6000 வகை தட்டான்கள் (நூல் மதிப்புரை)

தென்றல் மணிமேகலை
ஹாய் பிஞ்சுகளா… எல்லாரும் நல்லா இருக்கீங்களா? எல்லாருக்கும் எக்ஸாம் முடிஞ்சிபோச்சு. லீவு விட்டாச்சு எல்லாரும் மகிழ்ச்சியா ஜாலியா இருக்கீங்கன்னு நம்புறேன்.
இப்ப நான் உங்ககிட்ட ஒரு சில கேள்விகள் கேட்க போறேன். இப்பதான் எக்ஸாம் முடிஞ்சுதுனு பார்த்தா, இந்த அத்தை டீச்சர் போல கேள்வி கேட்டு பள்ளியை நினைவுபடுத்துறாங்களேன்னு உங்க மைண்ட வாய்ஸ்ல கேட்கறது, எனக்கு நல்லா புரியுது.
சரி இப்ப நானே கேள்வி கேட்டு பதிலும் சொல்றேன். சரியா, இப்ப ஜாலியா?
மழை எல்லாருக்கும் பிடிக்கும். ஆமா தானே! அது வருவதற்கு முன்னாடி என்னென்ன அறிகுறிகள் தெரியும். வானம் இருட்டா இருக்கும். மேகக் கூட்டங்கள் நிறைய இருக்கும். கருமேகங்கள் உருவாகும். காற்று அடிக்கும். அருகில் எங்கேயாச்சும் மழை பெய்றா மண் வாசனை அடிக்கும். ஆமா தானே! இதையெல்லாம் தாண்டி ஓர் அறிகுறி – வானிலை அறிக்கை சொல்வாங்கன்னு நீங்க சொல்றது கேட்குது. ஆனா நான் சொல்லற மழை வருவதற்கு அறிகுறியா தும்பிகள் நிறைய பறக்கும். நீங்க கவனிச்சிருக்கீங்களா தெரில!
என்னடா இந்த அத்தை – அடிக்கிற வெயில் காலத்துல மழையைப் பற்றி பேசறாங்கனு யோசிக்கிறீங்களா? மழையைப் பற்றிப் பேச ஒரு பூச்சி வகையைச் சேர்ந்த தும்பியை பற்றித்தான் சொல்லப்போறேன். புரிஞ்சுதா? இந்தத் தும்பிக்கு இன்னொரு பெயர் இருக்கு. அது தட்டான் பூச்சி.
இந்தத் தட்டான்களின் தோற்றம் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி இருக்கும் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆச்சரியமா இருக்குல்ல. எனக்கும் தான்! அதோட தலை இருக்குல்ல வண்டிலல்லாம் லைட் எரியுமே! அதுபோல பக்கத்திற்கு ஒன்றாக, தலையோடு ஒட்டி இருக்கும். நல்லா பார்க்கக்கூடிய திறன் இதற்கு இருக்கு.
ஊசித்தட்டான் என்று ஒருவகை உள்ளது. அதுக்குக் கண்கள் சற்று அகன்று இருக்கும். தட்டானுக்கு 6 கால்கள். உணவைப் பிடிப்பதற்கும் அமர்வதற்கும் பயன்படுகின்றன.
உலக அளவில் பார்த்தால் சுமார் 6,000 வகையான தட்டான்கள் இருக்கு!. இந்தியாவுல மட்டும் 508 வகையான தட்டான்கள் காணப்படுது. இவற்றில் சுமார் 37 விழுக்காடு இந்தியாவில் மட்டுமே தென் பருவத்தில் சுமார் 76 வகையான தட்டான்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்விகள்ளாகும்!
மழை, குளிர் காலங்களில் அதிக அளவில் காணப்படும் தட்டான்கள் சராசரியாக 4 முதல் 6 அங்குல நீளம் கொண்டது. ஊசித் தட்டான் 3 அடி நீளமுள்ளது.
8,000 அடி உயரத்தில் தங்க நிறத் தட்டான்கள் வாழ்கின்றன.
தட்டான்கள் பறப்புத் தன்மை மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகம். ஆனால் தன்னுடைய உணவைப் பிடிக்கும்போது 50 கி.மீ. வேகம் பறக்கும். காற்றில் எளிதில் இயங்கக் கூடியது.
தும்பிகள் ஓர் இரைக் கொல்லிகளாகும். பறந்து கொண்டே இரையை வீழ்த்தும். காற்றில் ஏற்படும் அசைவுகளையும் மாற்றங்களையும் கொண்டே, பறக்கும் நிலையிலும் தனது உடல் ரோமங்களால் தட்டான்கள் துல்லியமாக அறிந்து கொள்ளும்.
தட்டானைப் பற்றி நான் இங்கு சொன்னவை கொஞ்சம் மட்டுமே. தட்டான் பெயர் எப்படி தும்பி என்று மாறியது. அதற்கான ஆதாரங்கள் என்னென்ன? ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது போன்ற பல்வேறு அரிய தகவல்கள் ஏ. சண்முகானந்தம் அவர்கள் எழுதியுள்ள “தட்டான்களைத் தவற விட்டக் காலம்” என்ற நூலில் உள்ளது.
விடுமுறையை நன்றாக கொண்டாடுங்கள் – பிற உயிர்களுக்குத் தீங்கு நேராவண்ணம்! ஏனென்றால் தட்டான் பற்றிச் சொல்லும் போது அதன் வாயில் கயிறு கட்டி விளையாடுவார்கள். ஓணானைக் கல்லால் அடிப்பார்கள். பல வேலைகளில் பறவைகளை வேட்டையாட நம் மனதில் தோன்றும்; பார்க்கவும் செய்திருப்போம். இப்போது விடுமுறை என்பதால் அவையெல்லாம் செய்யத் தோன்றும்! நாம் அனைவரும் பெரியார் பிஞ்சுகள். பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்க மாட்டோம். ஆகவே இந்த விடுமுறையில் இதுபோல் அரிய தகவல்கள் அடங்கிய புத்தகத்தைப் படித்து எழுதி அனுப்புங்கள்!<

