நம்ம ஊர் பாட்டி 9 நல்லகுறி சொல்லு தாயே!


பொய்யாமணி சிற்றூரின் நடுவே ஒரு சின்ன அம்மன் கோவில். அந்தக் கோயிலுக்கு கங்கையம்மன் கோவில் என்று பெயர். செவ்வாய் கிழமையானால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் கூட்டம் வரும்.
காரணம்….. அந்த நாளில் கோயில் பூசாரி குறி சொல்லுவார் – அதுவும் வித்தியாசமான முறையில்.
ஒருவர் நினைத்த காரியம் ‘நடக்குமா… நடக்காதா…’ என்பதை பூசாரி சாமி ஆடி எலுமிச்சம் பழத்தைக் கத்தியால் வெட்டி, குறி சொல்லுவார். அவர் எலுமிச்சம் பழத்தை வெட்டும் போது ரத்தம் போல் சாறு வந்தால் சாமிக்கு மூணு வாரம், நாலு வாரம் பூஜை செய்ய வேண்டுமென்றும் அப்போதுதான் அந்தக் காரியம் நடக்கும் என்றும் பூசாரி பொன்னம்பலம் சொல்லுவார்.
இது அந்தச் சிற்றூரில் நடக்கும் வாடிக்கையான வேடிக்கை.
இதைப் பலர் சொல்லிக் கேள்விப்பட்ட பாட்டி ‘இது அறிவுக்கு பொருந்தாத செயலாச்சே! அது எப்படி எலுமிச்சையை வெட்டினால் ரத்தம் போல சாறு வரும்’ என சிந்தித்துக் கொண்டிருந்தார். பாட்டி ஒரு நாள் வீட்டிலிருந்த குப்பைகளைக் காகிதத்தில் சுற்றிக் கொண்டு போய், குப்பைத் தொட்டியில் போடப் போனார்.
அந்த நேரம் பூசாரி பொன்னம்பலத்தின் மகன் சைக்கிளில் வேகமாகக் குப்பைத் தொட்டி அருகில் வந்து சாலையில் சைக்கிளில் நின்று கொண்டே ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்த குப்பையைத் தூக்கி வீசினான். அது குப்பைத் தொட்டியின் வெளிப்புறத்தில் வேகமாக மோதி, பை கிழிந்து குப்பை நாலு பக்கமும் சிதறியது.
இதைப் பார்த்துக் கொண்டே குப்பைதொட்டிக்கு அருகில் போன பாட்டி, கீழே சிதறிக்கிடந்த குப்பையில் சிவப்பு நிறத்தில் ஏதோ கசங்கிய பொருள் நிறைய இருப்பதை கவனித்தார்.
தான் கொண்டு வந்த குப்பையைக் குப்பைத் தொட்டியின் உள்ளே போட்டு விட்டு வெளியே சிவப்பு நிறத்தில் கசங்கிக் கிடக்கும் சின்னச்சின்னத் துண்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
வீட்டுக்குள் வந்தவுடன் குப்பையிலிருந்து எடுத்த அந்த சிவப்பு நிற கசங்கிய பொருள் என்ன என்று மெதுவாகப் பிரித்துப் பார்த்தார்.
அது வேறு ஒன்றுமில்லை செம்பருத்திப் பூவின் இதழ்கள் என்பதைப் பாட்டி கண்டு பிடித்து விட்டார். சாமிக்கோ பூஜைக்கோ செம்பருத்திப் பூவைப் பயன்படுத்தி இருந்தாலும் இப்படி எதற்காக ஒவ்வொவொரு இதழையும் கசக்கி போட வேண்டும் இது வேறு எதற்கோ செய்யப்பட்டது என்பதை மட்டும் பாட்டி உணர்ந்து கொண்டார்.
