்து சிந்திக்கத் தொடங்கிய சிங்காரம் அமைதியாகப் பின்னால் நடந்தார்.
அதைப் பார்த்த பாட்டி மகிழ்ந்தார்.<
(பாட்டியின் லூட்டி தொடரும்)



