இந்திய பிட்டா (PITTA BRACHYURA) (பறவைகள் அறிவோம் – 27)

பி.இளங்கோ
இயற்கையில் – பூக்கள் மட்டுமல்லாது பறவையினங்களும் வண்ணங்களால் நிறைந்துள்ளன. இவ்வண்ணங்கள் பெரும்பாலும் அப்பறவைகள் வாழும் நிலத்திற்கும், அங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அமைகின்றன. அவற்றின் நிறமே அப்பறவைகளுக்குத் தற்காப்பு அளிப்பதாக உள்ளது. உதாரணமாக காடை, கவுதாரி போன்ற பறவைகளின் நிறம் அவை வாழ்கின்ற வயல் மண்ணின் நிறம்போல பழுப்பாகவும், ஆங்காங்கே கரும்புள்ளிகள் உடையதாகவும் இருப்பதால் அப்பறவைகளை எளிதில் காண முடியாது. பசுமையான தழைகள் அடர்ந்த இடங்களில் வாழும் பறவைகளின் உடல் கருநீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டிருப்பதால் பகைவர்களின் கண்களுக்கு எளிதில் தெரியாதபடி நீரும், நிலமும், வானும் வண்ணமும் பாதுகாக்கின்றன. அந்த வகையில் வானவில்லின் 7 நிறங்களுடன் கருப்பு, வெள்ளை நிறங்களையும் சேர்த்து 9 வகையான வண்ணங்களைத் தன்னகத்தே கொண்ட மிக அழகான பறவையினம் இந்திய பிட்டா (PITTA BRACHYURA).
வண்ணங்களையெல்லாம் வாசனையாக்கி ஒளி வீசக் கூடியதாக இருந்தபோதிலும் மிகவும் கூச்சசுபாவம் கொண்ட பறவை. இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு புதர்காடுகளிலும், அடர்ந்த பசுமையான காடுகளிலும் மற்ற பறவைகள் போல உயர, உயரப் பறக்காமல் இலைகள் நிறைந்த கிளைகளுக்கிடையே பறந்து சென்று மரங்களின் அடிப்பகுதியில் தரையில் வளர்ந்து நிற்கும் புல்வெளிகள், செடிகொடிகள் மற்றும் சருகுகளைக் கிளறி அதில் காணப்படும் முதுகெலும்பில்லாத புழு, பூச்சிகளையும், சிலந்திகளையும் விரும்பி உண்ணும். ஓரே இடத்தில் தங்கினால் கால்களுக்குக் கூட வேர்கள் முளைத்து விடும் என்று இப்பறவைகள் குளிர்காலத்தில் தீபகற்ப இந்தியாவின் செந்தமிழ் நாட்டுச் சோலையிலே சிந்துபாடித் திரிவதோடு இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து வலசை செல்கின்றன. பிட்டா பறவையின் வால் பகுதி பூமி தொடாத பிள்ளையின் பாத நிறத்திலிருக்கும் கரிசல் நில மண்ணில் தோன்றும் கருமை நிறத்திலான கடிமனான அலகும், அடர்த்தியான கருப்புப் பட்டையின் மத்தியில் பளிச்சிடும் வட்ட வடிவமான கண்களும், பசும்பாலின் வெண்மை நிறத் தொண்டையும், இறக்கை மற்றும் முதுகுப் பகுதியில் இளமையான இலையின் பச்சை நிறங்களும், அந்தி வானம் அரைத்த மஞ்சளோடு சேர்ந்த பழுப்பு வண்ணம் கலந்த மார்பும் பிட்டம் முழுவதும் புத்தம் புதியதாய் பூத்த ரத்தரோஜாவின் சிவப்பு வண்ணத்திலும் ஜொலித்துக் காண்போர் கண்களைக் கவரும் அழகைக் கொண்டிருப்பதால் இப்பறவைக்கு பஞ்சவர்ணப் பறவை என்றும் அதிகாலையிலும் அந்தி மாலையிலும் இரண்டு முறை “வீத்–டியூ …. வீத்–டியூ” என்றும் சில நேரங்களில் ஹ்– விட்– ப்யூ … ஹ் – விட் – ப்யூ என்று தனித்துவமான குரலை எழுப்புவதால், இப்பறவையை ஆறுமணிப் பறவை