கணினிகளின் பந்தயம் (அறிவியல் வளர்ச்சி)

‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்
உலகிலேயே மிகவும் வேகமான ஒரு பந்தயம் இப்போது நடக்கிறது. அது கால்களால் ஓடும் பந்தயம் இல்லை. அது கணினிகளின் பந்தயம்! எந்தக் கணினி மிகவும் புத்திசாலியாக, மிகவும் வேகமாகச் சிந்திக்க முடியும் என்ற போட்டி உலகெங்கும் நடக்கிறது.
இப்போது நாம் பயன்படுத்தும் AI கணினிகள் மிகவும் புத்திசாலிகள். அவை படங்கள் பார்க்கும்; பாடல்கள் எழுதும்; கேள்விகளுக்குப் பதில் சொல்லும். ஆனால் அவற்றுக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது. சில கடினமான கணக்குகளைப் போட்டு முடிக்க இப்போதைய கணினிகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்! புதிய மருந்துகள் கண்டுபிடிக்க, காலநிலையைச் சரியாகக் கணிக்க, இன்னும் நிறைய நேரம் தேவைப்படுகிறது.
இங்கேதான் குவாண்டம் கம்ப்யூட்டர் கதாநாயகனாக வருகிறது!
சாதாரணக் கணினி எப்படி வேலை செய்கிறது தெரியுமா? அது ஒரு நேரத்தில் ஒரே ஒரு விஷயம் மட்டும் யோசிக்கும். ஒவ்வொன்றாகச் சோதிக்கும். ஆனால், குவாண்டம் கணினி ஒரே நொடியில் அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் ஒரே நேரத்தில் சோதித்துப் பார்க்கும். இது மாம்பழம் தேடும்போது, ஒவ்வொரு கடையாகப் போய்த் தேடுவதற்குப் பதிலாக, நகரத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் ஒரே நேரத்தில் தேடுவது மாதிரி! எவ்வளவு வேகம் பாருங்கள்!
இந்த குவாண்டம் வேகத்தோடு, AI இணையும்போது என்ன நடக்கும்? புற்றுநோய்க்கு மருந்தை வெறும் சில வாரங்களில் கண்டுபிடிக்கலாம். 50 ஆண்டுகள் முன்பே, காலநிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கணிக்கலாம். புதிய வகைப் பொருட்களை உருவாக்கி நம் பூமியை மாசில்லாமல் காக்கலாம். விண்வெளியில் உள்ள புதிய கிரகங்களையும் வேகமாகக் கண்டறியலாம்.
இது வெறும் கனவு இல்லை குழந்தைகளே! Google, IBM போன்ற பெரிய நிறுவனங்கள் இதை உண்மையாக்க, இப்போதே கடினமாக உழைக்கின்றன. நீங்கள் பெரியவர்களாகும் போது, இந்தத் தொழில்நுட்பம் உங்கள் கையில் இருக்கும். நன்றாகப் படியுங்கள், கேள்விகள் கேளுங்கள், ஆர்வமாக இருங்கள். நாளைய குவாண்டம் விஞ்ஞானி நீங்களாகவும் இருக்கலாம்!<