செவ்வாய் கிழமை மதிய நேரம் கங்கை அம்மன் கோயில் முன்னால் பத்து, பனிரெண்டு பேர் கூடி நின்றனர். சின்னக் கோயில். முன்னால் பத்தடி நீளத்தில் ஒரு சின்ன மண்டபம். கோயிலை ஒட்டி ஒரு காவித் துணியை விரித்து அதில் பூசாரி பொன்னம் பலம் நெற்றியில் பட்டைக் கழுத்தில் உத்திராட்சக் கொட்டை என பக்தி கோலத்தில் உட்கார்ந்து இருந்தார். அவர் பக்கத்தில் ஒரு தட்டில் சில கத்திகள் இருந்தன.
வந்திருந்த பக்தர்கள் அவருக்கு இரண்டு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
பொன்னம் பலப் பூசாரிக்கு உதவியாக அவருடைய மனைவியும் மச்சானும் விளக்கை ஏற்றுவது, ஊதுபத்தி கொளுத்துவது, வைப்பது என ஒத்தாசை செய்தனர்.
எரியும் பெரிய விளக்கையே பார்த்தபடி அமர்ந்திருந்த பொன்னம் பலம் உடல் சிலிர்க்க ஓகோ… ஆகா என குரல் கொடுத்தார். உடனே மனைவியும் மச்சானும் கன்னத்தில் போட்டுக் கொண்டு “ஆத்தா இறங்கிட்டா..! அம்மா வந்துட்டா… தாயே! நல்ல குறி சொல்லு தாயே!” என்று குரல் எழுப்பினர்.
“என் மக்களை ஒவ்வொருத்தரா வரச் சொல்லு” என்றார் பொன்னம் பலம். உடனே அவர் மச்சான் “காணிக்கையை இந்தத் தட்டுல வச்சிட்டு, எலுமிச்சம் பழத்தை அந்தத் தட்டுல வைங்க” என்றார்.
அம்மா ஒருவர் தன் கையிலிருந்த அம்பது ரூபாயை மச்சான் வச்சிருந்த தட்டில் வைத்துவிட்டு எலுமிச்சம்பழத்தை பூசாரி முன்னால் இருந்த தட்டில் வைத்தார்.
பொன்னம் பலம் தன் வெற்று உடலைச் சிலிர்த்து ஆடியபடியே அரைக் கண்ணை மூடிய நிலையில் “தாயே நீ ஒரு காரியத்தை நினைச்சு என் இடம் தேடி வந்திருக்கே! அது நடக்குமா நடக்காதான்னு என்ன கேக்குறே… அப்படித்தானே?” என்றார்.
“ஆமா தாயே! ஆமா” என கன்னத்தில் போட்டு கொண்டு பூசாரியின் காலைத் தொட்டு வணங்கினார்.
“ஆத்தா! நல்ல குறி சொல்லு தாயே” என்று சத்தமாகக் கூவினார் பொன்னம்பலம் மனைவி.
“சொல்றேன்! சொல்றேன்!” என்று சொல்லிக் கொண்டே தட்டில் இருந்த எலுமிச்சம்பழத்தை எடுத்து இரு கைகளால் உருட்டிக் கொண்டே ‘உஸ்… புஸ்… என சத்தமிட்டார். பின்னர் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து பழத்தை ரெண்டாக வெட்டினார். சிவப்பு நிறம் கலந்த எலுமிச்சைச் சாறு சிந்தியது.
“அம்மா…. நீ நினைச்ச காரியம் ஜெயம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் போய் வாம்மா!” என்றார். “ஆத்தா நல்ல வழி காட்டுன தாயே” என்றபடி பூசாரி காலில் விழுந்து வணங்கி எழுந்து போனார். இதையெல்லாம் கோவிலின் அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் பாட்டியம்மா. தன்னம்பிக்கை குறைந்த மனிதர்களின் பலவீனத்தைப் பணமாக மாற்றும் இந்தப் பக்தி மோசடியை எண்ணி மனம் வருந்தியபடி வீட்டுக்குப் போனார் பாட்டி.
