வியக்க வைத்த மக்கள் பேரணி! (நடந்த கதை)

விஷ்ணுபுரம் சரவணன்

அம்மா மகாராஜா இறந்துட்டாருன்னு சொன்னீங்க இல்ல”
“ஆமா செழியா”
“அதுக்கப்பறம் அந்தப் பதவிக்கு வேற ஆள் வந்தாங்களா?”
“ஆமா. மகாராஜா இறந்தபிறகு அதற்கடுத்து பொறுப்புக்கு வர வேண்டிய ஆணுக்கு அப்போது 18 வயது ஆகல. அதனால பொறுப்பு அரசியாக, மூத்த ராணியாக இருந்த சேது லஷ்மி பாய் என்பவர் பதவிக்கு வந்தார். அன்றைக்கு சத்தியாகிரகப் போராட்டம் நடக்க வில்லை”
“இந்த அரசி நல்லவங்களா?”
“இதற்கு முன்னாடி இருந்த ராஜாவோடு ஒப்பிட்டா நல்லவங்கனு சொல்லலாம்தான். முற்போக்கான பல விஷயங்களை முன்னெடுத்தாங்க. இவங்களப் பற்றி மனு பிள்ளை என்பவர் Ivory throne எனும் புத்தகம் எழுதியிருக்கிறார்”
“ஓ!”
“ஆமா, காந்திகூட அவரைப் பற்றி நல்ல விதமாகவே நினைத்தார். சிறையில இருந்த போராட்டக் கைதிகளை விடுதலை செய்த அரசி, விரைவில் போராட்டக்காரர்களோட நியாயத்தைப் புரிஞ்சுப்பாங்க’ என்பதுபோல எழுதியிருந்தாரு காந்தி”
“ம்ம்… இவங்க நல்லவங்கன்னா, போராட்டத்தை உடனே முடிச்சி வெச்சிட்டாங்களா?”
“அவங்களே நினைச்சாலும் கீழே இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரங்கள் எளிதாக அது நடக்க விட்டுடுவாங்களா என்ன?”
“அப்பறம் என்னாச்சு?”
“தொடர்ச்சியா வைக்கத்தைச் சுற்றியிருக்கிற ஊர்கள்ல இந்தப் போராட்டத்தோட நியாயத்தை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டுற கூட்டங்கள் நடந்துட்டே இருந்துச்சு”
“பெரியார் தாத்தாவும் போனாரா?”
“ஆமா, செப்டம்பர் 4 ஆம் தேதி நெடுங்கண்டா என்ற ஊருல நடந்த கூட்டத்துல பி.என்.மாதவன் போன்ற தலைவர்களோடு பெரியாரும் பேசினார். அதற்கப்பறம் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தபிறகு நாகர்கோவில்ல நடந்த பொதுக்கூட்டத்துலேயும் உணர்ச்சிபூர்வமாகப் பேசினாரு”
“ம்ம்”
“மீண்டும் உடனடியாக வைக்கத்துக்குப் பெரியார் போக முடியாத சூழல். போராட்டக் குழு பல்வேறு முறைகள்ல தீவிரமாகச் செயல்படத் தொடங்குது. ஒருபக்கம், திருவாங்கூர் சட்டசபையில நியமன உறுப்பினராக இருந்த ஈழவத்தலைவர் குமரன், வைக்கத்தில் உள்ள கோவில் தெருக்கள்ல அனைவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரராரு”
“அப்பறம்”
“போராட்டத் தலைவர்கள் காந்தியடிகளை நேரில போய் பார்த்து நிலைமையைச் சொல்றாங்க. காந்தி அப்போ வேறொரு பிரச்சனையை ஒட்டி உண்ணாவிரதம் இருந்தாரு. உண்ணாவிரதம் முடிந்ததும் வைக்கம் போராட்டத்துல தீவிர கவனம் செலுத்தறேன்னு வாக்குறுதி கொடுத்தாரு.
மேலும், அவர் பண்டித மதன்மோகன் மாளவியாவைச் சந்திக்கச் சொல்றாரு.”
“ம்ம்”
“வைக்கத்துலேயும் அதைச் சுற்றியுள்ள இடங்களேயும் ஜாதி இந்துக்கள் பலரும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு வந்துட்டாங்க. இதை அரசிக்குத் தெரியப்படுத்த பல இடங்கள்ல இருந்து புறப்படுற ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கிற பேரணியை நடத்த முடிவு செய்தாங்க.”
“செம அய்டியா”
“ஆமா. பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில ஆர்வத்தோட கலந்துக்கிட்டாங்க. வர்ற வழியெல்லாம் பொதுமக்கள் மகிழ்ச்சியோட வரவேற்றாங்க! உணவு கொடுத்தாங்க. செலவுக்கு நிதியும் கொடுத்தாங்க. முஸ்லீம்களும் இந்தப் பேரணியைப் பாராட்டி உதவிகளைச் செய்தாங்க”
“அரசியைச் சந்திச்சாங்களா?”
