மரநிழலில் மகிழ்வோடு இருங்கள்! (நினைவில் நிறுத்துவோம்)

சிகரம்
மே மாதம் முழுவதும் பிஞ்சு களுக்கு விடுமுறைக் காலம். விடுமுறையென்றாலே விளையாட்டு, சுற்றித் திரிதல், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம். ஆனால், இவற்றைச் செய்ய முடியாமல் வெய்யிலின் கொடுமை! அதுவும் இந்த ஆண்டு கோடை வெய்யிலின் கொடுமை மிகக் கடுமை!
எனவே, பிஞ்சுகள் மகிழ்ந்து விளையாடத் திட்டமிடும் அதே நேரத்தில், உடல்நலத்திற்கும், உயிருக்கும் கேடு நேராத வகையில் திட்டமிட்டுக் கோடையை மகிழ்வாகக் கழிக்க வேண்டும்.
காலை 9 மணிக்கே வெய்யிலின் கொடுமை கடுமையாகிவிடுவதால், காலையில் வெளியில் சென்று விளையாடும் வாய்ப்பு மிகக் குறைவு. எனவே, காலை 8 மணிக்குள் வெளியில் சென்று விளையாடுவதை முடித்துக் கொண்டு காலை உணவுக்குப்பின், இரண்டு மணி நேரம் செய்தித்தாள் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றில் செலவிடுங்கள்!
அதன்பின், அருகிலுள்ள அடர்ந்த மரநிழல்களுக்குத் தோப்புகளுக்குச் சென்று விடுங்கள். மரநிழல்களில் மகிழ்வோடு விளையாடச் செல்லக்கூடிய பிஞ்சுகள், மரக்கிளைகளில் அதிக உயரத்தில் ஏறி விழுந்து அடிபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். முடிந்தவரை மரநிழலில் தரையில் விளையாடுவதை முழுமையாகச் செய்யுங்கள்!
மரத்து நிழலில் பல விளையாட்டுகளை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து விளையாடலாம். கபடி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டப் பாதையில் சுற்றி விளையாடுதல், செஸ் விளையாட்டு, பேட்மிண்டன், வாலிபால் போன்றவற்றை மரநிழல்களிலே ஆடுகளம் அமைத்து விளையாடலாம்.
இப்படி விளையாடும்போது பல நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும். முதலில் கடுமையான சுட்டெரிக்கும் வெய்யில் உங்களைப் பாதிக்காது. மரத்தின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். அவ்வப்போது தோப்பில் வீசும் காற்று உடலுக்கு உற்சாகம் அளிக்கும். தூய்மையான காற்று உங்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். நீண்டநேரம் விளையாடினாலும் களைப்புத் தெரியாது.
கிராமங்களில் மரங்கள், தோப்புகள் அதிக அளவில் இருப்பதால் அங்குள்ள பிஞ்சுகளுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கும். ஆனால் சென்னை போன்ற நகர்ப்பகுதிகளில் மரங்கள், தோப்புகள் குறைவு. எனவே, சென்னையில் உள்ள பூங்காக்களைப் பிஞ்சுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் உறவினர், குடும்ப நண்பர்கள் ஊர்களுக்குச் சென்று, இந்த மே மாதக் கோடையைக் கழித்தால் இந்த வாய்ப்பு நகர்ப்புறப் பிஞ்சுகளுக்கும் கிடைக்கும்.
கிராமங்களுக்குச் சென்று வருவது ஓர் இனிய அனுபவமாகவும், மனதுக்கு ஒரு மாற்றுச் சூழல் மகிழ்வையும் உருவாக்கும். நகரத்திலே அடைந்து கிடந்தவர்களுக்கு ஒரு விடுதலை உணர்வு உண்டாகும்.
மரங்கள் நிழலுக்கு மட்டுமல்ல, சுத்தமான காற்றுக்கும் உதவும். தூய்மையான ஆக்ஸிஜன் நிறைய கிடைக்கும்.