பாட்டிக்கு ஓர் உண்மை மட்டும் தெளிவாகப் புரிந்தது. பூசாரி தன் அருகில் தட்டில் நிறைய கத்தி வைத்திருந்தது எதற்காக என்றால், சில கத்திகளில் எலுமிச்சம் பழத்தை அறுத்தால் சாறு ரத்தம் போல் சிவப்பாக வரும். சில கத்திகளில் அறுத்தால் சாறு நிறம் மாறாமல் எலுமிச்சைச் சாறாகவே வரும்.
பூசாரி மகன் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற குப்பையில் இருந்ததே கசங்கிய செம்பருத்திப் பூ, இதழ்தான் சிவப்பு நிறத்தை தருகிறது. முன்கூட்டியே செம்பருத்திப் பூ இதழை சில கத்திகளின் இருபக்கமும் கசக்கித் தடவி, காய வைத்து வைத்திருப்பார் பொன்னம்பலம். காரியம் நடக்கும் என்று சொல்ல விரும்பினால் செம்பருத்திப் பூவின் சாறு தடவிய கத்தியை எடுப்பதும், காரியம் நடக்காது என்று சொல்ல விரும்பினால் பூவின் சாறு தடவாத கத்தியை எடுப்பதும் பூசாரி பொன்னம்பலத்தின் விருப்பம்தான். இதற்குத் தேவை கருப்புத் தகடில் செய்த சில கத்திகள் மட்டுமே. இதில் ‘கடவுள் செயல் எதுவும் கிடையாது. எல்லாம் பொன்னம்பல பூசாரி செயல்தான்….’ என்பதை எல்லோருக்கும் எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று சிந்திக்கத் தொடங்கினார் பாட்டி.
ஒரு மாலை நேரம் பாட்டி வீட்டுத் திண்ணையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அப்புவும், அவன் நண்பன் பாபுவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வீட்டின் உள்ளிருந்து வந்த பாட்டி “என்ன அப்பு! என்ன செய்தி? நீயும் உன் நண்பனும் பெரிய விவாதம் பண்ணிக்கிட்டிருக்கீங்க” என்றார்.
“வர்ற திங்கக்கிழமை எங்க பள்ளிகூடத்திலே அறிவியல் கண்காட்சி நடக்கப் போகுது. அதைப் பார்க்க ஊருல உள்ள எல்லாரும் வரலாம். அதுக்கு மாவட்ட ஆட்சியரும் வர்றாரு. அவரு முன்னாடி அறிவியல் சோதனை ஏதாவது செய்து காட்டலாம். அதுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு தருவாருன்னு எங்க டீச்சர் சொன்னாங்க. அதுக்கு என்ன செய்யலாம்னு பேசுறோம் பாட்டி” என்றான் அப்பு.
“அப்படியா! நான் ஒரு யோசனை சொல்றேன். செய்றீங்களா?” என்றார் பாட்டி.
“பாட்டி! வித்தியாசமா இருக்கணும்! அதே நேரம் எல்லாரும் வியப்பா பாக்கணும் அது மாதிரி ஏதாவது சொல்லுங்க பாட்டி” என்றான் பாபு.
“சொல்றேன்! என்று பூசாரி ஊரை ஏய்க்க கத்தியில் செம்பருத்தி பூச்சிறு தடவி ஏமாற்றும் வித்தையை சொல்லிக் கொடுத்து நான்கு கத்திகளையும் தயாரித்துத் தந்தார் பாட்டி.
அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழாம்வகுப்பு படிக்கும் அப்புவும், பாபுவும் அறிவியல் கண்காட்சியில் அதையே செய்து காட்டி மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டும் பரிசும் வாங்கிவிட்டனர்.
பள்ளி அறிவியல் கண்காட்சியைப் பார்த்த ஊர் பெற்றோர்கள் பலர் “இப்படித்தான் பொன்னம்பலம் நம்மளை ஏமாத்துரானா? என உணர்ந்து பேசிக்கொண்டே சென்றனர்.
ஊருக்குச் சொல்ல நினைத்த உண்மையைக் குழந்தைகள் செய்து காட்டியதில் பாட்டிக்கு பெரிய மகிழ்ச்சி.<
(பாட்டியின் லூட்டி தொடரும்)





