முதற்பணி!
சுற்றுச் சூழல் சுகாதாரம்
சுத்த மாக இருந்தால்தான்
தொற்று நோய்கள் வாராது;
தூரப் போகும் பெருநோய்கள்!
வீட்டில் சேரும் குப்பைகளை
வெளியில் தெருவில் வீசாமல்
கூட்டிச் சேர்த்துக் கட்டியபின்
குப்பை வண்டி யில்போடு!
மக்கும் குப்பைக் கழிவுகளை
மண்ணில் போட்டு உரமாக்கு;
மக்கா குப்பை யாவினையும்
மறுசு ழற்சி செய்துவிடு!
அகிலத் தூய்மை யாவினையும்
அழித்தே கெடுக்கும் நச்சான
நெகிழி தன்னை முழுதாக
நீக்கி வாழ்தல் நம்கடமை!
கண்ட பொருளை எரித்திங்கே
காற்றில் மாசைக் கலக்காதே;
கண்ணைப் போல மரங்காத்துக்
காற்றைத் தூய தாக்கிடுவாய்!
நீரும் காற்றும் சூழ்ந்துள்ள
நிலத்தின் தூய்மை பேணுதலே
பாருக் குள்ளே மாந்தர்தம்
பணியில் முதன்மை என்றுணர்வோம்!
– கே.பி.பத்மநாபன், கோயம்புத்தூர்