மரங்களில் ஆல மரம், மா மரம், புங்க மரம், பலா மரம் போன்றவை மிகவும் சிறந்தவை. மரங்கள் நிறைந்த தோப்புகளில் மகிழ்வாக விளையாடும்போது எளிதில் முறியும் மரங்களில் ஏறுவதோ அவற்றின் அடியில் விளையாடுவதோ கூடாது. முருங்கை, இலவு போன்ற மரங்கள் எளிதில் முறியும். இந்த மரங்களைத் தவிர்க்க வேண்டும்.
விளையாடுவதற்கு ஆலமரம் மிகவும் உகந்தது. அது பால் நிறைந்த மரம் என்பதால் அது எளிதில் முறியாது. ஆலமரத்துக் கிளைகள் நீண்டு பரவி விரிந்து இருப்பதோடு, தரையிலிருந்து தொடுந்தூரத்திலும் இருக்கும். எனவே, அக்கிளைகளில் அமர்ந்து மேலும், கீழும் கிளைகளை ஆட்டி மகிழ்தல் சுகமும், மகிழ்வும் தரும்.
ஆலமரத்து விழுதுகளை ஊஞ்சல் போல் வடிவமைத்து அதில் அமர்ந்து ஆடுதல் இனிய அனுபவம் தரும்; மனதிற்கு இதமாகவும், சுகமாகவும் இருக்கும். ஆனால் கயிறு ஊஞ்சல் போன்றவற்றில் விளையாடும்போது கழுத்தில் சுற்றி கழுத்தை இறுக்கி விடாமலும், அதிகம் ஆட்டி தலைக்குப்புறக் கவிழ்ந்து விடாமலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆலமரத்து அடியில் வேறு மரங்கள், செடிகள் இருக்காது. எனவே, பரந்த அதன் நிழல் பரப்பு கபடி, வாலிபால், டென்னில் போன்றவை விளையாட ஏற்றதாய் இருக்கும். கடுமையான வெய்யில் நேரத்திலும், வெய்யிலின் பாதிப்பின்றி குறைந்த நிழலில் நீங்கள் விளையாட அது உதவும்.
மரங்களில் பொந்துகள் இருந்தால் அதில் கை, கால்களை விடக்கூடாது. தேன் அடை இருந்தால் அதை தொடக்கூடாது. பொந்தில் பாம்புகள் இருக்க வாய்ப்புண்டு. தேனீக்கள் கொட்டுவதால் பாதிப்பு ஏற்படும்.
மதிய உணவை வீடுகளில் இருந்து எடுத்துச் சென்றால், அதை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழலாம். பிறகு அந்தத் தோப்பு நிழலிலே ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு விளையாடலாம். இப்படிச் செய்வதன் மூலம், கடுமையான கோடை வெய்யிலிலும் இதமாக விளையாடலாம். மகிழ்ந்து களிக்கலாம்.
வெய்யிலின் கொடுமை கடுமையாக இருப்பதால், தலையில் தொப்பி அணிவது கட்டாயம். தலையில் நேரடியாகச் சூரிய வெப்பம் தாக்கினால், உயிருக்கே ஆபத்து வரும். எனவே, கடுமையான வெய்யிலில் தலையில் தொப்பியில்லாமல் செல்லக்கூடாது.
வெய்யில் காலத்தில் அடிக்கடி தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் நீண்டநேரம் இருந்தால் அது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். எனவே, கட்டாயம் தண்ணீர்ப்பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது மண்பானையில் நீர் வைத்துக்கொள்ள வேண்டும்.
மாலை 5½ மணி வரை தோப்பில் விளையாடி விட்டு பிறகு வீட்டிற்கு வந்து குடும்பத்தாருடன் மகிழலாம். வாரம் ஒருமுறை குடும்பத்தாரும் தோப்புக்குச் சென்று அங்கே விளையாடி விட்டு, மரத்து நிழலிலே சமைத்து, தரையில் வாழை இலை போட்டு உணவு உண்டால் உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.
சிறுவர்கள் தோப்பில் கூட்டாஞ்சோறு ஆக்கி, அதை பகிர்ந்து உண்ணலாம். கூட்டாஞ்சோறு என்றால் என்ன? புரியவில்லையா? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? காத்திருங்கள்.<