“நவம்பர் மாசம் 12 ஆம் தேதி திருவனந்தபுரத்தை
அந்தப் பேரணி சென்று சேர்ந்துச்சு. 2 ஆயிரத்து 500 பேர் கையெழுத்துப் போட்ட கடிதம் அவங்க கையில இருந்துச்சு”
“எதற்கான கையெழுத்து அது?”
“உயர்சாதியினரான நாங்கள் வைக்கம் கோவில் தெருக்களை அனைவருக்கும் திறந்துவிட ஆதரவு தெரிவிக்கிறோம் என்பதைச் சொல்ற கையெழுத்துதான் அது”
“சூப்பர்”
“அரசியைச் சந்திக்க 12 பேர் கொண்ட குழுவுக்கு அனுமதி கொடுத்தாங்க. அவங்க அரசியைப் பார்த்து இதுவரை நடந்தவற்றை எல்லாம் சொல்லி அந்தக் கடிதத்தையும் கொடுத்தாங்க”
“சிறப்பு. அதுக்கு அரசி என்ன சொன்னாங்க?”
“பல ஆண்டுளாக நடைமுறையில இருக்கிற பழக்கம். போராட்டமும் பல மாசங்களா நடக்குது. அதனால உடனே ஒரு பதில் சொல்ல முடியாது. சட்டசபையில கூட இது பற்றி ஒரு தீர்மானம் வந்திருக்குனு சொன்னாங்களாம்”
“குமரன் என்பவர் கொடுத்த தீர்மானம்தானே அது!”
“ஆமா”
“சரிம்மா, முடிவாக அரசி என்னதான் சொன்னாங்க?”
“அடுத்தமுறை சட்டசபை கூடும்போது அந்த தீர்மானம் பற்றி விசாரிப்பாங்க. முறைப்படி இதுக்கான தீர்வு கிடைக்கும்னு பாசிட்டிவாகவே சொல்லி அனுப்பினாங்க”
“ம்ம்ம். நான்கூட அரசியைப் பார்த்தவுடனே, அவங்க இதெல்லாம் பார்த்துட்டு, உடனே தெருக்கள்ல நடக்க அனுமதி கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சிட்டேன்”
“அப்படி நடந்திருந்தாக்கூட நல்லாதான் இருக்கும் செழியா. ஆனா, பல முட்டுக்கட்டை இருக்கும் இல்லையா.. அதெல்லாம் சரி பண்ணிட்டுத்தானே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்?”
“ஆமா.. ஆமா. அப்பறம் என்னாச்சு?”
“அரசியைப் பார்த்துட்டு வந்ததுமே அன்னிக்கு மாலையிலேயே திருவனந்தபுரத்துல மாபெரும் பொதுக்கூட்டம் நடந்துச்சு”
“மாபெரும்‘னா எவ்வளவு பேர் கலந்துக்கிட்டாங்க”
“அய்ந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதுல கலந்துகிட்டாங்க”
“அப்பன்னா நிஜமாவே மாபெரும் கூட்டம்தான்” எனச் சிரித்தான் செழியன்.
“ம்ம்ம். நான் சொல்றதையே செக் பண்றீயா?”
“யார் சொன்னாலும் அதை ஆராய்ந்துதான் ஏத்துக்கனும்னு நீங்கதானே சொல்லியிருக்கீங்க”
“சரிதான். இந்தப் பழக்கம் பெரியார் சொல்லித்தான் எனக்கு வந்துச்சு”
“பெரியார் தாத்தா அப்பெல்லாம் என்ன செய்தார்?”
“தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி வேலைகளயும் அவர் செய்ய வேண்டியிருந்தால அதுக்கு நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவர் மனசுல வைக்கம் எப்பவுமே இருந்துட்டே இருந்துச்சு”
“எப்படி”
“அரசியைப் போராட்டக் குழு சந்திச்சு மூணு நாள் கழிச்சி திருவண்ணாமலையில காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்துச்சு”
“ம்ம்ம்”
“அதுல ஆறு தீர்மானங்கள் இயற்றினாங்க. அதுல ஒன்னு, வைக்கத்துல நடக்கிற தீண்டமைக்கு எதிரான அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் அந்தப் போராட்டத்துல கலந்துகொண்டிருக்கிற தொண்டர்களைப் பாராட்டுறதாகவும் இருந்துச்சு”
“ம்ம்… மார்ச் மாசம் போராட்டம் தொடங்கினதா சொன்னீங்க இல்லையா?”
“ஆமா செழியா”
“நவம்பர் மாசம் வரைக்கும் சொல்லிட்டு வந்துட்டீங்க. அப்படின்னா…” எனச் சொல்லிவிட்டு விரல்களை மடக்கி எத்தனை மாதம் என எண்ணினான் செழியன்.
”எட்டு மாசத்துக்கு மேலாகிட்டு இல்லையா அம்மா?”
“ஆமா, இந்தியாவில நடந்த நீண்ட போராட்டங்கள்ல இதுவும் ஒன்னு.”
“சட்டசபையில தீர்மானம் கொண்டு வந்ததா அரசி சொன்னாங்களே அது என்னாச்சும்மா?”
“அப்போ என்ன நடந்துச்சுன்னா…” <
(தொடரும்)