என்றும் அழைப்பர். முதுவேனிற் காலம் முதல் கார்காலம் வரையிலான காலம் இனம்பெருக்கக் காலமாகும். வாடைக் காற்றுப்பட்டு வயதிற்கு வந்த ஆண் பறவை, தன் இணைப்பறவையைக் கவர்ந்திழுக்க இனிமையான குரலில் “வீத்–டியூ… வீத்–டியூ” என பாடி அழைக்கும். அப்படிக் கூவும்போது அதன் தலையைப் பின்னால் இழுத்து அலகை வானத்தை நோக்கியும் அதே சமயம் தன்னுடைய வண்ணமயமான வால்பகுதியை மேலும் கீழும் அசைத்தும் பெண் பறவையின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்கும். இச்செய்கையில் மயங்கி இன்புறும் பெண்பறவை, கண்களை மெல்லத் திறந்து மூடி சம்மதம் தெரிவிக்கும். சூழலை அறிந்து இரண்டும் இணையும். கருவுற்ற பெண் பறவை தாழ்வான மரக்கிளைகளில் உலர்ந்த இலை, நாணல்கள் மற்றும் புற்களைக் கொண்டு வட்டவடிவில் நேர்த்தியான கூட்டைக் கட்டி அதில் 4 முதல் 5 முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கின்றது. சுமார் மூன்று மாத காலங்கள் குறு குறுவென இருவிழிப் பார்வையினால் குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொஞ்சி தாய்ப்பறவை உணவுட்டி மகிழ்கிறது.
விண்ணை விஞ்சும் மலைகளையும், கரையைக் கொஞ்சும் அலைகளையும், காற்றை வருடும் மரங்களையும் மணம் வீசும் மலர்களையும் காணும்போதே நம்மையும் அறியாமல் இதயத்திற்குள் இறக்கைகள் அடித்துப் பறந்து செல்லும் பறவைகளையும் உணரமுடியும். பறவைகள் உலகத்தின் இனிமையை இயற்கையின் அருமையை உணர்த்தும் வண்ணமயமான உயிர் ஓவியங்கள். ஆனால் தீட்டித் தீட்டி வண்ணங்களில் ஊறிய ஓவியம் போல நமத்து போகிறது அதன் வாழ்க்கை. நம் அக்கரையின்மையின் காரணமாக எத்தனையோ அபூர்வமான பறவையினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடை பெற்று விட்டன. அந்த வரிசையில் இந்திய பிட்டா பறவையும் அழிவின் விழிம்பில் இருக்கிறது. அருகிக் கொண்டே இருக்கும் உயிரினங்களை, பெருகிக் கொண்டேயிருக்கும் மக்கள் தொகை தொலைத்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மரம் வெட்டப்படும் போது அதை நம்பி வாழும் ஆயிர்க்கணக்கான உயினங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும்.
ஒழுக்கம் என்பது மனிதர்களோடு மட்டும் நின்று விடுவதில்லை. அது இயற்கையைச் சார்ந்த சமூக அக்கறையையும் உள்ளடக்கியது என்கிற எண்ணமும் நமக்கு வரவேண்டும். செடிகளில் சிரிக்கின்ற மலர்களைக் கிள்ளுவதும், பஞ்சணையாய் பரந்து விரிந்து காணப்படும் பசும்புல் தரையில் பாதம் பதித்து நடப்பதும் தவறென்று நாம் உணரும் போதுதான் இயற்கையின் இனிமை நீடிக்கமுடியும். ஈரத் துணியாய் இதயத்தைப் பிழியும் சோகத்திலும் கூட இப்பூமிப் பந்து முழுவதும் பசுமை பரவிடப் கடமையாற்றும் பறவைகள், இயற்கையின் வண்ணமயமான படைப்புகள் என்பதை உணர்ந்து பறவைகளை பாதுகாப்போம்.
“மனிதர்கள் காட்டை அழித்து விலைநிலமாக்குகின்றனர் பறவைகள் காட்டை அறிந்து விளைநிலமாக்குகின்றன.”<

